தாதியர் உள்ளிட்ட சுகாதார சேவையின் கீழ் பணியாற்றும் சில தரப்பினரின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அனுமதி

🕔 May 7, 2024

தாதியர் உட்பட சுகாதார சேவையில் பணியாற்றும் சில தரப்பினரின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம், அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

நாடாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட இன்று (07) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

தாதியர் மற்றும் சுகாதார சேவையின் கீழ் பணியாற்றும் சில தரப்பினரின் ஓய்வூதிய வயதை 63 ஆக நீடிக்க தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வலேபொட இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டார். இதன் காரணமாக இரத்தினபுரியில் உள்ள தாதியர் பயிற்சிபக் கல்லூரியின் அதிபர் ஓய்வு பெற்று தற்போது வேறு ஒருவரிடமோ அல்லது அடுத்த அதிபரிடமோ கடமைகளை ஒப்படைக்காமல் வைத்தியசாலையில் தங்கியுள்ளார் எனவும் அவர் கூறினார்.

ஓய்வுபெறும் வயது 63 என்பது நடைமுறைப்படுத்தப்படுமா இல்லையா என்பது துறைத் தலைவர்களுக்குக் கூடத் தெரியாது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார். அதனால், தாதியர் பயிற்சிக் கல்லூரியின் செயல்பாடுகளை பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன்; இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “வயதை 61 ஆக உயர்த்த ஒப்புக்கொள்ளும்படி நாங்கள் கேட்டோம். இது தொடர்பான பத்திரத்தையும் அமைச்சரவைக்கு சமர்ப்பித்தோம். 61க்கு மேல் நீட்டிப்பு இருக்காது” என்றார்.

இதேவேளை, புதிதாக சுமார் 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்ள உள்ளதாகவும், இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத் தேர்வுகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

தற்போது தாதியர் சேவையில் 45,000 பேர் உள்ளதாகவும், 1000 வெற்றிடங்களே நிரப்பப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்