எங்களின் தலைவர், பெண்ணுக்காக எம்மை பேரம் பேசினாரா: புகை மூட்டத்தை தெளிவுபடுத்துமாறு பசீரிடம் கோரிக்கை

🕔 February 4, 2017

Basheer - 9876மு.கா. தவிசாளரின் அண்மைக்கால பேஸ்புக் பதிவுகளை முன்னிறுத்தி, ராஸி முகம்மத் ஜாபிர் எனும் சகோதரர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில் மிகவும் காத்திரமான பதிவொன்றினை இட்டிருக்கின்றார்.

அதனை மாற்றங்களின்றி அவ்வாறே வாசகர்களுக்கு வழங்குகின்றோம்

O

அன்புள்ள பசீர் சேகுதாவூத் அவர்களுக்கு;

ரு சருகுக் காட்டுக்குள் நெருப்புப் பொரியை உரசி விட்டீர்கள். அது எரிந்து கொண்டும், எரித்துக்கொண்டும் இருக்கிறது. அது போதாதென்று இன்று இன்னொரு பொரியை எறிந்திருக்கிறீர்கள். இந்த தொடர்கதைக்குத் தீர்வும் உங்களிடம்தான் இருக்கிறது. அதைச் சொல்லி இதைத் தீர்த்துவிடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் மூட்டிய நெருப்பில் உங்களை எரித்துவிடுவார்கள் – காங்கிறஸின் கள்ளை அருந்திவிட்டு, சரி – பிழை மறந்து கட்சிப்போதை தெளியாதவர்கள்.

சில கதை சொல்கிறீர்கள். உங்கள் தலைவரை விபச்சாரன் என்று குற்றம் சுமத்துகிறீர்கள். இன்று இன்னும் புதிய கதை சொல்கிறீர்கள். தலைவர் மட்டுமல்ல ஏனையவர்களும் விபச்சாரகர்கள், குடிகாரர்கள் என்று குண்டைத் தூக்கிப் போடுகிறீர்கள். அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் சொல்கிறீர்கள்.

நீங்கள் கூறுவது உண்மையாக இருப்பின், “அந்நியப் பெண்களை ஏறெடுத்துப்பார்க்காதே” என்று சொன்ன தூதரின் வழியை யாப்பாகக் கொண்ட எங்கள் தலைவர், ஒரு விபச்சாரன் என்பதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. ஒரு விபச்சாரகன் எங்களின் தலைவராக இருக்கவும் முடியாது.

நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால், இது ஒரு முறை – இருமுறை நடந்ததல்ல, பலமுறை நடந்தகதை போல் தெரிகிறது. அது உண்மைதான் என்றால் எங்கள் தலைவர் விபச்சாரன் மட்டும் அல்ல; பெண் சுகம் தேடி அலைபவராவார். “உங்கள் குடும்பப்பெண்களோடு ஒன்றாகச் சென்றால், நீங்கள் முன்னே நடந்து செல்லுங்கள். பெண்கள் உங்கள் பின்னால் நடந்து வரட்டும். ஏனெனில் அவர்கள் நடக்கும்போது கூட உங்கள் பார்வை அவர்கள் பக்கம் படக்கூடாது” என்று சொன்ன ஒரு மார்க்கத்தைப் பின்பற்றும் சமூகத்தின் தலைவர், இரவு நேரங்களில் விடுதிக்கு பெண்களைக் கூட்டிவருபவர் என்பதை, எங்களால் தாங்க முடியாது. அப்படிப்பட்டவர் எங்களுக்குத் தலைவராய் இருக்கவும் முடியாது.

அத்தோடு இது முடியவில்லை. ஒரு தனிப்பட்ட விவகாரத்துக்கு முழு முஸ்லீம் சமூகத்தின் உரிமையை, மஹிந்தவின் காலடியில் அடமானம் வைத்துவிட்டார் என்று வேறு கூறுகிறீர்கள். அதுவும் ஒரு பெண் விவகாரம்தான் என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். அந்த விவகாரம் உண்மை என்று கூடக் கூறுகிறீர்கள். நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தால், எங்கள் தலைவர் விபச்சாரன் மட்டுமல்ல,கேவலம் ஒரு பெண்ணின் உடல் சுகத்துக்காக அப்பாவிகளான எங்களின் உரிமைகளை அடகு வைத்தவராகிறார். போதும்; இதைவிட எங்களால் இனி தாங்க முடியாது. நீங்கள் சொல்வது உண்மை என்றால், “தொழுகையில் இமாம் மறந்தால், ஆண்கள் சுப்ஹானல்லாஹ் என்று சொல்லுங்கள். பெண்கள் கைகளைத் தட்டுங்கள். உங்கள் குரலும் அவ்றத்தான்” என்று சொன்ன தூதரை பின்பற்றும் எங்களின் தலைவர், பெண்ணுக்காக எங்களைப் பேரம் பேசினாரா? ஒற்றைப்பெண்ணின் மானத்துக்காக படையெடுத்தவர்கள் எங்கள் மூதாதையர்கள். பெண்ணாசைக்காக எங்கள் மண்ணை மஹிந்தவில் மடியில் தலைவர்  விற்றுவிட்டார் என்கிறீர்கள் நீங்கள்.

நீங்கள் கூறுவது மிக மிக பாரதூரமானது. அவை உண்மை என்றால் சுஜூது செய்து நெற்றிப்பொட்டில் கறுப்பு அடையாளங்களோடு வாழும் எங்களுக்கு, ஒரு விபச்சாரன் தலைவனாக முடியாது. எங்கள் பிரார்த்தனைகளாலும் நோன்பாலும் வளர்த்த இந்தக் கட்சிக்கு, ஒரு பெண்பித்துப் பிடித்தலையும் விபச்சாரன் தலைவனாக முடியாது. இந்த சமூகத்தை இறைவன் பொருந்திக்கொள்ளமாட்டான். நாளை, “உனது தலைவன் விபச்சாரன் என்று தெரிந்தும், ஏன் அவனை விரும்பினாய்” என்று, எங்கள் இறைவன் கேட்கும் கேள்விக்கு, எங்களால் தப்பமுடியாது.

ஆகவேதான் இந்த விடுகதையை முடித்து வையுங்கள். முஸ்லீம்களின் நம்பிக்கையைப் பெற்ற, கட்சி சார்பில்லாத, இறையச்சம் கொண்ட 05 பேரிடம் உங்களிடமுள்ள ஆவணங்களைக் காட்டுங்கள். அவர்கள் விபச்சாரத்தைக் கண்ட சாட்சியாளர்களாக இருக்கட்டும். நீங்கள் கூறுவது உண்மை என்றால், அவர்கள் சாட்சியும் உண்மை என்றால், எதிர்வரும் பேராளர் மாநாட்டில் தலைவரையும் குற்றம் செய்தவர்களையும் விலக்கிவிட்டு, ஒரு இடைக்கால மஷூரா சபையிடம் புதியதொரு தலைவரைத் தெரியும் வரைக்கும் தலைமைப் பொறுப்பை ஒப்படையுங்கள். எங்களுக்கு ஒரு விபச்சாரகன் தலைவனாக வேண்டாம்.

உங்கள் கதை உண்மையாக இருந்தும், இதை நீங்கள் செய்யத்தவறுமிடத்து, அநியாயத்துக்கு, நீங்கள் ‘துரோகி’ என்ற பட்டம் பெறுவீர்கள். ஒரு விபச்சாரனை எங்கள் தலையில் சுமத்திய பாவமும் உங்களைச் சேர்ந்து கொள்ளும். உங்கள் தௌபாவும், மன்னிப்பும் உண்மையாக இருந்தால், எங்கள் சமூகத்தைப் பற்றி நீங்கள் சிந்திப்பவராக இருந்தால், இந்தப் புகை மூட்டத்தைத் தெளிவுபடுத்திவிடுங்கள்.

உங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடட்டும்.

Comments