புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில், சிறுபான்மையோர் கரிசனைகள்

🕔 March 19, 2016

SEUSL - Article - 01
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையினால், அரசியலபை்பு சீர்திருத்தத்துக்கான மக்கள் பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் தொகுப்பு

அறிமுகம் 

லங்கையில் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்களின் குறைபாடுகளே இந்நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதற்கு வழிவிட்டது. அத்தகைய சந்தர்ப்பங்கள் மீண்டும் உருவாகுவதனைத் தவிர்த்து நாட்டில் நீண்டகால அமைதியினை ஏற்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையோர் குறித்த கரிசனைகள் உள்ளீர்க்கப்பட வேண்டும். இந்நிலையில் உத்தேச அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய சிறுபான்மையோர் குறித்த பிரதான கரிசனைகளை வெளிக்கொண்டுவருவதும் அது தொடர்பான யோசனைகளை தொகைப்படுத்தி வெளியிடுவதும் காலத்தின் தேவையாகும்.

இதனைக் கருத்திற்கொண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் சிறுபான்மையோர் குறித்து எத்தகைய விடயங்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்ற தகவல் அடங்கிய அறிக்கையொன்றினைத் தயாரிப்பதற்கான முயற்சியினை நாம் முன்னெடுத்திருந்தோம். அதற்கமைய எமக்குக் கிடைக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு நாட்டின் பல புத்திஜீவிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் பின்வரும் விடயங்கள் புதிய அரசியலமைப்பில் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என்பது எமது அபிப்பிராயமாகும்.

1. அரசின் தன்மை: நீண்டகால இன முரண்பாட்டின் விளைவாக அரசின் தன்மையினை மறுசீரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. எனினும் அரச மறுசீரமைப்பின் போது ஒற்றையாட்சியிலிருந்து சமஷ்டிக்கு நகருதல் அல்லது ஒற்றையாட்சிக்குள் மட்டும் நின்று தீர்வினைத் தேடுதல் போதுமானதன்று.

சிலவேளைகளில் சமஷ்டி தென்னிலங்கையில் வேண்டப்படாத ஒரு சொல்லாடலாகவும் ஒற்றையாட்சி வடக்கு கிழக்கு சமூகங்களை புறமொதுக்கும் குறியீட்டுச் சொல்லாகவும் பார்க்கப்படுகின்றது. எனவேதான் புதிய யாப்பில் இடம்பெறும் அரச மறுசீரமைப்பு மேற்குறிப்பிட்ட சொற்பதங்களின் நேரடிப் பிரயோகத்தினைத் தவிர்த்து பிராந்தியங்களுக்கு அதிகளவு சுயாட்சியினை வழங்கத்தக்க ஒன்றாக அமைதல் வேண்டும்.

பிராந்தியங்களை நிறுவுகின்ற போது தற்போது காணப்படும் மாகாண அரசுகள் ஒவ்வொன்றினையும் பிராந்தியங்களாக அமைத்துக்கொள்ள முடியும். அப்பிராந்தியங்கள் ஒவ்வொன்றும் பிராந்திய மட்டத்திலான அரசாங்கக் கட்டமைப்பின் கீழ் செயற்பட வழிசெய்யப்படுதல் வேண்டும்.

பிராந்திய அரசுகளுக்கான தலைவர்கள் அந்தந்த பிராந்தியங்களிலிருந்து பிராந்திய சட்ட சபைகளினால் தெரிவு செய்யப்படுதல் வேண்டும் என்பதுடன் பிராந்தியத்தின் நிருவாக விடயத்தில் அவரது நிலை பிராந்திய அமைச்சரவையின் அதிகாரத்திலும் பார்க்க உயர்வானதாக இருக்கக் கூடாது.

அதேவேளை, பிராந்திய அரசாங்கத்தின் உண்மையான நிறைவேற்றுப் பகுதியாக பிராந்தியத்தின் அமைச்சரவை இருக்க வேண்டும் என்பதுடன் அவ்வமைச்சரவையின் தலைவர் அப்பிராந்திய அரசாங்கத்தின் தலைவருமாவார். இங்கு பிராந்திய அமைச்சர்களாக செயற்படக்கூடியவர்கள் பிராந்திய சட்டசபையின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்ற விதிகள் செய்யப்பட வேண்டும்.

2. அரசாங்கத்தின் வடிவம்: பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித்துவ அரசாங்க முறையின் நடைமுறை தொடர்பில் கசப்பான அனுபவங்களையே இலங்கை பெற்றுள்ளது. இந்நாட்டின் சுதந்திரத்திலிருந்து சுமார் 30 ஆண்டுகள் பாராளுமன்ற அரசாங்க முறை நடைமுறைப்படுத்தப்பட்டு இறுதியில் அம் முறை தோல்வி கண்டது.

1978இலிருந்து நிறைவேற்று ஜனாதிபதி முறை அறிமுகமான போதிலும் அம்முறையின் கீழ் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிகரித்த அதிகாரங்கள் நாட்டில் சிக்கலான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது.

எனவேதான் அரசாங்க முறையின் வடிவமைப்பில் புதிய மாற்றங்களைச் செய்வது பொருத்தமானதாக அமையும். இதற்கமைய சுவிற்சர்லாந்தில் பின்பற்றப்படுகின்ற பன்மைத்துவ அடிப்படையிலான 07 பேர் கொண்ட கூட்டு நிறைவேற்று முறைமை இலங்கைக்கு மிகவும் சாதகமாக அமையத்தக்கது.

எனினும் பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித்துவ முறை என்ற சட்டகத்திற்குள் நின்று அரசாங்க வடிவவத்தினை தேடுகின்ற போது ஜனாதிபதித்துவ முறையினை தொடர்ந்தும் இருக்கச் செய்வது சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் மிகவும் உசிதமானதாகும். ஆயினும் அது விடயத்தில் ஜனாதிபதியின் சர்வாதிகாரம் எழுச்சியடைவதனை தடுப்பதற்கு அரசியல் யாப்பில் ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும் என்பதுடன் சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தத்தக்க உப ஜனாதிபதிகள் முறையினையும் உள்ளீர்ப்புச் செய்யமுடியும்.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள் மூலமாக தடைகள் சமன்பாட்டு முறையொன்றினை புதிய யாப்பில் பரிந்துரை செய்ய முடியும். அதன் மூலம் ஜனாதிபதி ஆட்சி முறையின் மூலம் எழுச்சியடையும் எதேச்சதிகாரப் போக்கினை பெருமளவுக்குக் கட்டுப்படுத்தலாம்.

இதன்படி பிரதான இரு சிறுபான்மை இனங்களையும் (தமிழ், முஸ்லிம்) பிரதிநிதித்துவம் செய்யத்தக்க இரு உப ஜனாதிபதிகளை நியமிப்பதுடன் அவ் உப ஜனாதிபதிகள் அரச நிர்வாக விடயத்தில் இரத்து அதிகாரத்துடன் செயற்படக்கூடிய நிலையினையும் உருவாக்குதல் வேண்டும். அதேபோன்று பிராந்திய நிர்வாகம், நாட்டின் உள்ளகப் பாதுகாப்பு மற்றும் முப்படைகள் விடயத்திலும் உப ஜனாதிபதிகளுக்கு அதிகாரங்களை வழங்குதல் வேண்டும்.

3. பிரஜாவுரிமை: பிரஜாவுரிமை தொடர்பில் தெளிவான பார்வையினை யாப்பு உள்ளடக்கியிருக்க வேண்டும். இதற்கமைய இலங்கையில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய தேசிய இனங்கள் எத்தகைய பாரபட்சமுமின்றி சுதந்திரமாகச் செயற்படத்தக்கவகையில் பிரஜாவுரிமை அந்தஸ்து விரிவுபடுத்தப்பட வேண்டும்.

இனம் அல்லது மதம் என்ற காரணிகளின் அடிப்படையில் இலங்கைப் பிரஜைகள் பாகுபாடு செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட காரணிகளின் ஊடாக நாட்டின் ஐக்கியம் மற்றும் அரசியல் ஒருமைப்பாடு சிதைக்கப்படுவதற்கு இடமளிக்கக் கூடாது.

எனினும் பிராந்தியங்களுக்கு அதிகாரத்தினை பகிர்ந்தளித்து பிராந்தியங்கள் சுயாதீனமான அலகுகளாகச் செயற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகுகின்ற போது இரட்டைக் குடியுரிமை பற்றிபரிசீலிப்பதும் சாதகமானதாக அமையும். அத்தகைய குடியுரிமையானது தேசிய மற்றும் பிராந்திய ரீதியிலானது என அமைந்திருக்க முடியும். இரட்டைக் குடியுரிமை விடயத்தில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கையர்களை உள்ளீர்ப்பது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்வதும் சாதகமான பெறுபேறுகளை தரத்தக்கது.

4. சமயம்: இலங்கை பல்லின மற்றும் பன்மைக் கலாசாரத்தினைக் கொண்ட ஒரு நாடு என்றவகையில் அரசு மதசார்பற்றதாகவும் பல்லின, கலாசாரத் தன்மைகளைப் பிரதிபலிக்கத்தக்கதாகவும் இருக்க வேண்டும். அதேவேளை அனைத்து மத மற்றும் கலாசாரக் குழுக்கள் தமது நம்பிக்கையினை சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கும் யாப்பில் இடமளிக்கப்படல் வேண்டும். இதன்போது ஒவ்வொரு மதத்திற்கும் அரசாங்கத்தினால் சமவாய்ப்பும் சமபாதுகாப்பும் உத்தரவாதப்படுத்தப்படுதல் வேண்டும்.

5. அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும்: தனிமனித உரிமைகளையும் சுதந்திரங்களையும் முழுமையாகப் பாதுகாக்கக் கூடியவகையில் பரந்தளவிலான சிவில், பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகள் யாப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டும். அதேபோன்று சிறுவர்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையோர் போன்ற விஷேட குழுக்களையும் கருத்திற்கொள்ளத்தக்கதான உரிமைகள் ஏற்பாடு அவசியமானதாகும்.

இது விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கம் அறிமுகம் செய்த அரசியல் யாப்பு நகல்திட்டம் மிகவும் சாதகமான உரிமைகள் பட்டியலை உள்ளடக்கியிருந்தது. அத்தகைய உரிமைகள் பட்டியலில் மீளக் கவனம் செலுத்துவதன் மூலம் பரந்தளவிலான உரிமைகளை புதிய யாப்பில் உள்வாங்கிக் கொள்ள முடியும்.

அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு விடயத்தில் தெளிவானதும் உறுதியானதுமான ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும். இதற்கமைய உயிர் வாழ்வதற்கான உரிமையினை உத்தரவாதப்படுத்துவது உள்ளடலங்களாக பிரஜைகள் தமது அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளைச் செய்வதற்கான கால அளவினைக் கூட்டுதல், நிறுவன மற்றும் அமைப்பு ரீதியாக அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைப் பதிவு செய்ய இடமளித்தல் போன்ற ஏற்பாடுகளையும் யாப்பில் உட்சேர்த்தல் வேண்டும்.

மேலும் பிரஜைகளின் அடிப்படை மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான ஆரம்ப நிலை அதிகாரங்கள் மாவட்ட மேல் நீதிமன்றங்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும். அது விடயத்தில் இறுதி நியாயாதிக்கத்தினைக் கொண்ட நீதிமன்றமாக உச்ச நீதிமன்றத்தினை மாற்றியமைத்தல்.

6. மொழியுரிமை: மொழியுரிமை விடயத்தில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளை நாட்டின் அரச கரும மொழியாக (தேசிய மொழி) அறிவிப்புச் செய்யும் தற்போதய யாப்பு ஏற்பாட்டினை தொடர்ந்தும் இருக்கச் செய்தல்.

அதேபோன்று, குறித்த இரு அரச கரும மொழிகளினதும் நாடுதழுவிய அமுலாக்கத்தினை உறுதி செய்வதற்கான யாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுதல் வேண்டும். ஆங்கில மொழியின் முக்கியத்துவம் கருதி அதனை ஒரு இணைப்பு மொழியாக கருதுதல் பொருத்தமானது.

7. அரச கொள்கை வழிகாட்டிக் கோட்பாடுகள்: புதிய யாப்பின் கீழ் இலங்கை மதசார்பற்ற பிராந்தியங்களின் ஒன்றியக் குடியரசாக அமைதல் வேண்டும். அவ்வரசு ஜனநாயகத் தார்ப்பரியங்களைத் தழுவிய அரச கொள்கை வழிகாட்டிக் கோட்பாடுகளை கொண்டிருக்க வேண்டும் என்பதுடன் அக்கோட்பாடுகள் ஒவ்வொன்றினதும் அமுலாக்கத்திற்கு சட்டரீதியான பாதுகாப்பினைப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.

8. சட்டவாக்க சபை: அரசு பிராந்தியங்களின் ஒன்றியக் குடியரசாக அமைகின்ற போது சட்டவாக்க சபையினை இரு சபை கொண்டதாக மாற்றியமைத்தல் வேண்டும். இவற்றுள் முதலாவது சபை நாட்டின் தேசிய சபையாகவும் இரண்டாவது சபை பிராந்தியங்களின் சபையாகவும் அமைதல் வேண்டும். இவ்விரு சபைகளினதும் உறுப்பமைவினை நாட்டின் சனத்தொகை மற்றும் உருவாக்கப்படும் பிராந்தியங்களினது எண்ணிக்கை என்பவற்றினைக் கொண்டு தீர்மானித்தல்.

சட்டவாக்க சபையில் இரண்டாவது சபையாக விளங்கும் பிராந்தியங்களின் சபைக்கு பிராந்தியங்கள் தொடர்பான பரந்தளவு அதிகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும். இப்பிராந்திய சபைகளுக்கு அச்சபை உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படும் ஒருவர் தலைவராகச் செயற்படுதல் வேண்டும்.

9. அரசியல் யாப்பின் மேலாதிக்கம்: அரசு பிராந்தியங்களுடன் இணைந்து ஐக்கிய அரசாக அமையவருவதனால் அரசியல் யாப்பு மேலாண்மை செய்யக் கூடிய நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கமைய அரசியல் யாப்பினைப் பாதுகாக்கும் பொறுப்பு உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டு பிராந்தியங்களினது சுயாதீனமான செயற்பாடு யாப்பு ரீதியாக உறுதி செய்யப்படுதல் வேண்டும். இது விடயத்தில் அரசியல் யாப்பின் பாதுகாப்பினை உறுதி செய்யத்தக்க அரசியலமைப்புப் பேரவை ஒன்றினை அமைப்பதும் வரவேற்கத்தக்கது.

10. அதிகாரப் பகிர்வு: அதிகாரமானது மத்திய – பிராந்திய அரசுகளுக்கிடையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதற்கமைய தற்போதய மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களிலும் பார்க்க பரந்தளவிலான அதிகாரங்களை வழங்குவது அவசியமாகும். அதிலும் குறிப்பாக காணி, உள்நாட்டுப் பாதுகாப்பு, பிராந்திய நிதி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் போன்ற விடயங்களில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

மத்திய அரசு தாம் பகிர்ந்தளிக்கின்ற அதிகாரங்களின் ஊடாக பிராந்தியங்களை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். அதற்காக பிராந்தியங்களின் சுயாதீனத் தன்மையில் மத்தியரசு தலையீடு செய்வதற்கான அதிகாரங்களை அகற்றுதல் வேண்டும். விஷேடமாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் போது ஆள்புல ஒருமைப்பாடு, பாதுகாப்பு, மற்றும் வெளிவிவகாரம் உள்ளிட்ட விடயங்களில் மத்தியரசு கடப்பாட்டினைக் கொண்டிருக்க முடியும்.

அதேவேளை, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது போன்று மத்திய அரசின் அதிகாரங்களை வரையறுத்து எஞ்சிய அதிகாரங்களை பிராந்தியங்களுக்கு வழங்கும் நடைமுறையினைப் பின்பற்றுவதும் நாட்டில் பிராந்திய ரீதியான சுயாட்சி உருவாகுவதற்கு வழிவிடும்.

அதிகாரங்களை பங்கிட்டுக் கொள்ளும் விடயத்தில் சிறுபான்மையினரது கரிசனைகளைக் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். இது விடயத்தில் தமிழர் சமூகத்தின் கோரிக்கைகளைப் போன்று முஸ்லிம் சமூகப் பிரிவுக்குள் இருந்து எழுகின்ற அதிகாரப் பகிர்வு மாதிரிகளின் பொருத்தப்பாட்டினையும் பரிசீலிக்க முடியும்.

11. நீதித்துறைச் சுதந்திரம்: நீதித்துறையின் சுயாதீனத்தினைப் பாதிக்கத்தக்கவகையில் நடைமுறை யாப்பில் உள்ள ஏற்பாடுகளைத் தவிர்த்தல். இது விடயத்தில் அரசாங்கத்தின் ஏனைய துறைகளின் தலையீடு நீதித்துறையின் மீது செலுத்தப்படுவதனை தவிர்ப்பதற்கான புதிய ஏற்பாடுகளை உட்புகுத்துதல் வேண்டும். விஷேடமாக நீதிபதிகளின் நியமனம், பதவி நீக்கம் போன்ற விடயங்களில் ஜனாதிபதியின் செல்வாக்கினைக் குறைக்கக் கூடிய விடயத்தில் சுயாதீன நீதி ஆணைக்குழுக்களின் செயற்பாட்டினை ஊக்குவித்தல் வேண்டும்.

12. தேர்தல் முறை: தேர்தல் முறையினைப் பொறுத்தவரையில் தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை சிறுபான்மையினருக்கு மிகவும் சாதகமான முறையாகக் காணப்படுகின்றது. எனினும் விருப்பு வாக்கு நடைமுறை, தேர்தல் தொகுதி விரிவடைந்துள்ளமை போன்ற சில குறைபாட்டு அம்சங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

குறித்த தேர்தல் முறையில் மாற்றங்கள் ஏற்படுகின்ற போது சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தில் பாதிப்பு ஏற்படாதவகையில் தேர்தல் முறை அமைந்திருத்தல் வேண்டும். இதற்காக சிறுபான்மை மற்றும் சிறு குழுக்களுக்கான புதிய தேர்தல் தொகுதிகளை உருவாக்குதல் மற்றும் கோட்டா முறையில் கவனம் செலுத்துதல் சிறப்பானதாக அமையும்.

13. ஏனையவை: கடந்தகால அனுபவங்களிலிருந்து சிறுபான்மை சமூகங்களின் மனக்குமுறல்களை கவனத்திற்கொண்டு செயற்படத்தக்க Minority Grievances Commission ஒன்றினை நிறுவுதல். அதேபோன்று நாட்டு மக்களின் நிர்வாகத் தேவையினைக் கருத்திற்கொண்டு மாவட்ட மற்றும் பிரதேச அடிப்படையில் புதிய நிர்வாக அலகுகளை உருவாக்குதல் (நிர்வாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள்).

நிருவாக மற்றும் பொலிஸ் பிரிவுகளை அமைக்கும் போதும் அதற்கான அதிகாரிகளை நியமனம் செய்யும் போதும்(GA, DS, DIG, SSP, SP, etc.) குறித்த பிரதேசத்தின் சனத்தொகை விகிதாசாரத்தினைக் கருத்திற்கொண்டு அப்பிரதேசத்தில் வாழ்கின்ற பெரும்பான்மை சமூகத்தினைச் சார்ந்தவர்களை குறித்த பதவிகளுக்கு நியமிக்க ஏற்பாடுகளைச் செய்வதுடன் குறித்த பிரதேசங்களின் சிறுபான்மையினரை பாதிக்காதவகையிலான பொறிமுறைகளையும் உருவாக்குதல்.

மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு திறந்ததும் காத்திரமானதுமான கலந்துரையாடல்களின் அடிப்படையில் புதிய அரசியல் திட்டத்தினை வகுத்தளிப்பது இனங்களுக்கிடையில் நல்லுறவினைக் கட்டியெழுப்புவதற்கும் நாட்டினை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லுவதற்கும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்