அறுகம்பே: கரையேற முடியாதவர்களின் கதை

🕔 August 11, 2016

Article - Risad - 087– றிசாத் ஏ காதர் –

பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அறுகம்பே பிரதேசம் இலங்கையில் மட்டுமன்றி, உலகளவிலும் உச்சரிக்கப்படுகின்ற ஓர் இடமாகும். அறுகம்பே என்பது, உல்லாசப் பயணத்துறைக்கு பெயர்போன இடமாக இருப்பினும், இங்கு வாழ்கின்ற மக்கள் இன்னும் தமது பாரம்பரிய தொழிலான கடற்றொழிலை தொடர்ந்தும் செய்து வருகின்றனர். சுமார் 150 வருடங்களாக இங்கு மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றவர்களின் தொழிலும் தொழில் செய்யும் இடங்களும் கடந்த ஓரிரு தசாப்தங்களாக இங்கு பிரசித்திபெற்ற உல்;லாசத்துறையில் ஈடுபடுகின்றவர்களால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளன.

அறுகம்பே பிரதேச மக்கள் கடற்தொழிலை மேற்கொள்ளும்போது ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தனர். இப்போது, அந்தப் பிரச்சினைகள் இன்னும் அதிகரித்துள்ளன.
இவர்களின் தொழிலில் எண்ணிக்கையற்ற கஷ்டங்கள் உள்ளன. இவர்கள் தொழில் செய்யும் இடங்களை ஒருபுறம் கடலரிப்பு காவு கொண்டு வருகிறது. மறுபுறம் உல்லாச விடுதி உரிமையாளர்கள் ஆக்கிரமித்து விட்டதாக, இங்குள்ள தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடல் அரிப்பு காரணமாக மீனவர்களின் வாடிகள் அழிவடைந்துள்ளன. சற்று நகர்த்தி வாடிகளை அமைப்பதற்கும் இடமில்லை. உல்லாச விடுதி உரிமையாளர்கள் வேலிகளை அமைத்து, மீனவர்கள் தொழில் செய்யும் நிலத்தை ஆக்கிரமித்து விட்டனர். இவை இரண்டுக்கும் இடையில் சீரழிகிறது மீனவர் வாழ்க்கை.

மூவின மக்களும் தொழில் புரியும் இப்பிரதேசத்தில் 167 வெளி இணைப்பு இயந்திரப்படகுகளும், இயந்திரங்கள் பூட்டப்பட்ட 15 பாரம்பரிய தோணிகளும் தொழிலில் ஈடுபடுகின்றன. கரவலை மீனவர்களும் இங்கு தொழில் புரிகின்றார்கள். இவற்றினூடாக 500க்கும் மேற்பட்டோர் தொழிலை மேற்கொண்டு, தங்களது வாழ்வை ஓட்டிச் செல்கின்றனர்.

அறுகம்பே பிரதேசத்தில் கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கான தொழில் இடங்கள் அளவீடு செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கரையோரம் பேணல் திணைக்களம் மற்றும் கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியவை கடற்றொழிலாளர்களுக்கான இடங்களை இவ்வாறு அளவீடு செய்து வழங்கியுள்ளன. ஆனால், இப்படி வழங்கப்பட்ட இடங்களை, உல்லாச விடுதி உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புச் செய்துள்ளதாக அங்குள்ள மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கரையில் இருந்து 10 மீற்றர் தூரத்திற்குள் எந்த ஒரு கட்டிட நிர்மாண வேலைகளும் செய்யமுடியாது என்றும், அது மீனவர்களுக்கான பிரதேசம் எனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும், இங்கு சட்டவிரோதமாக வேலிகளும், கட்டிடங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவைபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் எதுவித நடவடிக்கையும் இதுவரையில் இடம்பெறவில்லை எனவும் மீனவர்கள் கூறுகின்றார்கள்.

கரைவலை மீனவர்களுக்கென்று 91 மீற்றர் நீளமும் 346 மீற்றர் அகலமும் கொண்ட நிலப்பரப்பு, கடற்கரையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இடமும் தொழில் செய்ய முடியாதபடி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிலை மேற்கொள்ள முடியாமல் தினமும் கடற்றொழிலாளர்கள் நெருக்குவாரங்களை எதிர்கொள்கின்றனர்.

அறுகம்பே பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு கரையிலிருந்து 10 மீற்றர் நிலப்பரப்பு தொழிலிடமாக ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும், அந்த இடம் இப்போது இல்லை. 15 அடிக்கும் குறைவான நிலப்பரப்பினுள்ளேதான் மிக்க சிரமத்துடன் மீனவர்கள் தொழில் புரிவதனை அவதானிக்க முடிகின்றது.

தங்களது வலைகளை விரித்து உலர வைக்க முடியாமல் உள்ளதாகவும், வள்ளங்களை முறையாக தரித்து வைக்க முடியாமல் சிரமப்படுவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

‘உல்லாச விடுதி உரிமையாளர்கள் தடுப்புச் சுவர்களையும், வேலிகளையும் அமைத்து எமது தொழிலுக்கான வசதிகளை இல்லாமல் செய்து விட்டனர். மேலும், கரையோரங்களில் உல்லாச பயணிகள் ஓய்வெடுப்பதற்கான வசதிகளை விடுதி உரிமையாளர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளமையினால், எமது தொழிலை இடையூறின்றி மேற்கொள்ள முடியாமல் உள்ளது’ என்று படகு உரிமையாளர் ஒருவர் கூறினார்.

உல்லாசத் துறையுடனோ, விடுதி உரிமையாளர்களுடனோ தமக்கு எதுவித முரண்பாடுகளும் இல்லை என்று இங்குள்ள மீனவர்கள் கூறுகின்றனர். ஆயினும், தமது தொழிலை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்வதற்காக, அரசாங்கத்தினால் தமக்கு ஒதுக்கப்பட்ட இடத்தினை, மீளவும் தமக்குப் பெற்றுத் தரவேண்டும் என்று கோருகின்றனர்.

இத்தோடு, தமது படகுகளை பதுகாப்பாக நிறுத்திவைப்பதற்கான, படகுத் தரிப்பிடமொன்றினை அமைத்துத் தருவதற்கும், அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் இப்பகுதி மீன்வர்கள் கோருகின்றனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள மீனவர் பகுதிகளில் பல்வேறு வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்துள்ளபோதும், அறுகம்பே பிரதேச மீனவர்களுக்கு எதுவித வசதிளும் இதுவரை கிட்டவில்லை. இங்குள்ள மீனவர்களுக்கு ஓய்வு வசதிக்கான கட்டிடங்கள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் என, பல்வேறு தேவைகள் இருந்தும், எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. ‘மனிதனின் அடிப்படைத் தேவையான குடிநீரைப் பெறுவதற்கான வசதிகள் கூட எமக்கு செய்து தரப்படவில்லை’ என்கிறார் இங்குள்ள ஒரு மீனவத் தொழிலாளி.

தொழில் என்பது வாழ்வாதாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும். தனது வாழ்க்கையை நடத்துவதற்காக, ஒரு மனிதன் தேடிக்கொள்ளும் வருமானத்தினை தடுப்பது பெரும் பாவமாகும். உயிரை துச்சமென நினைத்து, வயிற்றுப் பசி தீர்க்க கடலுக்குச் செல்கின்ற மனிதனை, கரையிலும் கஷ்டப்படுத்துவதென்பது மனச்சாட்சியற்ற நடவடிக்கையாகும்.

பல்வேறு வழிகளிலும் நெருக்குவாரங்களை எதிர்கொள்கின்ற அறுகம்பே பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு, இந்த நல்லாட்சி அரசு நல்லதொரு தீர்வினை பெற்றுத் தர முன்வரவேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாகும்.

பல்வேறுபட்ட சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதில் தற்போதைய அரசு தீவிர கரிசனை காட்டி வருகின்றமைபோல், அறுகம்பே பிரதேச மீனவர்களின் தொழிலிடங்களை ஆக்கிரமித்துள்ளவர்களை, அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், மீனவர்களின் பாரம்பரிய தொழிலிடங்கள், மீளவும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதே இம்மக்களின் கேரிக்கையாகும்.

நன்றி: விடிவெள்ளிPottuvil issue - 01 Pottuvil issue - 10 Pottuvil issue - 06 Pottuvil issue - 04 Pottuvil issue - 12 Pottuvil issue - 15

Comments

புதிது பேஸ்புக் பக்கம்