சிங்கள அரசியலை மகாநாயக்கர்கள் கூட்டிணைக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டியுள்ளது: பசீர் சேகுதாவூத்

🕔 July 16, 2017

– முன்சிப் அஹமட் –

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் பௌத்த மகாநாயக்கர்கள் மத்தியஸ்தம் வகித்து, இருவருக்குமிடையில் உடன்பாடொன்றினை ஏற்படுத்தலாம் என்றும், இதன் மூலம் சிங்கள அரசியல் கூட்டிணைவதற்கான வாய்ப்பு உள்ளதென்றும் மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

எனவே, சின்னாபின்னமாகிக் கிடக்கும் முஸ்லிம் அரசியலும் கூட்டிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும், அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் விபரிக்கையில்;

“பௌத்த மகாநாயக்கர்களின் அரசியல் இடையீடுகளை நோக்குகின்ற போது, அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் – ரகசியமாக மத்தியஸ்தம் வகித்து, பரஸ்பரம் ஒருவரால் மற்றவருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் உத்தரவாதங்கள் வழங்கி, இருவரையும் உடன்பாட்டுக்கு அழைத்து வர முயற்சிக்கலாம் என்றொரு சந்தேகம் எழுகிறது.

அந்த வகையில், இவர்கள் இருவரும் – மகாநாயக்கர்களின் சொல்லைத் தட்டுவார்களா, உறவுப் பாலத்தைக் கட்டுவார்களா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

இப்படியொரு அரசியல் சூழல் சாத்தியமானால், சர்வதேச சமூகம் என்ன செய்யும் என்பதை, ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்சனின் கூற்றும், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பிந்திய அறிக்கையும் தெளிவுபடுத்துவது போல் தெரிகிறது.

பென் எமர்சன் கூற்றை வைத்துப் பார்க்கும் போது; யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தால் கையாளப்பட்டு வந்த, இலங்கையின் போர் குற்றம் தொடர்பான விடயங்கள்,  ஐ.நா.வின் பாதுகாப்பு சபைக்குப் பாரப்படுத்தப்படும் நிலை தோன்றலாம் என எண்ண வேண்டியுள்ளது.

ஆக, சிங்கள அரசியல் கூட்டிணையும் வாய்ப்பு ஏற்படுகிறது. தமிழ் அரசியல் ஏற்கனவே கூட்டிணைந்துள்ளது. சின்னாபின்னமாகிக் கிடக்கும் முஸ்லிம் அரசியல் கூட்டிணைய வேண்டிய அவசியமுள்ளது” என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு தேவை என, அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், பசீர் சேகுதாவூத் கூறியுள்ள இந்த விடயம் கவனத்துக்குரியதாகும்.

வீடியோ

Comments