ஹசனலிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, விரைவில் வழக்கு: இறுகுகிறார் ஹக்கீம்

🕔 October 11, 2016

hasanalihakeem-086

– அஹமட் –

மு.காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலியின் பதவிக்கு, வேறொருவரின் பெயர் சூழ்ச்சிகரமான முறையில் பதிலீடு செய்யப்பட்டமைக்கு எதிராக, விரைவில் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படலாம் எனத் தெரியவருகிறது.

மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலி, கட்சிக்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதில்லை எனத் தெரிவித்து வந்த நிலையிலேயே, இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

எவ்வாறாயினும், கட்சிக்கு எதிரானதாக இந்த வழக்கு இருக்கப் போவதில்லை என அறிய முடிகிறது.

தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய பதவியிலுள்ள ஒருவரை பிரதான எதிராளியாகக் கொண்டு, மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

இவ்வாறானதொரு வழக்கு தாக்கல் செய்யப்படுமாயின், முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாட்டினை நடத்த முடியாததொரு நிலை ஏற்படும்.

முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாடு, கடந்த வருடம் நொவம்பர் மாதம் நடைபெற்றது. அந்தவகையில், கட்சியின் 2017 ஆம் ஆண்டுக்கான நிருவாகத்தினைத் தெரிவு செய்யும் பேராளர் மாநாடு அடுத்த மாதம் நடைபெற வேண்டியுள்ளது.

இதேவேளை, மு.காங்கிரசின் செயலாளராக கடந்த பேராளர் மாநாட்டில் ஹசனலி தெரிவு செய்யப்பட்ட நிலையில், மன்சூர் ஏ. காதரின் பெயரை சூழ்ச்சிகரமாக தேர்தல் ஆணையாளருக்கு மு.கா. தலைவர் ஹக்கீம் கையெழுத்திட்டு அறிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மேற்படி குற்றச்சாட்டினை நிரூபிப்பதற்கான ஒளி மற்றும் ஒலிப்பதிவுகள் வழங்குத் தொடுக்கும் தரப்பினரிடம் உள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ்வாறு வழக்கு ஒன்று தொழுக்கப்படுமானால், எதிர்வரும் தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிடுவதில் சட்டச் சிக்கல்கள் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹசனலிக்கு இழைக்கப்பட்ட அநியாயத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில், மு.காங்கிரசின் முக்கியஸ்தர்கள் பலர் ஆர்வமாக உள்ளனர்.

இதேவேளை, அவ்வாறு ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டால், அதனால் கட்சிக்கு ஏற்படும் அத்தனை பாதக விளைவுகளுக்குமான ஒட்டுமொத்தப் பொறுப்பினையும், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமே ஏற்க வேண்டும் என்று, இவ்விடயம் தொடர்பில் புதிது செய்தித் தளத்துக்கு தகவல் வழங்கிய மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்