ஊடகவியலாளரை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யுமாறு, கம்பஹா மீதிமன்றம் உத்தரவு
சர்வதேச பொலிஸார் மூலம், லங்கா ஈ நியுஸ் இணையத்தள செய்தியாசிரியர் சந்தருவன் சேனாதீரவை உடனடியாக கைது செய்யுமாறு, கம்பஹா பிரதான நீதவான் காவிந்தியா நாணயக்கார இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
ரிவிர செய்தித்தாளின் முன்னாள் செய்தியாசிரியர் உபாலி தென்னகோனை தாக்கிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு நிறுத்துவதற்கு முன்பாக, அவரின் புகைப்படத்தை லங்கா ஈ நியுஸ் இணையத்தளம் வெளியிட்டது. இது தொடர்பாக, அந்த இணையத்தளத்தின் ஆசிரியர் சந்தருவன் சேனாதீர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் இலங்கைக்கு வரும் பட்சத்தில் விமான நிலையத்திலேயே கைது செய்யுமாறும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
லங்கா ஈ நியுஸ் இணையத்தளத்தின் ஊடாக நீதிமன்றத்துக்கும், நீதிபதிகளுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்கு எதிராகவே. செய்தியாசிரியருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, லங்கா ஈ நியுஸின் ஊடாக இலங்கையில் சில நீதிபதிகளுக்கும், நீதிமன்றத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகள் வெளியிடப்பட்டமை தொடர்பில், சட்டத்தரணி மதுர வித்தானகேவினால் நேற்று 14 முறைப்பாடுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.