திருகோணமலையில் கிழக்கின் எழுச்சி
– எப். முபாரக் –
கிழக்கின் எழுச்சி – 2016 எனும் தலைப்பில் திருகோணமலையில், நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள கண்காட்சி மற்றும் விற்பனை தொடர்பில், ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும், சந்திப்பு நேற்று புதன்கிழமை கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் தலைமையில் நடைபெற்ற இச் சந்திப்பில்,விவசாய கால்நடை நீர்பாசன மீன்பிடி கூட்டுறவுத்துறை கண்காட்சியும் விற்பனையும் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
திருகோணமலை சம்பூர் மகா வித்தியாலயத்தில் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரை, இக் கண்காட்சி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்தக் கண்காட்சியினை, விவசாயம், கால்நடை,மீன்பிடி, நீர்பாசனம் மற்றும் கட்டுறவுத்துறை ஆகிய ஐந்து திணைக்களங்கள் இணைந்து நடத்துகின்றது.
இதன் ஆரம்ப நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன் கலந்து கொண்டு, கண்காட்சியினை வைபவ ரீதியாக திறந்து வைப்பார் என்று, மாகாண விவசாய அமைச்சர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், கைத்தொழில்களில் ஈடுபடுவோர் இந் கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டள்ளது.