புத்தளம் பாயிஸ் மு.கா.வில் இணைவு; றிசாத்தை எதிர்கொள்ள ஆள் திரட்டுகிறார் ஹக்கீம்

🕔 October 23, 2016

bais-02222
– முன்ஸிப் அஹமட்  –

மு.காங்கிரசின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான புத்தளத்தைச் சேர்ந்த கே.ஏ. பாயிஸ், மீண்டும் மு.காங்கிரசில் இணைந்து கொண்டார் என தெரியவருகிறது.

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமை, கட்சியின் கண்டி காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து உரையாடிய பின்னர் பாயிஸ் – கட்சியில் இணைந்து கொண்டார் என அறிய முடிகிறது.

முஸ்லிம் காங்கிரசில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலத்தில், கட்சியின் முடிவுக்கு முரணாக, அப்போதைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு, பிரயமைச்சர் பதவியினை பாயிஸ் பெற்றுக் கொண்டமை நினைவு கொள்ளத்தக்கது.

இது இவ்வாறிருக்க, மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளராக செயற்பட்ட கே.ஏ. பாயிஸ், மு.காங்கிரசின் உறுப்புரிமை உட்பட, அனைத்துப் பதவிகளிலிருந்தும் 2007 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் இடம்பெற்ற பிரச்சினையொன்றின் போது, கைத்துப்பாக்கியைக் காட்டி பாயிஸ் அச்சுறுத்தினார் எனும் குற்றச்சாட்டின்பேரிலேயே, மு.கா.விலிருந்து அவர் இடைநிறுத்தப்பட்டதாக கட்சியினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், அதற்கு முன்னதாக மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், பாயிசுக்கும் இடையில் பிரச்சினைகள் தோன்றியிருந்தன.

கட்சியை விட்டும் பாயிஸ் இடைநிறுத்தப்படுவதற்கு முன்னதாக, ‘முஸ்லிம் காங்கிரசின் நிதியானது ஹக்கீமிடம் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறிப்பிட்டு, அதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு’ கட்சிக்கு கடிதமொன்றை பாயிஸ் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் பத்திரிகைகளில் பிரசுரமானது.

எவ்வாறாயினும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுத்தீனை அரசியல் ரீதியாக எதிர்கொள்வதற்காகவே, புத்தளம் பாயிசை மு.கா. தலைவர் மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொண்டுள்ளார் என பேசப்படுகிறது.

அமைச்சர் றிசாத் பதியுத்தீனும், புத்தளம் பாயிசும் கடுமையான அரசியல் பகையாளிகள் என்பது நினைவுகொள்ளத்தக்கது.bais-01111

Comments

புதிது பேஸ்புக் பக்கம்