மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் விவகாரம்; பசீரின் கடிதம் ‘வேலை’ செய்கிறது

🕔 August 20, 2016

SLMC - Letter - 01ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்கிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸாம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, உயர்பீட உறுப்பினர்களுக்கு கட்சியின் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் அறிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 03 ஆம் திகதி நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தின் பின்னர், நடைபெறும் உயர்பீடக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, 03 மாதங்களும் 20 நாட்களும் கடந்த பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி உயர்பீடக் கூட்டம் நடைபெறவுள்ளது.

குறித்த உயர்பீடக் கூட்டத்தில், கட்சியின் தமையகமான தாருஸ்ஸலாம் கட்டிடம் மற்றும் கட்சியின் சொத்துக்களைப் பராமரிப்பதற்காக நிறுவப்பட்டுள்ள லோட்டஸ் நம்பிக்கை நிதியம் தொடர்பில் பேசப்படவுள்ளதாகவும், உயர்பீட உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உயர்பீட உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கூட்ட அழைப்பிதழுடன், ‘தாருஸ்ஸலாம்: சமகால நிலைமைகள் பற்றிய சுருக்கமான கருத்துரை’ எனும் தலைப்பிலான 06 பக்கங்களைக் கொண்ட பிரசுரமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மு.காங்கிரசின் தலைமையகக் கட்டிடம் தாருஸ்ஸலாம் மற்றும் கட்சியின் சொத்துக்கள் தொடர்பில், தவிசாளர் பசீர் சேகுதாவூத் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் வெளியிடத் தொடங்கியமையினை அடுத்து, அது தொடர்பில் உயர்பீடக் கூட்டத்தில் பேசுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதோடு, மேற்படி பிரசுரமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த பிரசுரத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் நாளை ‘புதிது’ செய்தித்தளத்தில் வெளியிடப்படும்.

Comments