அட்டாளைச்சேனை பொது நூலகம்: அமைதியும், இரைச்சலும் சேருமிடம்

🕔 August 7, 2016

Article - Rishad - 094
– றிசாத் ஏ காதர் –

வாசிப்பு ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றது. வாசிப்பு பழக்கம் இல்லாதவன் குறை மனிதன் என்றெல்லாம் பல பழமொழிகள் உள்ளன. அறிவுத்தாகம் கொண்டோருக்கான புகலிடம் வாசிகசாலைகளாகும். வாசிப்புப் பழக்கத்தினை மக்களிடம் விருத்தி செய்யும் வகையில், வாசிகசாலைகளை அரசாங்கமும் அமைத்துக் கொடுத்து வருகின்றன.

இவ்வாறான வாசிகசாலைகள் எப்படியான சூழலில் காணப்பட வேண்டும், அதற்கான ஒழுங்குகள் எவ்வாறானவை என்றெல்லாம் நிறையவே வரையறைகள் காணப்படுகின்றன. வாசிகசாலைகளில் அமைதி முக்கியமானது. கவனச் சிதறலற்ற போதுதான் ஆழ்ந்த வாசிப்பு சாத்தியமாகிறது. அதனால்தான், எல்லா வாசிகசாலைகளிலும் ‘அமைதியை பேணவும்’ என்கிற வாசகங்களைக் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பொது நூலகத்தோடு இணைந்த வாசிகசாலையின் சூழல் தொடர்பாக, அங்கு வருகின்ற வாசகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சில விடயங்களை இங்கு பதிவுசெய்ய வேண்டியுள்ளது.

அட்டாளைச்சேனை பொது நூலகத்தோடு இணைந்த வாசிகசாலையானது இப்பிரதேசத்தின் அறிவுத் தேடலுக்கான ஒரு மையமாக காணப்படுகின்றது. இப் பிரதேசத்தில் அதிகரித்த சனத்தொகைப் பரம்பல் காரணமாக, அட்டாளைச்சேனையில் மேலும் சில இடங்களில் வாசிகசாலைகள் நிறுவப்பட்டிருந்தாலும், அவை – அட்டாளைச்சேனை பொது நூலகத்துடன் இணைந்த வாசிகசாலையின் பணியினை மேற்கொள்ள முடியாதவையாக உள்ளன. ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள மேலதிக வாசிகசாலைகள், தினசரிப் பத்திரிகைகளை மட்டும் வாசிக்கின்ற இடங்களாகவே உள்ளன.

பல்வேறு துறைசார்ந்த புத்தகங்களை தன்னகத்தே கொண்டுள்ள அட்டாளைச்சேனை பொது நூலகத்தில் – இரவலுக்கும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அதேவேளை, இங்குள்ள புத்தகங்களை எடுத்து, வாசிகசாலையில் வைத்துப் படித்து விட்டு, அங்கேயே ஒப்படைத்து விட்டுச் செல்லும் வகையிலான முறைமையும் உள்ளது. மேலும், அனைத்து வகையான பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளும் வாசிப்புக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில், இங்கு வருகின்ற வாசகர்கள் – இந்த வாசிகசாலையின் சூழல் தொடர்பாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

ஒருபுறம் அமைதியற்ற சூழல் காணப்படுவதுடன், வாசிகசாலையில் தங்களது நேரங்களை செலவழிக்கமுடியாதளவுக்கான துர்நாற்றம் வாசிகசாலையினை முற்றாக ஆக்கிரமித்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டும் வாசகர்களிடையே காணப்படுகின்றது.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலுள்ள மக்கள் மட்டுமன்றி, இங்குள்ள கல்வி நிறுவனங்களில் பயில்வோரும் – இங்குள்ள பொது நூலகத்துக்கும், அதனோடிணைந்த வாசிகசாலைக்கும் வருகை தருகின்றனர். அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தேசிய கல்விக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை மற்றும் கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி என, பல்வேறு கல்வி நிறுவனங்கள் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை பொது நூலகத்துடன் இணைந்த வாசிகசாலை அமையப்பெற்றுள்ள சூழலில், ஏலவே காணப்பட்ட அமைதியான சூழல் தற்போது இல்லாமல் போய்விட்டது. சனப்பரம்பலின் விருத்தியின் விளைவாக ஊரின் மையப்பகுதியான அவ்விடம் தற்போது சந்தை சதுக்கமாக மாற்றமடைந்துள்ளது. இவ்வாறான நிலையில், வாசிகசாலை தொடர்ந்தும் அவ்விடத்திலேயே காணப்படுவது, பல்வேறு அசௌகரியங்களையும் வாசகர்களுக்கு ஏற்படுத்தும் நிலையினை உருவாக்கியுள்ளது.

வாசிகசாலையின் கட்டிடத்தை ஒட்டியதாக, மீன் விற்பனைக்கான இடம் உள்ளது. மீன்களை வைத்து விற்பனை செய்யும் வியாபாரிகளும், வாகனங்களில் மீன்களை அவ்விடத்துக்குக் கொண்டு வருகின்றவர்களும், சத்தமான குரலில் கூவி வியாபாரம் செய்கின்றனர். இச் சூழ்நிலையானது இங்குள்ள வாசகர்களுக்கு பெரும் இடைஞ்சலை ஏற்படுத்துவதோடு, எதையும் வாசித்து கிரகித்துக்கொள்ள முடியாத நிலையினை ஏற்படுத்துகிறது. அநேகமாக சனி மற்றும் ஞாயிறு ஆகியவை அரசாங்க விடுமுறை தினம் என்பதால் வாசிகசாலைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாகும். ஆனால், மேற்படி இரு தினங்களிலும் அருகிலுள்ள சந்தை சதுக்கத்திலும் வியாபாரிகளும், சனத்திரளும் பெருமளவில் கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரமன்றி, வாசகசாலைக்கு வருவோர் தமது வாகனங்களை நிறுத்தி வைப்பதற்குரிய இடமற்றதொரு நெருக்கடியான சூழல் அவ்விடத்தில் காணப்படுவதாகவும் வாசகர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறானதொரு சூழலில் அமையப்பெற்றுள்ள இந்த வாசிகசாலையில், எவ்வாறு – ஆழ்ந்த வாசிப்பினையும், அதனூடாக அறிவினையும் பெற்றறுக்கொள்ள முடியும் என்பது பாரிய வினாவாக உள்ளது.

அரசியல்வாதிகளுக்கு எவ்வாறான விடயங்களில் இலாபமுள்ளதோ, அவ்வாறான விடயங்களில்தான், அவர்கள் அதிக அக்கறை செலுத்துகின்றார்கள். ஆனால், அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் அறிவு மேம்படவேண்டும் என்கின்ற விடயத்தில், இங்குள்ள அரசியல்வாதிகளின் கவனம் சற்றேனும் திரும்பவில்லை என்று, இங்கு வருகின்ற வாசகர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.

இன்னொருபுறம், இங்குள்ள வியாபாரிகளுக்கும் இங்குள்ள சந்தை அமைப்பு தொடர்பில் கடுமையான அதிருப்திகள் உள்ளன. இது தொடர்பில் மீன் வியாபாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்ளூ ‘சந்தைச் சதுக்கம் என்கிற பெயரில் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடமானது, ஒரு சந்தைக்கான முழு அமைப்புடன் அமைக்கப்படவில்லை. ஒரு சந்தைக்குரிய எந்த வசதிகளும் இங்கு செய்து கொடுக்கப்படவில்லை. ஆனால், இங்குள்ள வியாபாரிகளிடம் அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் வரி அறவிடுகின்றனர்’ என்றார்.

சந்தைச் சதுக்கமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிதான், வியாபாரிகளுக்கும் பொருத்தமான இடமாகும். இவ்விடமானது ஊரின் மத்திய பகுதி என்பதாலும், வாங்குவோருக்கும் – விற்பவர்களுக்கும் சௌகரியமான இடமாகும். ஆனாலும், சந்தைக்குரிய எந்தவித வசதிகளும் இங்கு செய்து கொடுக்கப்படவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர், இங்குள்ள மீன் வியாபாரிகளின் இடமானது, சுகாதார அச்சுறுத்தல்கள் நிறைந்து காணப்பட்டது. இதனையடுத்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் மீன் விற்பனையாளர்களுக்கென ஒரு தளம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால், இங்குள்ள மீன் வியாபாரிகளின் எண்ணிக்கைக்கு போதுமானதாக, அந்தத் தளம் இல்லை எனக் கூறப்படுகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் அமைக்கப்பட்டுள்ள சந்தைக் கட்டிடத் தொகுதியானது, பொருத்தமான சாதக அறிக்கை பெறப்பட்டு அமைக்கப்பட்டடிருந்தால், இப்போதுள்ள பிரச்சிகைள் ஏற்பட்டிருக்கவே மாட்டாது என பொதுமக்கள் கூறுகின்றனர். பொருத்தமான இடத்தில் பொருத்தமற்ற கட்டிடம் அமையப்பெற்றுள்ளமையினாலேயே, இங்கு பல்வேறு பிரச்சினைகளும், அசௌகரியங்களும் உருவாகியுள்ளன.

எவை எவ்வாறிருந்த போதிலும், அறிவைப் பெறுவதற்கான சூழலானது, அமைதி நிறைந்து காணப்படுதல் வேண்டும். அமைதியான பகுதிகளைத்தான் அறிவைப் பெறவதற்கான இடங்களாகத் தெரிவு செய்வார்கள். ஆகவே மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கல்வியலாளர்கள் என்று எல்லோரையும் தன்னகத்தே கொண்டு அறிவுப்பணி செய்கின்ற பொது நூலகத்துடன் இணைந்த வாசிகசாலையின் அமைவிடம், அதற்குப் பொருத்தமான இடமொன்றுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டிய தேவை இங்கு எழுந்துள்ளது.

அரசியல்வாதிகளுக்கு ஆட்சியதிகாரங்கள் கிடைக்கப்பெறுவது மக்கள் பணி செய்வதற்காகத்தான். அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில், ஆட்சியதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகள், மேற்படி பணியினை செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்குத் தவறும் அரசியல்வாதிகளை, பின்னர் மக்கள் திட்டித் தீர்க்கும் நிலை உருவாகும்.

ஆகவே, இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும்.

அறிவைப்பெறுவதற்கு பொருத்தமான ஒரு சூழலில் வாசிகசாலை ஒன்றினை அமைத்துக் கொடுத்தல் என்பது, இறை பணிக்கு நிகரானது.

நன்றி: விடிவெள்ளிLibrary - 004 Library - 002 Library - 003 Library - 006

Comments

புதிது பேஸ்புக் பக்கம்