ஒளிர தவிக்கும் மின் குமிழ்கள்; அட்டாளைச்சேனையின் அவலம்

🕔 February 4, 2017

Street lamp - 011– ஏ.பி. அன்வர் –

ட்டாளைச்சேனை பிரதான வீதியோரங்களில் புதிதாக மின் கம்பங்கள் நிர்மாணிக்கப்பட்டு, அவற்றில் மின் குமிழ்களும் பொருத்தப்பட்டுள்ள போதும், இன்னும் அவை ஒளிர விடப்படாமை தொடர்பில், பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, இதற்கான நிதி ஒதுக்கீட்டினை வழங்கியிருந்தது.

குறித்த மின் கம்பங்களை அமைக்கும் பணி, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் மேற்குப் புறமாக ஆரம்பிக்கப்பட்டு, பலநோக்கு கூட்டுறவு சங்கத்தை அண்மித்த பகுதி பூர்த்தியடைந்துள்ளது.

இந்த நிலையில், மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள புதிய மின் குமிழ்கள், மின்சார சபையினால் ஒளிர விடப்பட்டு, வெள்ளோட்டமும் பார்க்கப்பட்டது. இது நடந்து  02 மாதங்கள் கடந்து விட்டன.

ஆனாலும், அதற்குப் பின்னர் இதுவரையும் மேற்படி  மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் குமிழ்கள், ஒளிர விடப்படவில்லை. இது குறித்து, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த மின் குமிழ்களை ஒளிர விடப்பட்டால், பின்னர் சம்பிரதாயபூர்வமாக திறப்பு விழா நடத்தி ஒளிரச் செய்ய முடியாது என, அரசியல்வாதிகள் யோசிக்கிறார்களா எனவும் மக்கள் வினவுகின்றனர்.

இந்த நிலையில், மின் கம்பங்களை நிறுவி, அவற்றில் மின் குமிழ்களையும் பொருத்தி இரண்டு மாதங்கள் கடந்து விட்ட பிறகும், அவற்றினை ஒளிர விடாமல் தடுத்து வைத்திருக்கும் அரசியல்வாதிகளின் செயற்பாட்டினை மக்கள் கண்டிக்கின்றனர்.

Comments