சட்டத்திலிருந்து தப்பிக்க தட்டிக் கழித்த பசிலின் சொத்து; வருகிறது ஏலத்துக்கு

🕔 February 24, 2017

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அவரின் மைத்துனர் முறையான திருக்குமார் ந​டேசன் ஆகியோருக்கு சொந்தமானது என கூறப்படும் 16 ஏக்கர் காணியுடன் கூடிய வீடு, ஏலத்தில் விடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பூகொட நீதவான் நீதிமன்ற உத்தரவின்படி மார்ச் மாதம் 29ஆம் திகதி, இக்காணி ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேற்படி காணிக்குரிய ஆகக்குறைந்த பெறுமதி 208 மில்லியன் ரூபாய் என, காணி மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் காணியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளவர், இக்காணி தங்களுக்கு சொந்தமானது இல்லை என தெரிவித்துள்ள நிலையில், குறித்த காணியை ஏலத்தில் விடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த காணியானது 64 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டு, அதில் 125 மில்லியன் ரூபா செலவில் ஆடம்பர வீடு ஒன்று கட்டியதாக, முன்னாள் அமைச்சர் பசில் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

மேற்படி வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ முதலாவது பிரதிவாதியாகவும், மற்றும் அவரின் மைத்துனர் முறையான திருக்குமார் நடேசன் இரண்டாவது பிரதிவாதியாகவும் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இக்காணியும் அதிலுள்ள வீடும் பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி வாங்கப்பட்டதாகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் சட்டத்தரணிகள் இக்காணி அவருக்குரியதல்ல என மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் பசில் ராஜபக்ச மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments