கல்முனை பிராந்தியத்தில், முன்னறிவித்தல் இன்றி மின்வெட்டு; மக்கள் விசனம்

🕔 June 14, 2016

Power cut - 0123– றிசாத் ஏ காதர் –

லங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் எவ்வித முன்னறிவித்தல்களுமின்றி, அடிக்கடி மின் வெட்டு இடம்பெறுகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மின்சார சபை ஊழியர்கள், ஏற்கனவே திட்டமிட்டுள்ள திருத்த வேலைகளை மேற்கொள்ளும்போது, அமுல்படுத்தப்படும் மின்வெட்டு குறித்து, பொதுமக்களுக்கு அறியத்தருவதிலும் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.

இதனால் தொழிற்சாலை மற்றும் ஆலைகளில் நாளாந்தம் கூலி வேலை செய்வோர், தமது தொழிலிடங்களுக்கு வந்ததும், அறிவித்தல் இல்லாமல் மின்சாரம் தடைசெய்யப்படுவதால், தொழில் செய்ய முடியாமல் வருமானமின்றி வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மின்வெட்டு தொடர்பில் முன்னறிவித்தல் வழங்கப்படுமாயின், இவ்வாறான கூலித் தொழிலாளர்கள், குறித்த தினத்தில் வருமானத்தினைப் பெற்றுக் கொள்ளும் வேறு தொழிலுக்குச் செல்ல, வசதியாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.

இவ்வாறாக முன்னறிவித்தலின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டதுடன், இன்றும் காலையிலிருந்து சுமார் 04 மணிநேரம் முன்னறிவிப்பின்றி மின்சாரம் தடைசெய்யப்பட்டது.

ஏற்கனவே, முன் அறிவித்தல் இல்லாமல் மின்சாரம் தடைசெய்யப்படுகின்றமை தொடர்பில் பலமுறை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளபோதிலும், இதுகுறித்து இலங்கை மின்சார சபையின் கல்முனைப் பிராந்திய பொறியியலாளர் உரிய நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எதிர்வரும் காலங்களிலாவது மின்வெட்டு தொடர்பில் முன் அறிவித்தல் வழங்கி, பொதுமக்களுக்கு ஏற்படும் மேலதிக அசௌகரியங்களை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்