பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனையை தடைசெய்யும் சட்டம் வருகிறது: சுகாதார அமைச்சர்

🕔 April 19, 2017

பாடசாலைகளுக்கு அருகாமையில் சிகரட் விற்பனை செய்வதைத் தடுக்கும் சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளிலிருந்து 500 மீற்றர் தூரத்துக்குள் சிகரட் விற்பனையினை, இந்தச் சட்டத்தின் மூலம் தடுக்கவுள்ளதாக அமைச்சர் விபரித்துள்ளார்.

ஏற்கனவே, உதிரிகளாக சிகரட்டுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமையினை அடுத்து, புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை, சிகரட் பெட்டியின் 80 வீதமான பகுதியில் படங்களுடன் அச்சிட வேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சிகரட்டுகளின் விலைகளையும் அரசாங்கம் அதிகரித்திருந்தது.

இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக, புகை பிடிப்போரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் புகைத்தல் மற்றும் மதுசாரம் அருந்துவதன் காரணமாக வருடந்தோறும் 35 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர் என்று அண்மையில், அமைச்சர் ராஜித தெரிவித்திருந்தமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

Comments