அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்: இப்போதிருக்கும் சாத்தியம் இதுதான்

🕔 January 3, 2017

Hakeem - 0222– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கோருகின்றவர்கள், அட்டாளைச்சேனைக்கு அந்த வாக்குறுதியை வழங்கிய கட்சித் தலைவரிடம் நியாயம் கேட்பதற்குப் பதிலாக, கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலி மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமையானது சிறுபிள்ளைத்தனமான செயற்பாடு என, கட்சியின் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

“கட்சியின் பொதுச் செயலாளர் ஹசனலி – பொதுத் தேர்தலில் போட்டியிடவிருந்த நிலையில், அவரைபோட்டியிட  வேண்டாம் என்று நான்தான் தடுத்தேன். அதற்குப் பகரமாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவேன் என்று ஹசனலிக்கு நான் வாக்களித்திருந்தேன்” என்று, நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ஹக்கீம் மிகப் பகிரங்கமாகவும், தெளிவாகவும் கூறியிருந்தார்.

அந்த வகையில், ஹசனலிக்கு உரித்தான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைத்தான், மு.கா. தலைவர் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளார்.

ஆனாலும், அட்டாளைச்சேனைக்குரிய தேசியப்பட்டியலை ஹசனலி தட்டுப் பறித்து விட்டதாக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சிலர் கூப்பாடு போட்டு வருகின்றமையானது மு.கா. தலைவரிடம் நியாயம் கேட்க முடியாமையின், இயலாத்தன்மையே தவிர வேறொன்றும் இல்லை என, கட்சியின் மூத்த உயர்பீட உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, தேசியப்பட்டியலை கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். சல்மானுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் மு.கா. தலைவர் வழங்கியிருந்த போதும், அந்தக் காலப் பகுதிகளில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அரசியல்வாதிகள் எவரும், அது குறித்து பேசாமலிருந்ததோடு, அட்டாளைச்சேனைக்குரிய தேசியப்பட்டியலை வைத்திருப்பதாக சல்மானை யாரும் திட்டவில்லை என்பது ஆச்சரியப்படத்தக்க முரண்பாடான செயலாகும் எனவும் உயர்பீட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதுமட்டுமன்றி, கடந்த பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எஸ். தௌபீக்குக்கு, மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ரஊப் ஹக்கீம் ஏன் கொடுத்தார் என்று, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த உள்ளுர் அரசியல்வாதிகள் எவரும் தட்டிக் கேட்பதற்கு வக்கற்று இருந்தமையினையும், மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள் நினைவுபடுத்தினர்.

எம்.எஸ். தௌபீக்கினுடைய திருமணத்தின் மூலம், ரஊப் ஹக்கீமுக்கு ஏற்பட்ட குடும்ப உறவின் அடிப்படையில்தான், மு.கா.வின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றினை, தேர்தலில் தோல்வியடைந்த பிறகும் தௌபீக்குக்கு ரஊப் ஹக்கீம் வழங்கினார் எனவும் மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

எது எவ்வாறிருந்த போதும், தௌபீக்குக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கி, எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. எனவே, ஒரு வருடம் நிறைவடைந்தவுடன் தௌபீக்கிடமுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை பெற்றெடுத்து, அதனை அட்டாளைச்சேனைக்கு வழங்குமாறு – அட்டாளைச்சேனை அரசியல் பிரமுகர்கள், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு அழுத்தம் கொடுப்பதுதான் தற்போது சாத்தியமானதும், புத்திசாலித்தனமானதுமான செயற்பாடாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

ரஊப் ஹக்கீம் அடிக்கடி சொல்லிக்காட்டும் மேற்கோளுக்கு ஒப்ப, சாத்தியமானவற்றினை  சாதிக்கும் கலைதான் அரசியலாகும்.

அட்டாளைச்சேனை அரசியல்வாதிகளுக்கு இது புரிந்தால், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை பெற்றுக் கொள்வதற்கான நிகழ்தகவின் சாத்தியத் தன்மையினை அதிகப்படுத்தலாம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்