வீடமைப்பு அதிகாரசபை கல்முனை அலுவலகம், தரமுயர்த்தப்பட்டு நாளை திறந்து வைப்பு
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை பிரதேச அலுவலமானது – மீண்டும் நகர அலுவலகமாகத் தரமுயர்த்தப்பட்டு, நாளை செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
இவ் வைபவம் இன்று திங்கட்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தபோதும், சாய்ந்தமருதுவில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமையினால், நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி, இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, அலுவலகத்தினை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் வை.எல். எஸ் ஹமீட் – இவ் அலுவலகத்தினை தரமுயர்த்துமாறு, பிரதியமைச்சர் அமீரலியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கமைவாக பிரதியமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, வீடமைப்பு சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனைக்கினங்க, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இவ் அலுவலகத்தை தரமுயர்த்துவற்கான பணிப்புரையினை வழங்கியிருந்தார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எஸ். பலன்சூரியவும் நாளைய நிகழ்வில் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2006ஆம் ஆண்டில் – இவ் அழுவலகமானது, மருதமுனை தொட்டு பொத்துவில் மற்றும் சம்மாந்துறை வரையிலான, தமிழ் பேசும் மக்களின் வீட்டுப் பிரச்சினைகள் சம்பந்தமாக செயலாற்றும் வகையில், நகர வீடமைப்பு அலுவலமாக – முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரபினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சராக போறுப்பேற்ற காலத்தில், இவ் அலுவலகத்தை அம்பாறை அலுவலகத்துடன் இனைந்திருந்தார். அத்துடன் கல்முனை வீடமைப்பு அலுவலகத்தை – உப அலுவலகமாக தரம் இறக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.