ஹிஸ்புல்லாவின் மேளம்

🕔 December 13, 2016

article-mtm-088– முகம்மது தம்பி மரைக்கார் –

‘முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதை எவரும் தடுக்க முடியாது போய்விடும்’ என்று நாடாளுமன்றத்தில் ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கூறிய விடயம், ஏராளமான வாய்களுக்கு அவலாக மாறியிருக்கிறது. ஹிஸ்புல்லாவின் இந்தக் கருத்தை – ஒரு சாரார் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள். மற்றொரு சாரார் தலையில் வைத்துக் கொண்டாடும் விதமாக கருத்துகளைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். ஹிஸ்புல்லாவின் அந்தக் கூற்று மிகவும் அவதானத்துக்குரியது, கூர்மையானது, கத்தி போன்றது. அதன் பாரதூரம் மிகவும் அபாயகரமானதமாகும்.

‘முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதை எவரும் தடுக்க முடியாது போய்விடும்’ என்கிற கூற்றுடன் சேர்த்து, அதற்கு முன்னதாக ஹிஸ்புல்லா வெளியிட்ட வார்த்தைகளும் சேர்த்துப் பார்க்கப்படுதல் அவசியமாகும். ‘தமது உயிர் மூச்சான இஸ்லாமும், குர்ஆனும் நிந்திக்கப்பட்டால், முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதை எவரும் தடுக்க முடியாது போய்விடும்’ என்றுதான் ஹிஸ்புல்லா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். அத்தோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. ‘இவ்வாறு நிந்திக்கப்படுவதற்கு எதிராக முஸ்லிம் அரசியல்வாதிகள் நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை, கைகட்டி மௌனிகளாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கின்றார்கள். இந்த நிலையில், முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினால், முஸ்லிம் தலைவர்களாகவுள்ள எம்மைத்தான் முதலில் படுகொலை செய்வார்கள்’ என்றும் ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தார்.

மனநிலை அறிதல்

ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா இப்படிக் கூறியமைக்கான காரணம் என்ன? எந்த வகையான உணர்வு அவரை இவ்வாறு பேச வைத்திருக்கும் என்பது குறித்து முதலில் ஆராயப்படுதல் வேண்டும். ஆகக்குறைந்தது ஹிஸ்புல்லாவின் அந்தப் பேச்சுக்குப் பின்னால் பின்வரும் மூன்று வகையான மனநிலைகளில் ஒன்று – செயற்பட்டிருக்க வேண்டும்.

01) இலங்கை முஸ்லிம்களின் வீரத் தலைவனாக தன்னைக் காட்டிக் கொள்தல்
02) அச்சுறுத்துதல்
03) ஆற்றாமை
என்பனவே அந்த மூன்று மனநிலைகளுமாகும்.

முஸ்லிம்களின் வீரத்தலைவனாக தன்னைக் காட்டிக் கொள்கின்ற காய்ச்சலில் ஹிஸ்புல்லா இன்னும் சிக்கிக் கொள்ளவில்லை, அல்லது அந்தக் காய்சலால் அவர் இன்னும் பீடிக்கப்படவில்லை என்பதை அவரின் அரசியலை உற்று நோக்குகின்றவர்கள் புரிந்துகொள்வர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது அரசியலை வெற்றிகரமாகச் செய்து கொள்ள முயற்சிக்கும் ஒருவராகத்தான் – ஹிஸ்புல்லா இருந்து வருகின்றார். இன்னொருபுறம் சிங்களப் பெருந்தேசியக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்துக் கொண்டு, இலங்கை முஸ்லிம்களின் வீரத் தலைவன் எனும் வேடத்தினை வலிந்து அணிந்து கொண்டாலும், அது வெற்றியளிக்காது என்பதைப் புரிந்து கொள்ளக் கூடிய அரசியல் அறிவு அற்றவராகவும் ஹிஸ்புல்லாவைக் கூறமுடியாது.

அப்படியென்றால், அச்சுறுத்தும் விதமாக அந்த வார்த்தைகளை ஹிஸ்புல்லா பேசினாரா என்கிற கேள்வி இங்கு எழுகிறது. கடந்த காலங்களில் தமது உரிமைகள் மறுக்கப்பட்ட போது – தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தியமையினை, தனது உரையில் ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ் இளைஞர்கள் போல், முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்தும் ஒரு நிலை வரலாம் என்பதை அவர் குறித்துக் காட்ட முயற்சித்திருந்தார். ஒரு சமூகத்தை தொடர்ந்தும் நெருக்குவாரப்படுத்திக் கொண்டேயிருந்தால், தவிர்க்க முடியாத ஒரு நிலையில் – அந்த சமூகம் தனது எதிர்ப்பினை ஏதோவொரு வழியில் வெளிப்படுத்தும் என்பதை, முஸ்லிம்களுக்கு எதிராக அட்டூழியம் புரிகின்ற பௌத்த பேரினவாதிகள் அறியாமலில்லை. அச்சுறுத்தும் வார்த்தைகளினூடாகத்தான் அந்த உண்மையினை பேரினவாதிகளுக்கு நினைவூட்ட வேண்டும் என்கிற நிலைவரமும் இங்கு கிடையாது. மேலும், அவ்வாறானதொரு அச்சுறுத்தலின் யதார்த்தத்தினைப் புரிந்து கொள்ளும் நிலையிலும் அவர்கள் இல்லை. இன்னொருபுறம், ‘முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள்’ என்று சொல்லி அச்சுறுத்துவதென்பது இன்றைய காலகட்டத்தில் புத்திசாலித்தனமான முயற்சியாகவும் அமையாது. இவையெல்லாம் ஹிஸ்புல்லாவுக்கு தெரியாத விடயங்களல்ல.

அவ்வாறெனில், ஆற்றாமை காரணமாகவே அந்த வார்த்தைகளை ஹிஸ்புல்லா வெளியிட்டிருக்க வேண்டும் என்கிற முடிவொன்றுக்கு வர முடிகிறது. தான் கூறுகின்ற கருத்தின் ஆழ – அகலம், நன்மை – தீமை, சரி – பிழை என்கிற எதையும் பற்றிச் சிந்திக்காமல், அல்லது அப்படிச் சிந்திப்பதற்கானதொரு மனநிலையினை மீறிய உணர்ச்சி மேலீட்டினால், அந்த வார்த்தைகளை ஹிஸ்புல்லா பிரயோகித்திருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ளன.

ஆற்றாமை

முன்னைய அரசாங்கத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாதக் கும்பல்கள் அட்டூழியங்களைச் செய்தன. ஆனால் – ஆட்சியாளர்கள் அதனைக் கட்டுப்படுத்தவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அந்த அட்டூழியங்களிலிருந்து நிம்மதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன், முஸ்லிம்கள் இப்போதைய அரசாங்கத்துக்கு வாக்களித்தார்கள். ஆனால், அதே பேரினவாதக் கும்பல் – முன்னர் எவற்றையெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்தனவோ, அதையே இந்த ஆட்சியிலும் செய்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் – ஆட்சியாளர்கள் வெறுமனே வாய் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படியென்றால், இனி என்னதான் செய்வது? யாரிடம்தான் போய் இதற்கு நீதி கேட்பது? என்கிற ஆற்றாமையினால் ஹிஸ்புல்லா அவ்வாறு பேசியிருக்கக் கூடும்.

முரண்நகை

எவ்வாறாயினும், ‘முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதை எவரும் தடுக்க முடியாது போய்விடும்’ என்கிற வார்த்தைகளை ஹிஸ்புல்லா பேசியிருக்கக் கூடாது என்பதுதான், சாதுரியமாகச் சிந்திப்பவர்களின் கருத்தாக உள்ளது. அதுவும் அதியுயர் சபையான நாடாளுமன்றில் அவர் அப்படிப் பேசியமையானது, பொறுப்புணர்வுகளை மீறியதொரு செயற்படாகும். தற்போதைய காலகட்டத்தில் இலங்கை முஸ்லிம்களை ஐ.எஸ். இயக்கத்துடன் முடிச்சிட்டுக் காட்டுவதற்கான முயற்சிகள் – அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையிலுள்ள மதரசாக்களில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. இவற்றினைச் சொல்லிக்கொண்டுதான் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக, பௌத்த இனவாதிகள் அட்டூழியம் புரிந்து வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் ‘முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதை எவரும் தடுக்க முடியாது போய்விடும்’ என்று, மிக முக்கிய முஸ்லிம் அரசியல் பிரமுகரொருவர் கூறியுள்ளமை, பேரினவாதிகளின் பேயாட்டத்துக்கு மேளம் அடித்திருக்கிறது.

நாடாளுமன்றம் என்பது – ஜனநாயக வழிமுறைகளினூடாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கூடுகின்ற அதியுயர் சபையாகும். ஜனநாயக செயற்பாடுகளினூடாக மட்டுமே இந்த சபைக்கு பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுகின்றார்கள். அவ்வாறானதொரு இடத்தில் இருந்துகொண்டு, தனது சமூகத்தின் பிரச்சினைகளுக்கு ‘வன்முறை மூலம் தீர்வுகாணப்படும் நிலையொன்று ஏற்படும்’ என்று ஹிஸ்புல்லா பேசியமையானது முரண்நகையாகும்.

சட்டியை உடைத்தல்

வரவு – செலவுத் திட்டத்தில் முஸ்லிம் கலாசார அமைச்சு மீதான விவாதம் நாடாளுமன்றில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் – உரையாற்றிருந்தார். அதன்போதுளூ ‘இலங்கை முஸ்லிம்கள் – ஆயுதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களல்ல. அவர்கள் ஒருபோதும் தீவிரவாதத்துக்குத் துணைபோக மாட்டார்கள்’ என்று அவர் கூயிருந்தார். மேலும், ‘இந்த நாட்டில் இன்னுமொரு முறை, ரத்த ஆறு ஓடுவதைத் தூண்டுகின்ற நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்கள் துணைபோக மாட்டார்கள் என்பதை, அந்த மக்கள் சார்பாக இந்த சபையில் கூறிக் கொள்கிறேன்’ என்றும் அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு நிலையில்தான், சிரேஷ்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஹிஸ்புல்லாளூ ‘முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதை எவரும் தடுக்க முடியாது போய்விடும்’ என்று சொல்லி, சட்டியை உடைத்திருக்கின்றார்.

பௌத்த பேரினவாதிகளுக்கு ஹிஸ்புல்லாவின் இந்த ஒரு வார்த்தையே போதுமானதாகும். ‘பார்த்தீர்களா, முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஆயுதம் ஏந்திப் போராடும் அபாயம் உள்ளது என்று, இத்தனை நாட்களாக நாங்கள் சொல்லிக்கொண்டு வந்தோம். இப்போது, அதனை முஸ்லிம்களின் முக்கிய அமைச்சர் ஒருவரே தனது வாயால் சொல்லி நிரூபித்திருக்கிறார்’ என, பேய்கள் கூவத் தொடங்கும்.

ஹிஸ்புல்லா மீதான முத்திரை

‘ஹிஸ்புல்லா ஓர் இஸ்லாமிய அடிப்படைவாதி’ என்கிற முத்திரையை, ஏற்கனவே பேரினவாதிகள் குத்தி வைத்திருக்கின்றார்கள். ஹிஸ்புல்லாவின் சொந்த ஊரான காத்தான்குடியிலும், மாவட்டமான மட்டக்களப்பிலும் அவர் மேற்கொண்டு வரும் – சில தனித்துவம் மிக்க நடவடிக்கைகளை வைத்தே, அவர் மீது இந்த முத்திரை குத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, காத்தான்குடி பிரதான வீதியினை அழகுபடுத்தும் வகையில், அங்கு ஈச்சம் மரங்களை ஹிஸ்புல்லா நட்டுள்ளார். காத்தான்குடியிலுள்ள வீதிகளின் பெயர்களை அறபு மொழியிலும் எழுதிக் காட்சிப்படுத்தினார். இவற்றினைப் பார்த்த பேரினவாதிகள்ளூ ‘காத்தான்குடியை சஊதி அரேபியாவாக ஹிஸ்புல்லா மாற்றிக் கொண்டிருக்கின்றார்’ என்று கோசமிட்டார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் நாடுகளின் நிதியுதவியுடன், தனியார் பல்கலைக்கழகம் ஒன்றினை தற்போது ஹிஸ்புல்லா நிர்மாணித்து வருகின்றார். இது – ஆச்சரியப்பட வைக்கும் பெரு முயற்சியாகும். இதனைச் சகித்துக் கொள்ள முடியாத பேரினவாதிகள் ‘அடிப்படைவாதத்தைப் போதிப்பதற்காக, அறபு நாடுகளின் துணையுடன் ஹிஸ்புல்லா ஒரு பல்கலைக்கழகத்தினை அமைக்கின்றார்’ என்று குற்றம்சாட்டத் தொடங்கினார்கள். இப்படி, ‘முஸ்லிம் அடிப்படைவாதி’யாக முத்திரை குத்தப்பட்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாளூ ‘முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதை எவரும் தடுக்க முடியாது போய்விடும்’ என்று கூறியமையானது, வேறொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுவதை விடவும், பேரினவாதிகளின் பார்வையில் பாரதூரமானதாகவே தெரியும்.

கோபமும் – விமர்சனங்களும்

ஹிஸ்புல்லாவின் இந்தக் கருத்துக் குறித்து, சமூக வலைத்தளங்களில் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள். ‘தனது அரசியலுக்காக முஸ்லிம் இளைஞர்களை ஹிஸ்புல்லா பலிகொடுக்க முயற்சிக்கின்றார்’ என்னும், ‘முதலில் நான் ஆயுதம் தூக்குவேன் என்று – நீ சொல்லியிருக்க வேண்டும். அதை விட்டு, எங்களை ஏன் போட்டுக் கொடுத்தாய்’ எனவும் ‘நாங்கள் ஆயுதம் தூக்குவோம் என்று, உன்னிடம் சொன்னோமா’ என்றும், பலவாறாக எழுதி, சமூக வலைத்தளங்களில் ஹிஸ்புல்லாவை முஸ்லிம் இளைஞர்கள் கோபத்துடன் – போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். எவ்வாறாயினும், ‘முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதை எவரும் தடுக்க முடியாது போய்விடும்’ என்று ஹிஸ்புல்லா கூறிய கருத்துக்கு எதிராக, முஸ்லிம் இளைஞர்களில் அதிகமானோர் கருத்துக்களைப் பதிவிடுகின்றமையினைக் காணக்கூடியதாக உள்ளமை பெரும் ஆறுதலாகும்.

வரலாற்றுப் பாடம்

இலங்கையில் தமிழர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை, ஆயுதப் போராட்ட வழியில் தள்ளி விடுவதற்கு காரணமாக இருந்தவர்கள், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள்தான் என்கிற கசப்பான உண்மையினை இந்த இடத்தில் பதிவுசெய்தல் பொருத்தமானதாகும். தமிழர் சமூகத்தை – தமது பேச்சுக்களாலும், நடவடிக்கைகளாலும் உணர்ச்சியூட்டி, உசுப்பேற்றி விட்ட தமிழ் அரசியல்வாதிகள்தான், அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு முக்கிய காரணமாக இருந்தனர். ஆனால், அவ்வாறு உசுப்பேற்றிய தமிழர் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளோ அல்லது அவர்களின் பிள்ளைகளோ, தமிழர் ஆயுதப் போராட்டத்தில் இணைந்து செயற்படவில்லை என்பது ஜீரணிக்கக் கஷ்டமான மற்றொரு உண்மையாகும். தமிழர் ஆயுதப் போராட்டத்தினால், அந்த சமூகம் இழந்தவை – விபரிப்புகளுக்கு அப்பாலானவையாகும். அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய பிறகு, தமிழர் சமூகம் எதிர்கொண்ட வலிகள் – எழுத்துக்களால் பதிவு செய்ய முடியாதவை. இனியொரு ஆயுதப் போராட்டம் இந்த நாட்டுக்குத் தேவையில்லை என்பதை, 30 வருட யுத்தமும், அதனால் ஏற்பட்ட இழப்புக்களும் நமக்குச் சொல்லித் தந்திருக்கின்றன. இவற்றினையெல்லாம் யோசித்துப் பார்க்காமல், உணச்சி மேலீட்டினால் அல்லது பகுத்தறிவினை மேலாடிய ஆற்றாமை உணர்வினால், ஆயுதப் போராட்டம் நோக்கி முஸ்லிம் இளைஞர்களை உசுப்பேற்றித் தள்ளி விட முயற்சிக்கும் வகையில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பேசியமையினை, எதனைக் கொண்டும் நியாயப்படுத்தி விட முடியாது.

இந்த நிலையில், தன்னுடைய பேச்சுக்கள் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகளையும், அந்தப் பேச்சுக்கு எதிரான விமர்சனங்களையும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அறிந்து கொண்டுள்ளார். அதனையடுத்து ‘எனது பேச்சு – தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது’ என்கிற புளித்துப் போன பல்லவியை ஹிஸ்புல்லா ஊடகங்களில் பாடத் தொடங்கியுள்ளார்.

யதார்த்தம்

‘நீ தொடர்ந்தும் ஒருவனை அடித்துக் கொண்டிருந்தால், தப்பிக்க முடியாத ஒரு கட்டத்தில் – அடிவாங்குகின்றவன் உன் மீது தாக்குதல் நடத்தத் தொடங்குவான்’ என்பது இயற்கை விதியாகும். தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்துக்குள் தள்ளிவிடப்படுவதற்கு, அவர்கள் மீது சிங்களப் பேரினவாதம் தொடர்ந்தும் மேற்கொண்டுவந்த அடக்கு முறையும், தாக்குதல்களுமே காரணமாக அமைந்தன. இந்த உண்மையினைத்தான், முஸ்லிம் சமூகத்தினை முன்வைத்து ஹிஸ்புல்லா கூறியிருந்தார். அதுவே அவருக்குச் சிக்கலை உருவாக்கி விட்டிருக்கிறது. ‘காலமறிந்து பேச வேண்டும்’ என்பதை ஹிஸ்புல்லா ஏகத்துக்கும் மறந்து விட்டமையின் விளைவினைத்தான், விமர்சனங்களாக அவர் அனுபவிக்கத் தொடங்கியிருக்கின்றார்.

நாடாளுமன்றில் பேசுவதற்கு இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது, தனது முன்னைய பேச்சுக்காக ஹிஸ்புல்லா வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதனால், ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை. ஹிஸ்புல்லாவின் பேச்சின் மூலம் குழம்பிக்கிடக்கும் குட்டையினை, அவரின் ‘வருத்தம்’ ஓரளவு சரிப்படுத்தி விடுமென்றால், அதைச் செய்வதுதான் அவருக்குள்ள தெரிவாகும்.

Comments