ஒலுவில் மீன்பிடி துறைமுகம் தொடர்பில் உதுமாலெப்பை பிரேரணை; கிழக்கு மாகாணசபை அங்கீகாரம்

🕔 March 22, 2017
– எம்.ஜே.எம். சஜீத் –

லுவில் மீன் பிடி துறைமுக படகுப் பாதையை மூடியுள்ள மண்ணை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென, கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் எம்.எஸ்.எஸ். உதுமாலெப்பை நேற்று செவ்வாய்கிழமை சமை அமர்வின் போது முன்வைத்த வேண்டுகோள், ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் 74ஆவது சபை அமர்வு தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், கலந்து கொண்டு பிரேரணையொன்றினை முன்வைத்து உரையாற்றியபோதே, இந்த வேண்டுகோளினை முன்வைத்தார்.

இதேவேளை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை நிருவகிக்கும் பொறுப்பினை மத்திய அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சிடம் வழங்குவதற்காக ஜனாதிபதி, பிரதம மந்திரி, மத்திய அரசாங்க மீன்பிடித்துறை அமைச்சர் மற்றும் மத்திய அரசாங்க துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ஆகியோர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் அங்கு கூறினார்.

எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் படகுப் பாதை கடல் மண்ணினால் மூடப்பட்டுள்ளதனால், அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க முடியாது பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதனால், அவர்கள் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.

ஒலுவில் மீன்பிடித்துறைமுக படகுப் பாதை கடல் மண்ணினால் மூடப்பட்டுள்ளதனால் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களின் தொழில் பாதிப்படைந்தள்ளது. இந்நிலையில் இம்மண்ணினை அகற்றக் கோரி மீனவர்கள் பல போராட்டங்களை நடாத்தினர். இதன் விளைவாக அண்மையில் மத்திய அரசாங்க மீன்பிடி அமைச்சினால் மண் அகழ்வு இயந்திரம் கொண்டுவரப்பட்டு இம்மண் அகற்றும் பணி நடைபெற்று வந்தது.

தற்போது இம்மண் அகற்றும் பணி இடை நிறுத்தப்பட்டு அந்த இயந்திரம் ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் ஒலுவில் மீன்பிடித் துறைமுக படகுப் பாதை நுழைவாயிலில் நிரம்பியுள்ள கடல் மண் அகழ்வுப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் மேற்கொண்ட பின்னர், ஒலுவில் மீன்பிடி துறைமுகத்துக்குள் படகுகள் திரும்புவதற்கும், துறைமுகத்தில் தரித்து வைக்கப்பட்ட படகுகள் கடலுக்குள் செல்வதற்குமான போக்குவரத்து பாதையை கடல் மண் மூடியுள்ளது. இதனால், அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க முடியாத நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதனால் மீனவர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தங்களின் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். இம் மீனவர்களின் வருமானத்தில் தங்கி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், கடற்றொழில் நடவடிக்கையானது பாரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது. அத்துடன் அந்நிய நாட்டுச் செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் ஒரு துறையாகவும் காணப்படுகின்றது. அதனால்தான் இலங்கையில் மீன்பிடித் தொழிலை நவீனமாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தின் பிரதான கடற்றொழில் இறங்கு  துறையாக ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை எடுத்துக் கொள்ளலாம். இத்துறைமுகத்தின் மூலம் எமது  அம்பாறை மாவட்ட மீனவர்கள் உட்பட காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, புத்தளம், நீர்கொழும்பு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த  நாட்கலப் படகுகள் தரித்து நின்று தங்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, ஐஸ், மருந்து வகைகள் போன்ற உதவிகளைப் பெற்றுக் கொள்வதுடன், அவர்களின் மீன்களையும் சந்தைப்படுத்தக்கூடிய வாய்ப்புகளும் ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினால் கிடைக்கப் பெறுகிறது.

கடந்த 14.03.2017ஆம் திகதியன்று அம்பாரை மாவட்ட மீனவர்கள் துறைமுகத்தின் முன்னுள்ள அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியினை மறித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலமையை இக்கவனயீர்ப்பு போராட்டம் ஊடாக வெளிப்படுத்தினர்.
ஒலுவில் துறைமுகமானது இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமானது. மண் அகழும் இயந்திரம் மீன்பிடி அமைச்சுக்கு சொந்தமாக உள்ளது. ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை மீன்பிடி அமைச்சுக்கு இலங்கை துறைமுக அதிகார சபை உத்தியோகபூர்வமாக பாரம் கொடுத்து சிறந்த முறையில் நிருவகிக்ககூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம், மகாபொல பயிற்சி நிலையம் அமைப்பதற்காக ஒலுவில் பிரதேச மக்களின் பூர்வீக காணிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டன. ஒலுவில் மக்களின் பூர்வீக காணிகளில் மீதியாக உள்ள காணிகளையும் கடல் அரித்து கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக எவ்விதமான நிரந்தர தீர்வுகளும் இதுவரை கிடைக்கவில்லை. ஒலுவில் மக்கள் தங்களுக்கான பூர்வீக இடங்களையும், மீனவர்கள் மீன்பிடிக்கும் கடல் வளங்களையும் இழந்து வருகின்றனர்.

இறைவனுக்கு அடுத்தது இந்த பிரச்சினையை நகர அபிவிருத்தி அமைச்சர் றஊப் ஹக்கீம்தான் தீர்த்து தருவார் என ஒலுவில் உலமாக்களே நம்பிக்கை தெரிவித்த போதும், இதுவரை ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு நிறுத்தப்படவில்லை.  இக்கடலரிப்பு தற்போது நிந்தவூர், காரைதீவு மற்றும் திருக்கோவில் போன்ற பிரதேசங்களுக்கும் பரவி வருகின்ற நிலமை தொடர்கின்றது.

ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வரட்சி காரணமாக நமது மாகாண விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர் இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தின் மற்றுமொறு முக்கிய துறையான ஆழ்கடல் மீன்பிடித்துறையில் மீனவ சமூகம் பாதிப்படைந்து மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குள் செல்ல முடியாத நிலமை உருவாகியுள்ளது. இதனால் கிழக்கு மாகாணத்தின் வறுமை நிலைமை அதிகரிக்கக் கூடிய அபாய நிலமை ஏற்பட்டுள்ளது. நமது நாட்டில் 40 வருடங்களுக்கு பின் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியின் காரணமாக 1.2 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

எனவே, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இம் மீனவர்களின் நலன் கருதி,  ஒலுவில் மீன்பிடித் துறைமுக நுழைவாயிலில் நிரம்பி வழியும் கடல் மண் அகற்றும் பணியினை அவசரமாக ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை நிருவகிக்கும் பொறுப்பினை மத்திய மீன்பிடி அமைச்சிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் அவசரமாக மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

இது தொடர்பான விவாதத்தின் பினனர்,  ஒலுவில் மீன்பிடித் துறைமுக படகுப் பாதை நுழைவாயிலில் நிரம்பி வழியும் கடல் மண் அகற்றும் பணியினை அவசரமாக ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன், ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை நிருவகிக்கும் பொறுப்பினை மத்திய மீன்பிடி அமைச்சிடம் வழங்குவதற்காக ஜனாதிபதி, பிரதம மந்திரி, மத்திய அரசாங்க மீன்பிடித்துறை அமைச்சர், மத்திய அரசாங்க துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ஆகியோர்களிடம் வேண்டுகோள்விடுப்பதாக கிழக்கு மாகாண சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்