மு.கா. தவிசாளர் பதவியிலிருந்து பசீர் சேகுதாவூத் நீக்கம்: திட்டமிட்டு தீர்மானம் நிறைவேற்றம்

🕔 February 4, 2017

basheer-097– அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பதவியிலிருந்து பசீர் சேகுதாவூத்தை இடைநிறுத்துவதென, அந்தக் கட்சியின் உயர்பீடத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் இன்று சனிக்கிழமை இரவு கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உயர்பீடத்தில் மு.கா. தலைவருக்கு ஆதரவானவர்கள் ஒன்றிணைந்து, இந்த முடிவினை மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், பசீரை தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்துவது சட்டச் சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்று, கட்சியின் பிரதிச் செயலாளரும் பிரபல சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் உயர்பீடக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயினும், மு.கா. தலைவரின் விசுவாசிகள் – பசீரை தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்த முடிவெடுத்துள்ளனர்.

இன்றைய உயர் பீடக் கூட்டத்தில் இவ்வாறானதொரு முடிவு எடுக்கப்படும் என்பதை பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

கடந்த சில நாட்களாக, உயர்பீடத்திலுள்ள தமது விசுவாசிகளை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தனிப்பட்ட ரீதியில் அழைத்து, இவ்வாறானதொரு முடிவினை இன்றைய உயர்பீடக் கூட்டத்தில் எடுக்குமாறு வற்புறுத்தியிருந்தார் எனக் கூறப்படுகிறது.

இதற்கமைவாகவே, திட்டமிட்ட அடிப்படையில் இன்றைய தினம் – பசீரை தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மு.கா. தவிசாளர் பசீரும் இவ்வாறானதொரு நிலைவரம் உருவாகும் என்பதை எதிர்பார்த்திருந்தார் என்று, அவருக்கு நெருங்கிய தரப்புகள் தெரிவிக்கின்றன.

பதவி பறிபோவது பற்றி அலட்டிக் கொள்ளாத வகையிலேயே பசீர் சேகுதாவூத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments