கிழியும் முகத்திரை

🕔 July 15, 2016
Article - Rifan - 08976
ரு சமூகத்தின் மேம்பாட்டிற்காக பல நிறுவனங்கள் அச்சமூகத்தில் தோற்றுவிக்கப்படும். அவ்வாறு நிறுவப்படும் நிறுவனங்கள் தமது சமூகப் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். சில நிறுவனங்கள் ஆரம்பத்தில் சமூகம் போற்றும் வகையில் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளும். பின்னர் ஊழல்கள் நிறைந்தவையாக மாறிவிடும். சமூகத்தின் மேம்பாட்டுக்காக தோற்றுவிக்கப்படும் நிறுவனங்களுள் அரசியல் கட்சிகள்தான் மிகவும் சக்தி மிக்கதாகவுள்ளன. ஊழல்களும் அரசியல் கட்சிகளில்தான் அதிகமாக உள்ளன. அரசியல் கட்சிக்கான சக்தியை மக்கள்தான் வழங்குகின்றார்கள். மக்கள் சக்தியில்லாத அரசியல் கட்சிகள் பேரம் பேசும் சக்தியை இழந்துவிடும். சில கட்சிகள் பேரம் பேசுதலில் சமூகத்தின் பிரச்சினைகளை மறந்து பணம் தந்தால் ஆதரவு வழங்குவோம் என்று கேட்பதுண்டு.  இன்று முஸ்லிம்கள் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன. இவற்றில் முஸ்லிம் காங்கிரஸ் அதிக விமர்சனங்களை எதிர் கொண்டுள்ளன. காய்த்த மரம்தான் கல்லெறி படும் என்பார்கள். ஆயினும், காய்க்காத குற்றம் செய்த மரங்களும் கல்லெறி படுவதுண்டு.

இந்த அரசியல் கட்சிகளில் முஸ்லிம் காங்கிரஸ் அதிக செல்வாக்கைப் பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றுள்ள இக்கட்சியின் அண்மைக்கால நடவடிக்கைகள் மிகுந்த விமர்சனங்களுக்கு உட்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, கட்சியின் பிரமுகர்களின் நடவடிக்கைகள், சமூகம் சார்ந்த விவகாரங்களில் அக்கறை காட்டாதிருக்கும் நிலை, தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களை சந்திக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், மாற்றுக் கட்சிகளை விடவும் குறைந்த அளவில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டமை, நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துக் கொள்வதில் காணப்படும் கஸ்டம், தொழில் வாய்ப்புக்களை வழங்குவதில் உள்ள குளறுபடிகள், கட்சியின் கட்டமைப்பை உறுதியாக்காமை, மக்களிடம் அளிக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, மாற்றுக் கட்சிகளில் இருந்து கட்சியை அழிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் தேர்தலுக்காக முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளும் போது, அவர்களுக்கு கட்சியில் வழங்கப்படும் பதவிகள் எனப் பல காரணங்களை முன்வைத்து மக்களிடம் – குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்களிடம் முஸ்லிம் காங்கிரஸைப் பற்றிதொரு பாரிய வெறுப்புணர்வு காணப்படுகின்றது. இந்த வெறுப்புணர்வு அண்மைக்காலமாக கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஏற்கனவே காணப்படும் வெறுப்புணர்வை அதிகரிக்கச் செய்துள்ளது.

கட்சியின் ஆதரவாளர்களிடம் காணப்படும் மேற்படி அதிருப்திகளை இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காதிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ், தமது செல்வாக்கை – நிலை நிறுத்திக் கொள்ளுமா என்பதில் பலத்த சந்தேகங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஏற்கனவே பல உடைவுகளை சந்தித்துக் கொண்ட இக்கட்சி, அதன் வரலாற்றில் மிகப் பெரிய சோதனைகளை சந்தித்துள்ளது. கட்சியின் முக்கிய பதவிகளில் உள்ளவர்களிடையே பாரிய இடைவெளிகள் காணப்படுகின்றன. கட்சியை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு சில முயற்சிகள் சிலரினால் எடுக்கப்பட்டாலும் – அம்முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. நீண்ட காலமாக வளர்ந்து கொண்டு வந்த சந்தேகங்கள், பங்கு கோடலில் திரைமறை நகர்வுகள் இடம்பெற்றமை எனப் பல விடயங்கள் இறுக்கமடைந்துள்ளமைதான் முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு காரணமாகும்.

இதனிடையே கட்சியின் உயர்பீட உறுப்பினர்களினால் முன் வைக்கப்படும் சில கருத்துக்கள் – அஸ்ரப்பினால் தோற்றுவிக்கப்பட்ட கட்சியாக இருந்தாலும், அதன் நோக்கத்தை விட்டு வேறு திசையில் சென்று கொண்டிருப்பதனால் இக்கட்சி முஸ்லிம்களுக்கு தேவைதானா என்று எண்ண வேண்டியுள்ளது. இதே வேளை, கட்சியின் ஆரம்பகால போராளிகளாக இருந்து கட்சியின் நிர்வாகிகளின் ஓரப்பார்வை காரணமாக ஒதுங்கிக் கொண்டவர்கள் – பல இன்னல்களுக்கு மத்தியில் உயிர்களை தியாகம் செய்து வளர்க்கப்பட்ட கட்சியை நாசமாக்கிக் கொண்டிருக்கின்றார்களே, குடும்பத்தின் சொத்தாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்களே என்று கவலைகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம்களின் உயிர், இரத்தம், வேர்வை, தியாகம், பற்றுதல் போன்றவைகளினாலும், நோன்பு நோற்றும் உருவாக்கப்பட்ட கட்சிதான் முஸ்லிம் காங்கிரஸ். முஸ்லிம்களின் குரலாக தோற்றுவிக்கப்பட்டது. குர்ஆன், ஹதீஸ்தான் கட்சியின் யாப்பு என்றும் பிரகடனப்படுத்தப்பட்டது. இதனால், முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்கு உலமாக்களும் பங்களிப்புச் செய்தார்கள். மர்ஹும் அஸ்ரப் நாடாளுமன்றத்தில் நூறு மணித்தியாலங்கள் குரல் கொடுத்து தன்னையும், முஸ்லிம் காங்கிரஸையும் முஸ்லிம்களின் குரல் என்று நிருபித்தார்.

பல கட்சிகளில் எடுப்பார் கைப்பிள்ளை போன்றிருந்த முஸ்லிம்களை, அஸ்ரப் அரசியல் மயப்படுத்தி முஸ்லிம் சமூகத்துக்கு அந்தஸ்து பெற்றுக் கொடுத்தார். ஆனால், இன்று இக்கட்சி குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் செயற்படாதுள்ளதாக உலமாக்கள் பலரும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்கு தயக்கம் காட்டும் கட்சியாகவும் இருக்கின்றதென்று கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். கட்சியின் நடவடிக்கைகள் கொள்கை சார்ந்தாக இல்லாது. பதவிகளையும், வருமானங்களையும் அடிப்படையாக வைத்து செயற்பட்டுக் கொண்டிருப்பதாக ஆதரவாளர்களும், ஒரு சில உயர்பீட உறுப்பினர்களும் தெரிவிக்கின்றார்கள். இந்த செயற்பாட்டால்தான் கட்சிக்குள் தற்போது முரண்பாடுகள் எற்பட்டுள்ளன.

கட்சியைப் பயன்படுத்தி சமூகத்தின் பெயரால் பல தடவை பதவியும், பொருள் தேடிக் கொண்ட கதைகள் சொல்லப்படுகின்றன. கட்சியின் முக்கியஸ்தர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், கடந்த கால பாதையில் கட்சி சந்தித்துக் கொண்ட கொள்ளைகளின் சங்கதிகள் சங்கு ஊதப்படுகின்றன.

கட்சியின் நடவடிக்கைகள் பெரும்பாலும் சமூகத்துக்கு செலவாகவும், முக்கிய புள்ளிகளுக்கு வரவாகவும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன. ஏழைகளின் கட்சியாக தோற்றுவிக்கப்பட்ட கட்சி, பணக்காரர்களை உருவாக்கியுள்ளது. மர்ஹும் அஸ்ரப்பின் கொள்கைகள் மறக்கடிக்கப்பட்டு புதிய கொள்கைகள் புகுத்தப்பட்டுள்ளன. கட்சியின் யாப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமைதான் அஸ்ரப்பின் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மாற்றமாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமின்றி ஏனைய முஸ்லிம் கட்சிகளும் அஸ்ரப்பின் கொள்கைகளுக்கு மாற்றமாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆயினும், எல்லா கட்சிகளும் அஸ்ரப்பின் கொள்கையில் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக மக்களிடம் பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இதே வேளை, முஸ்லிம் கட்சிகளின் அரசியல் நகர்வுகள் பெரும்பாலும் சமூகத்தை அடியொட்டியதாக இல்லாமல், பணவருமானங்களை ஈட்டிக் கொள்வதனை அடியொட்டி இருக்கின்றது. அரசியலில் ஈடுபடுகின்றவர்கள் பொருள் தேடிக் கொள்ளக் கூடாதென்று சொல்ல முடியாது. அவர்களின் சொத்துக்களை அழித்து சமூகப் பணி செய்ய முடியாது. அதற்காக சமூகத்திற்கு ஒரு படமும், தேசிய கட்சிகளுக்கு இன்னுமொரு படமும், உயர்பீட உறுப்பினர்களுக்கு மற்றுமொரு கலர் படமும் காண்பிக்க முடியாது. கட்சியையும், சமூகத்தையும் மலிவாக்கி பொருள் தேடல்களை ஈட்டிக் கொள்ள முடியாது. கட்சியை பதவிகள் வழி நடத்து முடியாது. கொள்கைகள்தான் கட்சியை வழி நடத்த வேண்டும். சமூகத்துக்காக கொள்கையின் அடிப்படையில் செயற்படும் கட்சிதான் நிலைத்திருக்கும். ஆனால், கொள்கைகள் கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய கட்சிகளினால் சமூகத்தை மட்டுமன்றி நாட்டையும் பாதுகாத்துக் கொள்ள முடியாது.

முஸ்லிம் கட்சி ஒன்றின் நாடாமன்ற உறுப்பினர்கள் 18வது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்து, தலைமையினால் அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டதாக அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இது உண்மையில் அன்பளிப்பா என்பதுதான் இன்றைய கேள்வியாகும். ஜனாதிபதித் தேர்தலின் போது கட்சியின் செயலாளர் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு தெரியாமல் – தலைவர் பேரம் பேசி சிக்கிக் கொண்ட கதைகளும் முரண்பாட்டாளர்களினால் சொல்லப்படுகின்றன. அரசியலில் ஈடுபட்டால் நஸ்டமடையாது கோடிகளை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாமென்பதற்கு பல சம்பவங்கள் விபரிக்கப்படுகின்றன. நீங்களும் சேர்ந்துதானே இந்த வேலைகளைச் செய்தீர்கள் என்று கேட்டால் நாங்கள் தவறு செய்துள்ளோம். எங்களை விடவும் பெரிய தவறுகளை பெரியவர் செய்துள்ளார் என்று பட்டியல் வாசிக்கின்றார்கள். சில நிமிடங்கள் ஆச்சரியப்பட வைத்தது. முஸ்லிம் சமூகத்தின் பெயரால் இவ்வளவு ‘சேவை’களை இவர்கள் பெற்றுள்ளார்களே என்று எண்ணிக் கொண்டோம். பண முதலைகளையே முஸ்லிம் கட்சிகள் பிரசவித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அடுத்த பக்க நியாயத்தை கேட்டுக் கொள்வதற்கு தொலைபேசியும், அலைபேசியும் மறுத்துக் கொண்டிருக்கின்றன.
இதேவேளை, சிலர் தங்களின் பெயர்கள் இதில் அடிபடும் என்பதற்காக, உண்மையை பொய்யாக்கிக் கொள்வதற்காக – தானாகவே தொப்பியைப் போட்டு அவஸ்தைப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

மர்ஹும் அஸ்ரப் நாட்டில் காணப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து முஸ்லிம் இளைஞர்களை பாதுகாத்துக் கொள்வதற்கும், முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் கட்சி ஆரம்பித்தார். அவரின் மரணத்தின் பின்னர் தேசிய கட்சிகளினதும், அரசாங்கத்தினதும் சூழ்ச்சிகளிலிருந்து கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காக பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ரவூப் ஹக்கீமை கட்சிக்கு தலைமை தாங்க வைக்கப்பட்டு கட்சி பாதுகாக்கப்பட்டது. ஆயினும், கட்சிக்குள் போராட்டம் ஏற்பட்டது. சிலர் தலைவர் மீது குறை கூறி கட்சியை விட்டுப் பிரிந்து சென்றார்கள். இவர்கள் கட்சியை அழிப்பதற்கு முற்பட்டபோது முஸ்லிம் வாக்காளர்களில் பெரும் பகுதியினர் முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவளித்து கட்சியை பாதுகாத்துக் கொண்டார்கள். இந்த வரலாற்று பின்னணியில் தற்போது கட்சியை தனி நபரின் பிடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற கோசம் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களினால் முன்வைக்கப்படுகின்றன. கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் – சர்வதிகாரி போன்று செயற்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. இதனால், கட்சியை தனி நபரின் பிடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று முரண்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.  மஹிந்த கம்பனி போன்று கட்சி மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள்.

தலைவர் கட்சிக்குள் தமது அதிகாரத்தை அதிகரித்துக் கொள்வதற்காக கட்சியின் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. கடந்த பேராளர் மாநாட்டில் கட்சியின் யாப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கட்சியின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்யாதவர்கள் போராளிகளாக காட்டப்பட்டு பதவிகள் வழங்கப்படும் அதேவேளை, அஸ்ரப்பின் கொள்கையில் பற்றுக் கொண்டவர்கள் ஓரங்கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.  தற்போது கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் அதிகம் பேர் கட்சியை விட்டு விலகிச் சென்று மீண்டும் இணைந்து கொண்டவர்கள் என்றும், மாற்றுக் கட்சியிருந்து முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராக பலத்த நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களும் உள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றன. இதுபோலவே மாகாண சபை உறுப்பினர்களில் பலர் மாற்றுக் கட்சிகளில் இருந்து முஸ்லிம் காங்கிரஸை அழிக்க வேண்டுமென்று வரிந்து கட்டிக் கொண்டு நின்றவர்கள் என்றும் சுட்டிக் காட்டுகின்றார்கள். பதவிக்காக வந்தவர்கள் சமூகத் தொண்டில் ஈடுபட மாட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸில் தேர்தலில் போட்டியிட வேண்டுமாக இருந்தால் கட்சியின் ஆரம்ப போராளிகளை விடவும் மாற்றுக் கட்சியிலிருந்து கட்சிக்கு அநியாயம் செய்தவர் வந்தவுடன் அவர்களுக்கு வேட்பாளர் அந்தஸ்தும் உயர்பீடத்தில் இடமும் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

இது பற்றி முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்; அம்பாரை மாவட்டத்தில்நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள எச்.எம்.எம். ஹரீஸ் மு.காவிலிருந்து பிரிந்து சென்று தேசிய காங்கிரஸை ஆரம்பித்து அதன் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் பொதுத் தேர்தலொன்றில் ஏற்பட்ட தோல்வியால் மீண்டும் மு.காவில் இணைந்து கொண்டார். பைசால் காசிம் மு.காவை எதிர்த்து முயல் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதன் பின்னர் மு.காவில் இணைந்து கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட நடாளுமன்ற  உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா கடந்த பொதுத் தேர்தல் வரைக்கும் மு.காவை எதிர்த்து வந்தவர்.

கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான தவம், நசீர், ஆரிப் சம்சுதீன் ஆகியோர் அதாவுல்லாவுடன் இணைந்து செயற்பட்டவர்கள். ஜவாத் கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவ பிரச்சினையின் போது பேரியல் அஸ்ரப்புடன் சென்றவர். மாஹிர் ஐ.தேகவில் இருந்தவர்.  கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சட்டத்தரணியும் பேரியல் அணியில் இருந்தவர். கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் மு.காவிலிருந்து பிரிந்து சென்று துஆ கட்சியை ஆரம்பித்து மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்திற்கு சவால் விடுத்தார். தற்போது மு.காவில் பிரதி தலைவராக உள்ளார்.  சிப்லி பாறூக் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்தவர். மேலும், உயர்பீடத்திலும் மாற்று கட்சியிலிருந்து கட்சிக்கு அதிக இன்னல்களை ஏற்படுத்தியவர்கள் இருப்பதாக தெரிவித்தார். இதே வேளை, கட்சிக்காக உழைத்த ஆரம்ப கால உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் அஸ்ரப்பின்  கொள்கையை பேசிக் கொண்டிருப்பதால் ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அஸ்ரப்பின் கொள்கையில் இருந்த சிலர் தமது பிழைப்புக்காக கொள்கைகளை மாற்றிக் கொண்டு ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பதாகவும் அந்த உயர்பீட உறுப்பினர் தெரிவித்தார்.

மர்ஹும் அஸ்ரப்பின் காலத்தில் மசூறா சபைக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. பல முக்கிய தீர்மானங்கள் மசூறா சபை மூலமாகவே எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது மசூறா சபை செயற்பட்டாலும், பல விடயங்கள் மசூறா செய்யப்படுவதில்லை என்று உயர்பீட உறுப்பினர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கட்சியின் உயர்பீட செயலாளராக மன்சூர் ஏ.காதரை நியமித்தமை, மற்றும் சில செயலாளர்களை நியமித்தமை, தேசிய பட்டியலுக்கு ஆட்களை தெரிவு செய்தமை போன்றவைகளை தலைவர் தமது விருப்பத்துக்கு அமைவாகவே மேற்கொண்டார் என்றும் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிக்கின்றார்கள்.

கட்சியின் யாப்பு குர்ஆன், ஹதீஸ் என்று தெரிவிக்கப்பட்டாலும் யாப்பிலும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை தலைவரின் அதிகாரங்களை வலுப் பெறச் செய்வதற்காகவே செய்யப்பட்டுள்ளன. உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ.காதர் என்று தெரிவிக்கப்பட்டது. அவ்வாறுதான் பேராளர் மாநாட்டின் போதும் தெரிவிக்கப்பட்டன. ஊடகங்களிலும் அவ்வாறுதான் செய்திகள் வந்தன. ஆனால், தற்போது பொதுச் செயலாளர் மன்சூர் ஏ.காதர் என்று தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறுதான் ஊடகங்களில் செய்திகளும் வந்துள்ளன. இதே வேளை, கட்சியின் செயலாளர் ஹஸன்அலிதான் என்று பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

இதே வேளை, பெரு வளர்ச்சியடைந்துள்ள இக்கட்சி பொன் முட்டையிடும் வாத்தாக உயர்வு பெற்றுள்ளது. பல தடவைகள் பொன் முட்டைகளை கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கு போட்டுள்ளார்கள். தற்போது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்த பொன் முட்டைகளின் கணக்குகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். குழம்பினால்தான் தெளிவு ஏற்படும் என்பார்கள்.

ஆனால், கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பம் பலரின் முகத் திரையையல்லவா கிழித்துக் கொண்டிருக்கின்றது.
நன்றி : விடிவெள்ளி (15.07.2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்