பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், நள்ளிரவிலிருந்து வேலை நிறுத்தம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம், இன்று திங்கட்கிழமை நள்ளிரவிலிருந்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அச்சங்கம் ஈடுபடவுள்ளது.
திருகோணமலையிலுள்ள எரிபொருள் களஞ்சியத்தை இந்தியாவுக்கும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலுள்ள எரிபொருள் களஞ்சியத்தை சீனாவுக்கும் வழங்கும் திட்டத்தை ரத்துச் செய்யுமாறு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்படி தொழிற்சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளில், இது முதன்மையானதாகும்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக, நாளைய தினம், நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் சார்பில் இவ்வாறான வேலை நிறுத்தங்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போது, சில எரிபொருள் விற்பனையாளர்கள், எரிபொருட்களை கறுப்புச் சந்தையில் விற்பனை செய்ததாக புகார்கள் எழுத்தமையும் நினைவுகொள்ளத்தக்கது.