ஆட்சி மாறாமல் போயிருந்தால், தீர்ப்பு வேறாக இருந்திருக்கும்: ஹிருணிகா

🕔 September 8, 2016

hirunika-011ட்சி மாற்றம் நிகழாமல் போயிருந்தால், பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கு தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு வேறாக இருந்திருக்கக் கூடும் என்று, பாரத லக்ஸ்மனின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

மேற்படி கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 05 பேருக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு ஹிருணிகா கூறினார்.

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்;

“கொல்லப்பட்ட எங்கள் அப்பாவை நினைத்து நாங்கள் அழாத நாட்கள் இல்லை.
நீதி கேட்டு இந்த நீதிமன்ற வாசலுக்கு  நானும், அம்மாவும் அடிக்கடி வந்தோம்.

எங்களுக்கு நீதி கிடைத்துள்ளது. ஆனால் இன்னொரு உயிரை எடுக்கும் வகையில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை வரவேற்குமளவுக்கு, நாங்கள் மனிதாபிமானம் அற்றவர்களல்லர்.

இதேபோன்று – கொல்லப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, எக்னெலிகொட மற்றும் வசிம் தாஜுதீன் போன்றோரின் குடும்பத்துக்கும் நீதி கிடைக்கவேண்டும்.

புதிய அரசாங்கத்தின் கீழ் நீதித்துறையின் சுயாதீனம் பேணப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த நீதி சாத்தியப்பட்டிருக்கிறது.

சிலவேளை இந்த அரசாங்கம் ஆட்சியில் அமராமல் போயிருந்தால், இந்த தீர்ப்பு வேறாக இருந்திருக்கக் கூடும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்