மு.கா. தேசிய மாநாடு: ஜனாதிபதி, பிரதமர் வருகை; ஹசன் அலி புறக்கணிப்பு; பிந்தி வந்தார் பஷீர்

🕔 March 19, 2016

SLMC - 333
– முன்ஸிப் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு இன்று காலை அம்பாறை மாவட்டம், பாலமுனை பிரதேச பொது விளையாட்டு, மைதானத்தில் ஆரம்பமான நிலையில், அதன் நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான ரா. சம்பந்தன், ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான சரத் பொன்சேகா, அமைச்சர்களான மனோ கணேசன், ராதா கிருஸ்ணன் உள்ளிட்ட பலர் இம் மாநாட்டில் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

ஹசன் அலி புறக்கணிப்பு

முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

ஹசன் அலிக்கு இம்முறை மு.கா. சார்பில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கப்பட வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், கட்சி அதனை இதுவரை நிறைவேற்றவில்லை.

இதேவேளை, ஹசன் அலி வகித்து வரும் செயலாளர் பதவியின் அதிகாரங்கள், அண்மையில் குறைக்கப்பட்டன.

இவற்றினைக் காரணமாக வைத்து, இந்த மாநாட்டினை மு.கா. செயலாளர் ஹசன் அலி புறக்கணிப்பார் என்று ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

அந்தச் செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில் இன்றைய தேசிய மாநாட்டில் ஹசன் அலி கலந்து கொள்ளவில்லை.

பிந்தி வந்த பஷீர்

மு.காங்கிரசின் தவிசாளர் பஷீர் சேகுதாவுத்தும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வாரா, மாட்டார் என்கிற சந்தேகம் இருந்தது. இவரும் – மு.கா. சார்பில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை எதிர்பார்த்த வண்ணம் உள்ளபோதும், அந்த எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில், இன்றைய மாநாட்டுக்கு பஷீர் வருகை தரமாட்டார் என்றே நம்பப்பட்டது. ஆயினும், மாநாடு ஆரம்பித்து சற்று நேரம் கழித்தே தவிசாளர் பஷீர் மேடைக்கு வருகை தந்தார்.

ஆயிரக் கணக்கில் ஆரவாளர்கள்

இந்த மாநாட்டில் ஆகக்குறைந்தது 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று, மு.காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த எதிர்பார்ப்பினை விடவும் அதிகளவான ஆதரவாளர்கள் இன்றைய மாநாட்டில் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டமையினை அவதானிக்க முடிந்தது.SLMC - 222SLMC - 111

Comments

புதிது பேஸ்புக் பக்கம்