ஹசன் அலிக்கு ஆதரவான கடிதத்தில் இடப்பட்ட ஒப்பங்கள் வாபஸ்; உயர்பீட உறுப்பினர்கள் பல்டி

🕔 March 24, 2016

Hasan Ali - 0897– முன்ஸிப் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் எம்.ரி. ஹசன் அலி வகிக்கும் செயலாளர் பதவிலிருந்து மீளப் பெறப்பட்ட அதிகாரங்களை வழங்குமாறு வலியுறுத்தும் வகையில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தில் கையொப்பம் இட்டவர்களில் ஆக்குறைந்தது 11 பேர் வரையில் தமது கையொப்பங்களை வாபஸ் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

மு.காங்கிரசின் செயலாளர் பதவியின் சில அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டு, அவை – கட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உயர்பீட செயலாளர் பதவிக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், செயலாளர் பதவியில் குறைக்கப்பட்ட அதிகாரங்களை மீளவும் வழங்குமாறு, மு.கா. தலைவரை வலியுறுத்தும் வகையிலான கடிதமொன்று எழுதப்பட்டு, அந்தக் கடிதத்தில் 38 பேர் வரையில் கையொப்பம் இட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

மேற்படி கடிதத்தினை தயாரிக்கும் முயற்சியில் கட்சியின் செயலாளர் பதவியினை வகிக்கும் எம்.ரி. ஹசன் அலி ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில், குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் 11 பேர் வரையிலானவர்கள், தமது கையொப்பங்களை வாபஸ் பெற்றுள்ளதாகவும், அதற்கான சத்தியக் கடதாசியினை மு.காங்கிரசின் தலைமை மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டு அவற்றினை தற்போது வாபஸ் பெற்றுள்ளவர்களில் அதிகமானோர், அந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தினை வாசித்துப் பார்க்காமல் தாம் கையொப்பமிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்னும் பலர் தமது கையொப்பங்களை வாபஸ் பெறும் மனநிலையில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்