ஒலுவில் துறைமுகத்துக்காக காணிகளை இழந்தோரின் நட்டஈடு தொடர்பில், டக்ளஸ் கேள்வி

🕔 August 25, 2016

Douglas Devananda  - 01லுவில் துறைமுக நிர்மாணத்தின் பொருட்டு காணிகளை இழந்து, அதற்குரிய நட்டஈட்டினைப் பெற இயலாமல் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கான நட்டஈட்டினை, உடன் வழங்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளனவா என்று, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை, துறைமுகங்கள் அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிடம்சபையில் கேள்வியெழுப்பினார்.

நட்டஈடு வழங்கப்படவில்லை எனில் அதற்கான தடைகள் பற்றி கூறுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய தேவானந்தா இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

“கடலரிப்பிலிருந்து ஒலுவில் கிராமத்தைக் கப்பாற்றக்கூடிய வகையிலும், உவர் நீர் உட்புகுவதைத் தடுக்கும் வகையிலும் ஏதேனும். நடவடிக்கைகள் முன்னெடுக்கபடுகின்றனவா என்பது பற்றி அறியத்தர முடியுமா?

அம்பாறை மாவட்டத்தில், அட்டாளச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள ஒலுவில் கிராமத்தில் விவசாயம் மற்றும் கடற்றொழிலை ஜீவனோபாயமாகக் கொண்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கிராமிய பொருளாதார முறையின் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இக் கிராமமானது, தென்னை வளச் செய்கையிலும் சிறந்து விளங்குகிறது.

இந்த நிலையில், இப்பகுதியில் துறைமுகம் ஒன்றினை அமைப்பதற்கான ஆரம்பப் பணிகள் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம். எச். எம். அஷ;ரபினால் 1998 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் டென்மார்க் அரசின் 46.1 மில்லியன் யூரோ வட்டியில்லாக் கடனைக்கொண்டு, நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2013ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இந்த இடத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அஷ்ரப், அப்பகுதி மக்களுக்கு ஆற்றியுள்ள மகத்தான சேவைகளை, இந்த சந்தர்ப்பத்தில் நான் நினைவு கூரவேண்டும்.

இத் துறைமுகத்தை ஏற்றுமதி துறைமுகமாக விருத்தி செய்வதன் மூலமாக, 1000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பினை வழங்க முடியுமென்றும், 2015ம் ஆண்டாகும்போது சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியுமென்றும் அப்போது கூறப்பட்டது. எனினும், இத் துறைமுகமானது இதுவரையில் பயன்படுத்தப்படாமலுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உட்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

துறைமுக பணிகளுக்காக கடல் நீரேந்து பரப்பை பாரிய பாறாங்கற்களைக் கொண்டு மூடியதன் காரணமாக ஏற்பட்ட கடலலை நகர்வுகள், துறைமுகத்தை அண்டிய பகுதிகளையும் ஆட்கொண்டுள்ளதாகவும், இதன் தொடர் கடலலை அரிப்பு விளைவுகளால் சுமார் 600 மீற்றர் நிலப்பரப்பினையும், அதனை அண்டிய தென்னை நிலங்களையும் கடல் உட்கொண்டுள்ளதாகவும், விவசாய கால்வாய்களை கடல் நீர் ஆக்கிரமித்ததன் காரணமாக பயிர் நிலங்கள் அனைத்தம் உவர்த் தன்மையினை அடைந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

இதன் தாக்கத்தை தடுக்கும் வகையில் 2011ம் ஆண்டில் இலங்கை துறைமுக அதிகார சபையினால் 150 மீற்றர் நிலப்பரப்புக்கு தடுப்பு அணை அமைக்கப்பட்ட போதிலும், கடலரிப்பினை நிறுத்த இயலாதுள்ளதாகவே கூறப்படுகிறது.

இந்த நிலையில், துறைமுகம் அமைக்கப்படுவதற்கான முன்னாய்வு அறிக்கை மற்றும் சுற்றாடல் தாக்க அறிக்கை என்பன சரியான முறையில் பின்பற்றப்படாத நிலையிலேயே, இத் துறைமுகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடலரிப்பிலிருந்து ஒலுவில் கிராமத்தைக் கப்பாற்றக்கூடிய வகையிலும், உவர் நீர் உட்புகுவதைத் தடுக்கும் வகையிலும், ஏதேனும் நடவடிக்கைகள் முன்னெடுக்கபடுகின்றனவா என்பது பற்றி அறியத்தர முடியுமா?

ஒலுவில் துறைமுகம் ஏற்றுமதி துறைமுகமாக மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளனவா என்பது பற்றி அறியத்தர முடியுமா?

2008ஆம் ஆண்டளவில் 48 பேரினது தனியார் காணிகள் இத் துறைமுக பணிகளுக்காக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டதாகவும், இதில், 32 பேருடைய காணிகள் 2009ஆம் ஆண்டில் அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தால் விலை மதிப்பீடு செய்யப்பட்டதாகவும், இதில் 19 பேருக்கு ஒரு பேர்ச்ச் காணிக்கு 30,000 ரூபா வீதம் நட்டஈடு வழங்கப்பட்டதாகவும், ஏனைய 16 பேருடைய காணிகள் தொடர்பில் இதுவரை விலை மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும், விலை மதிப்பீடு செய்யப்பட்டவர்களில் 13 பேருக்கு இன்னும் நட்டஈடுகள் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

தங்கள் காணிகளை இழந்து அதற்கான உரிய நட்டஈட்டினைப் பெற இயலாமல் பாதிக்கப்பட்டுள்ள மேற்படி நபர்களுக்கான நட்டஈட்டினை உடன் வழங்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளனவா?

இல்லை எனில் அதற்கான தடைகள் பற்றி கூற முடியுமா?

மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்கள் வழங்குவாரென எதிர்பார்க்கின்றேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்