நாட்டில் நடப்பது சிறிய சம்பவங்கள், படையினரை பயன்படுத்த அவசியமில்லை: பாதுகாப்பு செயலாளர்

🕔 June 13, 2017

டையினரை பயன்படுத்தும் அளவிற்கு நாட்டில் பிரச்சினைகள் ஏதும் இல்லை என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எனினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் அனைத்து விடயங்களிலும், பொலிஸாருக்கு முப்படையினர் ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்;

“நாட்டின் சில பகுதிகளில் சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவங்கள் தொடர்பிலான விசரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், முஸ்லிம் கடையொன்றுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவித்தும், விகாரையின் பிக்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறி செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், அவை அந்தளவிற்கு பயங்கரமான விடயமல்ல” என்றார்.

எவ்வாறாயினும், இவ்வாறான செய்திகளை ஊடகங்கள் வெளியிடாமல் இருப்பது நல்லது எனவும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம்களின் கடைகளுக்கு தொடர்ச்சியாக தீ வைக்கப்பட்டு வருகின்றமையினை ஜனாதிபதியின் கவனத்துக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில வாரங்களுக்கு முன்னர் கொண்டு சென்றபோது, பொலிஸாருக்கு முடியாது விட்டால், ராணுவத்தினரைக் கொண்டு அந்த விடயத்தைக் கட்டுப்படுத்தப் போவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

Comments