தீர்வு விவகாரத்தில் மு.கா.வுக்குள் குழப்பம்; நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த வேண்டும்: அஸ்மி ஏ கபூர்

🕔 August 16, 2016

Azmi - 0123னப் பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ், தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் – தேசிய காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் வேண்கோள் விடுத்துள்ளார்.

அதேவேளை, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமா, அல்லது பிரிந்திருக்க வேண்டுமா என்கிற விவகாரத்திலும் மு.காங்கிரஸ் தனது முடிவினை தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்திருக்க வேண்டும் என்கிற முடிவிலுள்ள சம்பந்தன் ஐயாவோடு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கைகோர்க்கும் நிலையினைக் காண முடிகிறது. ஆனால், வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பாக, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண பிரமுகர்கள், தலைமையின் நிலைப்பாட்டுக்கு மாறான முடிவுகளில் உள்ளனர். அவர்களின் அறிக்கைகள் மூலமாக இதனை விளங்கிக் கொள்ள முடிகிறது

மு.காங்கிரசின் சிரேஷ்ட பிரதித்தலைவர் ஒருவர், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணையக் கூடாதென அண்மையில் வலியுறுத்தியிருந்தார். அதேபோல், அந்தக் கட்சியின் பிரதித்தலைவர்களில் ஒருவரும் – பிரதி அமைச்சராகவுமுள்ள ஒருவர்கூட, இதுதொடர்பில் தன்னுடைய நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தார்.

மு.காங்கிரசின்  மாகாணசபை உறுப்பினர் ஒருவர்கூறுகையில்; சம்பந்தன் மற்றும் ஹக்கீம் உரையாடலுக்கு அப்பால், வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெற்று நிறைவேற்றப்படும் விடயமாகும் என்று கூறியிருந்தார். மேலும், வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பில் ஐ.தே.கட்சி என்ன நிலைப்பாட்டை எடுத்தாலும், ஐ.ம.சு.கூட்டமைப்பு, இணைப்புக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை என்றார்.

அதேபோல், வடமாகாண பிரதிநிதி ஒருவர் வடக்கு – கிழக்கு  இணைக்கப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை வலியுறுத்தியிருந்தார்.

இவை அனைத்தினையும் ஒட்டுமொத்தமாக நோக்கும் போது,  முஸ்லிம்களின் தீர்வு விடயத்தில், மு.காங்கிரசினால் ஒரு தெளிவான நிலைப்பாட்டினை எடுக்க முடியாத நிலைவரம் உள்ளமையினைப் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.

எனவே, முஸ்லிம் காங்கிரஸ் கட்சி – உடனடியாக தமது நிலைப்பாட்டை  மக்கள்  முன் வைக்க வேண்டும். இனப்பிரச்சினை தொடர்பில் தெளிவான முன்மொழிவுகளை அறிவிக்க வேண்டிய கடப்பாட்டில் அந்தக் கட்சி உள்ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் வடக்கு – கிழக்கு இணைப்பு போன்ற விவகாரங்களில், ஏற்கனவே தேசிய காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமான அறிவித்துள்ளது. வடக்கு – கிழக்கு பிரிந்திருக்க வேண்டிய அவசியத்தினையும், அதனூடாகவே முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்கின்ற நிலைப்பாட்டினையும் தேசிய காங்கிரஸ் வெளிப்படுத்தியுள்ளது.

ஆகவே,  இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தும்,  வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தொடர்பிலும்,  முஸ்லிம் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டினை உடனடியாக வெளியிட வேண்டியது உடனடித் தேவையாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்