வடக்கு – கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்; சம்பந்தன்
வடக்கு – கிழக்கு இணைப்பினை முஸ்லிம் தலைவர்களும் மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகவே, தாம் வடக்கு – கிழக்கு இணைப்பை கோருவதாகத் தெரிவித்த அவர், தமிழர்தான் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருக்க வேண்டுமென்ற காரணத்துக்காக நாம் அவ்வாறு கூறவில்லை என்றும் சொன்னார்.
இதேவேளை, ஒரு பக்குவாமான படித்த முஸ்லிம் நபரை, எமது முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்றும், அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு தமிழ் சங்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
“தமிழ் பேசும் மக்களின் பிரதேசங்களில் பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டார்கள். விசேடமாக கிழக்கு மாகாணத்தில் குடியேற்றங்கள் மிகவும் தீவிரமாக இடம்பெற்றிருந்தன. தமிழ் மக்கள் இந்த நாட்டிலிருந்து கூடுதலாக வௌியேறுவதற்கு முன்னதாக இறுதியாக மக்கள் தொகை மதிப்பீடு 1981ஆம் ஆண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எமது நாட்டில் 1947ஆம் ஆண்டுக்கும் 1981ஆம் ஆண்டுக்குமிடையிலான காலப் பகுதியில் சிங்கள மக்களின் இயற்கை ரீதியான அதிகரிப்பு 2.5 வீதமாகும். இக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் சிங்க மக்களின் இயற்கை ரீதியான அதிகரிப்பு 09 வீதமாகும். தற்போது வடமாகாணத்திலும் அவ்விதமான நிகழ்வுகளை நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இக்காரணத்தின் நிமித்தம்தான் வடக்கு – கிழக்கு இணைந்திருக்க வேண்டும். தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்படவேண்டும் என்பதை திடமாக வலியுறுத்தி வருகின்றோம். இதனை முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். முஸ்லிம் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.தமிழர் ஒருவர்தான் முதலமைச்சராக இருக்க வேண்டுமென்ற காரணத்திற்காக நாம் அவ்வாறு கூறவில்லை.
ஒரு பக்குவாமான படித்த முஸ்லிம் நபரை எமது முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதற்கு நாம் எப்போம் தயாராகவிருக்கின்றோம். எமது பெரும்பான்மை பாதுகாக்கப்படுவது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்துவதாக இருந்தால், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும். அதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதை அன்பாகவும் தாழ்மையாகவும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்” என்றார்.