தாருஸ்ஸலாத்தையும் சொத்துக்களையும் வக்பு செய்து விடுங்கள்

🕔 January 26, 2017

slmc-logo-011– எஸ். ஹமீத் –

லங்­கை­யி­லுள்ள முஸ்லிம்களுக்கான ‘பொதுச் சொத்துக்களை’ நிர்வகிப்பதற்காக 1930 ஆம் ஆண்­டு­ தொடக்கம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் 1956 ஆம் ஆண்டு (இலக்கம்: 51 ) வக்பு சட்டம் அமு­லுக்கு வந்­தது. ‘பொதுச் சொத்துக்கள்’ என்பதன் உள்ளடக்கமானது பள்­ளி­வா­சல்கள், முஸ்லிம் மத்ரஸாக்கள், தரீக்­காக்கள், ஸியாரங்கள், மற்றும் முஸ்லிம்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், இடங்கள் ஆகியவற்றின் சொத்துக்களை உள்ளடக்கியதாகும். இச்சொத்துக்களை ஒருங்கிணைத்து நிர்வகிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் இலங்கையில் முஸ்லிம்களுக்கான அதிகாரமிக்க வக்பு சபை உருவாக்கப்பட்டுச் சட்டரீதியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. வக்பு என்பது  முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் போன்று எமக்­கான தனித்­து­வ­மான சட்டமாகும்.

வக்பு சட்டமே இலங்கையிலுள்ள பள்ளிவாயல்கள் உட்படப் பொதுச் சொத்துக்களைப் பதிவு செய்வது பற்றியும், அவற்றுக்கான நம்பிக்கைப் பொறுப்பாளர்களை நியமனம் செய்வது சம்பந்தமாகவும், இந்த நம்பிக்கையாளர்களின் நடவடிக்கைகள், அதிகாரங்கள் என்னவென்பதையும் வரையறை செய்கிறது. அத்தோடு பொதுச் சொத்துக்கள், நம்பிக்கை நிதியங்கள்  பற்றியும் எடுத்துக் கூறுகிறது.

வக்பு என்றால் நிறுத்துதல், நிலைநாட்டுதல் என்பது பொருளாகும். இறைவன் பெயரால் ஒருவர் தன் சொத்துக்களை அர்ப்பணித்துவிடும்போது அது ‘வக்பு சொத்து’ என்னும் நிலையை அடைந்து விடுகிறது. கைக்குக் கைமாறும் தன்மையுடைய ஒரு  சொத்தை நிலைபேறாகக் கொண்டு வருவதை ‘வக்பு’ என்று இஸ்லாமியச் சட்டம் அடையாளம் காட்டுகிறது. ஒரு சொத்தை வக்பு செய்வதன் மூலம் அந்தச் சொத்தின் உரிமையை அல்லாஹ்விற்காகத் தர்மம் செய்துவிட்டு, அதன் வருமானத்தையும், பலனையும்  அல்லாஹ்வின் பாதையில் மக்களின் நலனுக்காகச் செலவு செய்வதே ‘வக்பு’ என்பதன் சரியான வியாக்கியானமாகும்.

சரி, இப்பொழுது விடயத்திற்கு வருவோம். மிக அண்மைக் காலங்களில் இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் மிகப் பெரியதும் காலத்தால் முந்தியதுமான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான ‘தாருஸ்ஸலாம்’ பற்றிய சர்ச்சைகள் தோன்றியுள்ளதை நாம் அறிவோம். ‘தாருஸ்ஸலாம்’ என்பதன் அர்த்தம் ‘சாந்தி இல்லம்’ என்பதாகும். அனால், அது இன்று ‘சண்டை இல்லம்’ போல் பலராலும் சித்தரிக்கப்படுவது வேதனைக்குரியதாகும்.

மறைந்த மா தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் கடும் பிரயத்தனங்களின் பயனாக கொழும்பு வொக் ஷால் லேனில்  பிரமாண்டமாக எழுந்து  நிற்கும் தாருஸ்ஸலாம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் என்றும் குறிப்பிடப்படுகிறது. மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இறைவனடி சேர்ந்து பல வருடங்களாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியே இலங்கை முஸ்லிம்களின் தனியொரு செல்வாக்குமிக்க அரசியற் கட்சியாக இருந்து வந்ததனால், தாருஸ்ஸலாம் பற்றிய சர்ச்சைகள் எதுவும் அப்போதைக்கு எழவில்லை. ஆயினும், தலைவரின் மறைவுக்குப் பின்னர் தாருஸ்ஸலாம் கட்டடமும் அதற்கான சொத்துக்களும் அவற்றினூடாக வரும் வருமானங்களும் பற்றிய சலசலப்புகள் ஆங்காங்கே எழாமலும் இல்லை.

தாருஸ்ஸலாம் என்ற கட்டடத்தினதும் அதனைச் சார்ந்த அத்தனை சொத்துக்களினதும் உருவாக்கத்திற்கு மறைந்த தலைவர் அவர்கள் மூளையாகவும் முதுகெலும்பாகவும் இருந்தார் என்பதை உளச்சுத்தியோடு ஏற்றுக் கொள்ளும் நாம், அவற்றை அடையும் வழியில் வெளிநாட்டு முஸ்லிம் தனவந்தர்கள் தொடக்கம் நமது உள்நாட்டின் சாதாரண ஏழை முஸ்லிம் சகோதரர்கள் வரை, தமது சக்திக்குட்பட்ட வகையில் நிதிப் பங்களிப்பைச் செய்திருக்கின்றார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆக, தாருஸ்ஸலாம் என்பது பெரும்பாலான முஸ்லிம் மக்களின் நிதியுதவியினால் உருவான பொதுச் சொத்து என்பது – எச்சந்தர்ப்பத்திலும் மறைக்கப்படவோ, மறுக்கப்படவோ முடியாததாகும்.

எனவே லோட்டஸ் நம்பிக்கை நிதியம், யூனிட்டி பில்டர்ஸ், ரவூப் ஹக்கீம், நசீர் அஹமட் எனும் எல்லாப் பெயர்களையும்  ஒதுக்கித் தள்ளிவிட்டு, தாருஸ்ஸலாத்தையும் அதனைச் சார்ந்த அனைத்துச் சொத்துக்களையும் இந்நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களின் பொதுச் சொத்துக்களாக வக்பு செய்து விடுவதே சாலச் சிறந்ததாகும்.

இவ்வாறு செய்வதன் மூலம் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியுமாகவிருப்பதோடு, குறிப்பிட்ட சிலரின் மேல் சுமத்தப்படும் களங்கத்தையும் போக்கிவிட முடியுமாகவிருக்கும் என்பதே நமது கருத்தாகும்.

Comments