புலிகளை தோற்கடிக்க உதவிய நாடுகள் எவை; நீண்ட கால கேள்விக்கு, பதில் கொடுத்தார் கோட்டா

🕔 February 25, 2017

விடுதலைப் புலிகளை மஹிந்த அரசாங்கம் தோற்கடிப்பதற்கு சீனா, பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் இஸ்ரேஸ் ஆகிய நாடுகள் பெரும்பான்மையான ஆயுதங்களை வழங்கியதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விடுதலப் புலிகளை தோற்கடிக்கும் யுத்தத்தின் போது, இலங்கை ராணுவத்துக்கு இந்தியா கடுமையான பயிற்சிகளை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

புலிகளுடனான யுத்தத்தின் போது, இலங்கை ராணுவம் பயன்படுத்திய அதிநவீன ஆயுதங்கள், எங்கிருந்து பெறப்பட்டன என்கிற கேள்விக்கு, இதுவரை காலமும் உறுதியான பதில் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையிலே, அதற்கான பதிலை, கோட்டா வழங்கியுள்ளார்.

இந்தியாவிலிருந்து கடுமையான பயிற்சியும், சீனா, பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் இஸ்ரேலிலிருந்து பெரும்பான்மையான ஆயுதங்களும் கிடைக்கப்பெற்றதாலேயே யுத்தத்தை வெற்றிக்கொள்ள முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில், இந்தியா மற்றும் சீனாவிடையே எழுந்துள்ள முதலீட்டு போட்டிகள் குறித்து, ஊடகமொன்றிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்;

“இலங்கையில் ஆயுதம் தாங்கிய யுத்தத்துக்கு, இந்திய அரசாங்கம் மிகவும் கடுமையான பயிற்சியை, இலங்கை ராணுவத்திற்கு வழங்கியது. ஆனால், தமிழ் நாட்டில் ஏற்பட்ட குழப்ப சூழல் காரணமாக ஆயுதங்களை வழங்கவில்லை. ஆகையால் இலங்கையில் தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்திற்கு, முழுமையாக சீனாவின் ஆயுத கொள்வனவை நம்பி செயற்படும் நிலையே இருந்தது.

மேலும், பாகிஸ்தான், இஸ்ரேல், ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் பாரியளவில் ஆயுதங்களை வழங்கியதோடு, விமானப்படை தாக்குதல்களுக்கு உறுதுணையான விமானங்களையும் வழங்கி உதவியது.

யுத்த காலத்தில் பெரும் உதவியும், நாட்டின் வீதி அபிவிருத்திக்கு முக்கிய பங்களிப்பினையும் வழங்கிய சீனாவின் உதவியை மறந்து, இந்தியாவுக்கு நல்லாட்சி அரசாங்கம்முன்னுரிமை வழங்குவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Comments