அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் இல்லை; மௌனத்தால் உறுதிப்படுத்தினார் ஹக்கீம்

🕔 January 3, 2017

hakeem-022– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குமாறு, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள் கடுமையாக வலியுறுத்திய போதும், அது குறித்து மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் எதுவும் கூறாமல் மௌமாக இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடையாது என்பதை ஹக்கீம் – தன்னுடைய மௌத்தின் வழியாக உறுதிப்படுத்தி விட்டார் எனக் கூறப்படுகிறது.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மு.கா.வின் உயர்பீடக் கூட்டம், நேற்று முன்தினம், கட்சியின் கொழும்புத் தலைமையகம் தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது.

இதன்போது, அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்பதை அந்தப் பிரதேசத்தின் கட்சிப் பிரமுகர்களான எஸ்.எல்.எம். பளீல், சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், யு.எல் வாஹிட், கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனைபிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ. அன்சில் மற்றும் முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ.எல். நபீல் உள்ளிட்டோர் வலியுறுத்திப் பேசினர்.

‘அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் வழங்குவேன் என்று மிகவும் பகிரங்கமாக கடந்த காலங்களில் வாக்குறுதி வழங்கியுள்ளீர்கள். ஆனாலும் இப்போது பொதுச் செயலாளர் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகக் கூறுகிறீர்கள். அதற்குக் காரணம், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாக ஹசனலிக்கும் நீங்கள் வாக்களித்ததாக சொல்கிறீர்கள். அப்படியாயின் அட்டாளைச்சேனைக்கு எப்போதாவது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா என்று கூறுங்கள். அதுவும் இல்லாது விட்டால் அட்டாளைச்சேனைக்கு வழங்க முடியாது என்றால், அதையாவது வெளிப்படையாகக் கூறுங்கள். அந்த ஊர் மக்களிடம் நாங்கள் இது குறித்து பதிலளிக்க வேண்டியுள்ளது’ என்று, மு.கா. தலைவரிடம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்சில் உயர்பீடத்தில் வைத்து கோரிக்கை விடுத்தார்.

ஆனாலும், ஹக்கீம் இதற்கு எவ்வித பதிலையும் வழங்காமல் மௌனமாகவே இருந்துள்ளார்.

மு.கா. தலைவரின் மௌனத்தை வைத்து, அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அவர் வழங்க மாட்டார் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது என்று, உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்