சேதமில்லாத விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்: அமைச்சர் ஹக்கீம்
🕔 July 20, 2016



சேதமில்லாத விட்டுக்கொடுப்புக்களை செய்யவேண்டிய கட்டத்தில், இன்று நாம் இருக்கின்றோம். சேதமில்லாத விட்டுக்கொடுப்பு என்பது பரந்து விரிந்த ஒருவிடயம். தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில், இணக்கப்பாடுகள் பற்றி பேசவேண்டிய பல விடயங்கள் உள்ளன. ஆனால் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை இறுதியில் பேசுவோம் என்ற நிலைப்பாட்டில் பொறுமையாக உள்ளோம் என்று, மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ் பேசும் சமூகம் தம்முடைய அடைவுகளை அடைந்துகொள்கின்ற அணுகுமுறைகளில் மாற்றங்களை செய்யவேண்டிய அவசியமுள்ளதெனவும் அவர் கூறினார்.
தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசிதம்பரத்தின் 93ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வு, கரவெட்டி கரவை தச்சை ஐங்கரன் அறநெறிப்பாடசாலை மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
“இன்று வடக்கில் இராணுவம் நிலைகொண்டிருக்கின்ற காணிகளை விட்டு அகலவேண்டுமென கோருகின்றபோது, தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல்தான் அதனைச் செய்யமுடியும் என கூறுகின்ற மனப்பாங்கு தென்னிலங்கையில் காணப்படுகிறது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் எனக் கூறுகின்றபோது எங்கே அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள்? அரசியல் கைதிகள் என்று யாரையும் அடைத்து வைக்கவில்லை. பயங்கரவாதிகளே உள்ளார்கள் என தெற்கில் குறிப்பிடுகிறார்கள்.
சமஷ்டியை வலியுறுத்தும்போது, நாடு பிரிவினைக்குச் செல்கின்றதென கூறுகிறார்கள். அத்தோடு, இராணுவம் குற்றமிழைக்கவில்லையென்றும், சிவிலியன்கள் உயிரிழக்கவில்லையென்றும் குறிப்பிகிறார்கள். தெற்கின் நிலைப்பாடு இவ்வாறுதான் உள்ளது.
நடந்து முடிந்த யுத்தத்தின்போது மீறப்பட்ட மனித உரிமைகளை விசாரிக்க வேண்டுமென நாம் அடம்பிடிக்கின்றோம். தென்னாபிரிக்காவில் என்ன நடந்தது? தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்ற முயற்சியில், மிக சொற்பமானவர்களையே விசாரிக்க முடிந்தது. அவர்களுக்கும்கூட பொதுமன்னிப்பை வழங்கவேண்டிய சூழலே இருந்தது. ஆகவே, உண்மையை தேடும் முயற்சியானது, இன்றோ நாளையோ முடிவுபெறும் விடயம் அல்ல. நல்லிணக்கம் என்பது இரவோடு இரவாக நாம் அடைந்துகொள்ளும் விடயமல்ல. எனினும் நடைமுறைச்சாத்தியமான விடயங்களைத்தான் எங்களால் செய்யமுடியும்.
இரண்டு தரப்புக்களும் தமது துருவப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து ஒரு மத்திய நிலைக்கு வந்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும். அந்த இணக்கப்பாட்டினை செய்வதற்காக நடந்து முடிந்த எல்லா அநியாயங்களுக்காகவும் நீதி வேண்டும், நியாயம் வேண்டும், தீர்வு வேண்டும் என்பது சாத்தியமாகாது” என்றார்.


Comments



