அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

🕔 August 1, 2017

நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மியன்மாரிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் இரண்டு நாடுகளுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

தாய்லாந்திருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியும், 25 ஆயிரம் மெற்றிக் தொன் வெள்ளைப் பச்சை அரிசியும் இறக்குமதி செய்யப்படவுள்ள அதேவேளை, மியன்மாரிலிருந்து 30 ஆயிரம் மெற்றிக் தொன் வெள்ளைப் பச்சை அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், “பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு தமது நாட்டு அரசு தயாராக இருப்பதாக இலங்கைக்கான பாகிஸ்தான் பதில் தூதுவர் தெரிவித்தார். ஆயினும், தற்போது 01 மெற்றிக் தொன் அரிசியின் விலை 480 டொலர் வரை அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதமளவில்  01 மெற்றிக் தொன் அரிசியின் விலை 410 டொலராக குறைவடையும் சாத்தியம் உள்ளது. அதனால், இலங்கை அதனைப்பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும், இலங்கைக்கான பாகிஸ்தான் பதில் தூதுவர் நேற்று தெரிவித்தார்” என அமைச்சர் குறிப்பிட்டார்.

இது மட்டுமன்றி இந்தியாவிலிருந்தும் 01 லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்காக அந்த நாட்டுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், உள்நாட்டிலும் நெற்சந்தைப்படுத்தும் திணைக்களத்திடமிருந்து 51 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கான பணிகளை, தனது அமைச்சின் கீழான கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் ஆரம்பித்துள்ளது என்றும், கொள்வனவு செய்யப்பட்ட மேற்குறிப்பிட்ட நெல், குற்றப்பட்ட பின்னர் 32000 மெற்றிக் தொன் அரிசி வரை அது தேறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்