நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அசமந்தம்; இணைப்புப் பெற்றும் நீர் இல்லை: ஆலங்குளம் மக்கள் விசனம்

🕔 October 7, 2016

water-issue-01
– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் கிராமத்தில், நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளபோதும், பாவனைக்குரிய அளவில் நீரினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக அந்தக் கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஆலங்குளம் கிராமம் வங்றட்சியானதொரு பிரதேசமாகும். இங்கு மக்கள் குடியேறிய காலம் முதல், தமக்கான நீரினைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இவ்வாறானதொரு நிலையில், 08 வருடங்களுக்கு முன்னர், ஆலங்குளம் கிராமத்துக்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டன.

ஆலங்குளம் கிராமத்தில் தற்போது 336 குடும்பங்கள் உள்ளன. அந்தக் கிராமத்தில் மொத்தமாக 1134 பேர் வாழ்கின்றனர். இங்கு பெருமளவான குடும்பங்கள் நீர் இணைப்பினைப் பெற்றுள்ளன.

ஆயினும், நீர் இணைப்பின் மூலம் தமக்கு போதியளவான நீர் கிடைப்பதில்லை என்று இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். மிகக் குறைவான அளவு கிடைக்கும் நீரைக்கொண்டு, தமது நாளாந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளதாகவும் இந்தக் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த நோன்பு மற்றும் ஹஜ் பெருநாள் தினங்களில், ஆலங்குளம் கிராமத்துக்கான நீர் விநியோகம் முற்று முழுதாக நிறுத்தப்பட்டமையினால், அக்கிராம மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக கவலையோடு கூறுகின்றனர்.

ஆலங்குளம் கிராமத்துக்கு நீரை போதியளவு வழங்கும் வகையில், அமைக்கப்பட்டிருந்த நீர் உந்து நிலையத்திலுள்ள இயந்திரமொன்று பழுதடைந்தமை காரணமாகவே, ஆலங்குளம் பகுதி மக்கள் – நீரை தேவையான அளவு பெற்றுக் கொள்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக இங்குள்ளவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறாயினும், பல வருடங்களாக முகம்கொடுத்து வரும் இந்தப் பிரச்சினை தொடர்பில், உரிய அதிகாரிகளிடம் ஆலங்குளம் மக்கள் பல தடவை முறைப்பாடு செய்திருந்தும், தமக்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இங்குள்ள மக்களுக்கு நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளபோதும், தமக்குத் தேவையான அளவு நீரைப் பெற்றுக்கொள்ள முடியாத தற்போதைய நிலைக்கு, தீர்வினைப் பெற்றுத் தருமாறு, ஆலங்குளம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.water-issue-03 water-issue-02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்