பழைய ஆவணம் என்பதால் தேடியெடுக்க முடியாது: அஷ்ரப்பின் மரணம் தொடர்பான பசீரின் கோரிக்கை நிராகரிப்பு

🕔 May 6, 2017

– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் தொடர்பாக விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையினை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்குமாறு, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் முன்வைத்திருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அஷ்ரப்பின் மரணம் தொடர்பான ஆணைக்குழு அறிக்கையானது, 12 வருடங்களுக்கும் மேற்பட்டது என்பதனால், அதனை தேட முடியாது என்றும், அதன் காரணமாக குறித்த கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும் பசீர் சேகுதாவூத்துக்கு ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோன் – கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மேற்படி கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, இரண்டு மாதங்களுக்குள், தகவல் அறியும் ஆணைக் குழுவில் முறையிடலாம் என்றும், பசீருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தகவல் அறியும் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாக, மு.கா.வின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

அங்கும் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், “அஷ்ரப்பின் மரணம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, நீதி மன்றத்தை நாடுவேன்” என்றும் பசீர் கூறியுள்ளார்.

நூற்றாண்டு காலப் பழமையான ஆவணங்கள் கூட தேசிய சுவடிக் கூட்டத்தில் இன்னும் பாதுகாக்கப்படுகின்றபோது, வெறும் 12 வருடங்களேயான அஷ்ரப்பின் மரணம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையை, ஏன் தேடித் தர முடியாது என்றும் பசீர் சேகுதாவூத் கேள்வியெழுப்பியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்