
– MB.சப்னி அஹமட், எம்.ஏ. சாஜித் –
அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பட்ஜட்டில் ஒதுக்கப்படும் நிதி, நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுத்தீன் வலியுறுத்தினார்.
“கடந்த வரவு செலவுத் திட்டத்தில் “நிந்தவூர் கலாசார மண்டபத்தின் நிர்மாணத்துக்காக, நிதியொதுக்குமாறு ஜனாதிபதியிடம் நாங்கள் கேட்டமைக்கு இணங்க 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இன்றுவரை அந்தப் பணம் செலவிடப்படவில்லை” எனவும், அவர் கூறினார்.
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்;
“இந்த வரவு – செலவுத் திட்டத்தில் 7,673 பில்லியன் ரூபாய் அரச செலவாகவும், 2027ஆம் ஆண்டுக்கான அரச வருமானமாக 6,150 பில்லியன் ரூபாயும் எதிர்பார்க்கப்படுகிறது. பற்றாக்குறையாக 1,493 பில்லியன் ரூபாய் காணப்படுகிறது. அதேவேளை, அபிவிருத்தித் திட்டங்களுக்காக 2,000 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள், சரியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் நிந்தவூர் கலாசார மண்டப நிர்மாணத்துக்காக ஜனாதிபதியிடம் நாங்கள் நிதி கேட்டபோது 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இன்றுவரை அந்தப் பணம் செலவிடப்படாமல் இருக்கிறது.
ஜனாதிபதி வந்து அந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். எனவே, இந்த விடயத்தில் கவனம் செலுத்தி அதனை நிறைவு செய்து தாருங்கள்.
இன்னும் ஒன்றரை மாதங்கள், அதாவது சுமார் 40 நாட்களில் அந்தப் பணம் திரும்பிச் சென்றுவிடும். இவ்வாறு அரசாங்கம் பணத்தை ஒதுக்கினாலும், அதனைச் செயல்படுத்துபவர்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை.
அத்துடன், இத்திட்டங்களைக் கண்காணிப்பதற்கான எந்தவொரு முறையான கட்டமைப்பையும் அரசாங்கத்தில் எங்களால் காண முடியவில்லை.
எனவேதான், இந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்போது, அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
வடக்கு மீன்பிடித்துறை மற்றும் மீள்குடியேற்றம்
இந்த ஆண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கியுள்ள 2,000 பில்லியன் ரூபாயில், வடக்கு மீன்பிடித்துறைக்காக 05 பில்லியன் ரூபாயையும், நீண்டகால அகதிகளின் மீள்குடியேற்றத்திற்காக 04 பில்லியன் ரூபாயையும் ஒதுக்கியுள்ளது.
இந்த நிதியும் செலவிடப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, எந்தெந்தத் துறைகளுக்கு எவ்வாறு செலவிடப் போகிறீர்கள், எந்த மாவட்டத்தில் செலவிடப் போகிறீர்கள் என்பன சரியாகக் குறிப்பிடப்படவில்லை.
குறைந்தபட்சம் அவற்றையாவது வெளிப்படுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோன்று, இவ்வாறான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்போது,
- திட்டம் ஆரம்பிக்கப்படும் திகதி;
- திட்டம் நிறைவடையும் திகதி;
- இதற்குப் பொறுப்பான நிறுவனம்;
- இதற்காகச் செலவிடப்படும் தொகை;
- ஒப்பந்தத்தைப் பொறுப்பேற்றுள்ள ஒப்பந்ததாரர்;
- இதனால் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள்;
ஆகிய விடயங்களை ஆரம்பத்திலேயே வெளிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு செய்தால், மக்களும், அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதற்கு இலகுவாக இருக்கும்.
எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சிலாவத்துறை கலாசார மண்டபம்
அதேபோன்று, சிலாவத்துறையில் ஒரு கலாசார மண்டபத்தை – நான்அமைச்சராக இருந்தபோது நிர்மாணித்தோம். ஆனால், அது அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதனை நிறைவு செய்து தருமாறு பலமுறை கேட்டுள்ளேன். ஆனால், இந்த வருட வரவு – செலவுத் திட்டத்திலும் அதற்காக ஒரு ரூபாய்கூட ஒதுக்கப்படவில்லை என்பதை வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
குறைந்தபட்சம் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2,000 மில்லியன் ரூபாயிலிருந்தாவது ஒரு தொகையை ஒதுக்கி, அந்தக் கட்டடத்தின் பணிகளைத் தொடரச் செய்யுங்கள்.
இல்லையென்றால், அந்தக் கட்டிடம் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிடலாம்.
நான் அமைச்சராக இருந்தபோதுதான் நானாட்டானில் ஒரு கலாசார மண்டபத்தைக் கட்டிக்கொடுத்தேன். இன்று உங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்தான் அங்கு ஆட்சி செய்கிறது.
ஆட்சி மாறினாலும், புதிய அரசாங்கம் வந்தாலும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது வழமையாகும்.
ஆனால், ஏனோ தெரியவில்லை. சிலாவத்துறை கலாசார மண்டபத்தை யாரும் கண்டுகொள்ளாதது போன்று இருக்கிறார்கள். இதனை நான் வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மன்னார் – புத்தளம் பாதை
மன்னார் – கண்டி நெடுஞ்சாலை தொடர்பாக ஜனாதிபதி பெருமையாகக் கூறியிருந்தார். நாங்களும் அதனைப் பாராட்டுகிறோம்.
கண்டி நெடுஞ்சாலை எவ்வளவு முக்கியமானதோ, அதேபோன்று வடமாகாணத்தையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கின்ற மன்னார் – புத்தளம் பாதையும் முக்கியமானதாகும்.
இந்தப் பாதை சுமார் 100 கிலோமீற்றர் தூரத்தைக் குறைக்கக்கூடியது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்லும்போதும், அங்குள்ள உற்பத்திப் பொருட்களைத் தெற்கிற்குக் கொண்டுவரும்போதும் 100 கிலோமீற்றர் தூரத்தை மிச்சப்படுத்த முடியும்.
நாங்கள் இந்தப் பாதையைத் திறப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டபோது, கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் – ஆட்சிக்கு வந்து அதனை மூடியது.
அதன் பின்னர் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் அந்தப் பாதை தொடர்பாக ஆய்வு செய்து, கரையோரமாகவாவது ஒரு பாதையை அமைப்பதற்கு முயற்சி செய்வோம் என்று கூறியிருந்தீர்கள்
ஆனால், இந்த வரவு – செலவுத் திட்டத்தில் அதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தேர்தல் உரையிலும் இந்தப் பாதையை அமைத்துத் தருவதாக ஜனாதிபதி கூறியிருந்தார். அவருக்குப் பின்னர் பல அமைச்சர்களும் இதனைச் சொல்லியிருந்தார்கள்.
ஆனால், இந்த அரசாங்கம் இரண்டு வருடங்களாக அந்த விடயத்தில் கவனம் செலுத்தவில்லை.
தயவுசெய்து மன்னார் – புத்தளம் பாதையை மக்கள் பாவனைக்காகப் பெற்றுக்கொடுங்கள். அதற்காக நிதி ஒதுக்குங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இடைநிறுத்தப்பட்ட 06 பாடசாலைகளின் கட்டுமானப் பணிகள்
06 பாடசாலைகள் TFR திட்டத்தின் கீழ் (மீள்குடியேற்றச் செயலணிக் குழு) நான் அமைச்சராக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்டன.
கோட்டாபய ராஜபக்ஷ இனவாதச் சிந்தனையுடன், நான் ஆரம்பித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதைத் தடுத்தார்.
இந்த 06 பாடசாலைகளின் விடயமாக கல்வி அமைச்சிலும் பலமுறை பேசியிருக்கிறேன்.
கல்வி அமைச்சராக இருக்கின்ற பிரதமரும் – அதற்காகப் பணம் ஒதுக்குவதாக, இந்தச் சபையில் கூறியிருந்தார்.
ஆனால், 11ஆம் மாதம் ஆகிவிட்டது. இன்றுவரை அந்த 06 பாடசாலைகளுக்கும் ஒதுக்குவதாகக் கூறப்பட்ட நிதி ஒதுக்கப்படவில்லை.
செயலாளர்கூட அதற்கான நிதியை வழங்குவதாக என்னிடம் கூறியிருந்தார். ஆனால், இதுவரை ஒரு ரூபாய்கூட அதற்காக ஒதுக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.
விவசாயிகளின் உற்பத்தியும் இறக்குமதிக் கொள்கையும்
இந்த அரசாங்கத்தின் கீழ் இன்று விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
நெல் அறுவடை செய்யும் காலத்தில் அரிசியை இறக்குமதி செய்கிறீர்கள். வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் நேரத்தில் – அதனை இறக்குமதி செய்கிறீர்கள். அதற்கான வரியையும் குறைக்கிறீர்கள்.
இது அரசாங்கத்தின் அனுபவமின்மையா என்று தெரியவில்லை.
நானும் வர்த்தக மற்றும் வணிக அமைச்சராக இருந்திருக்கிறேன்.
எங்களிடம் வாழ்க்கைச் செலவுக் குழுவொன்று இருந்தது. விவசாய அமைச்சு, கூட்டுறவு அமைச்சு, கைத்தொழில் அமைச்சு மற்றும் உணவுப் பொருட்கள் தொடர்பான அதிகாரிகள் என அனைவரும் இணைந்து செயற்படுவோம்.
ஒவ்வொரு வாரமும் அடுத்த மூன்று மாதங்களுக்கான பொருட்களின் இறக்குமதி, உற்பத்தி மற்றும் எதிர்பார்க்கப்படும் தேவைகள் குறித்து ஆராய்வோம்.
அரிசி, சீனி, மாவு, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதில் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி வந்தோம்.
ஆனால், இன்று அவ்வாறானதொரு நிலையை நாங்கள் காணவில்லை.
எரிவாயு விலை மற்றும் நுகர்வோர் அதிகாரசபை
எரிவாயு விலையை ஒரே நாளில் அதிகரிக்கிறார்கள். லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தினால் இவ்வாறு தன்னிச்சையாக விலையை அதிகரிக்க முடியாது.
தனியார் நிறுவனங்கள் தாங்கள் நினைத்த மாதிரி விலைகளை அதிகரிக்க முடியாது. அதற்குத்தான் நுகர்வோர் அதிகாரசபை இருக்கிறது.
அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், வழக்குத் தாக்கல் செய்யவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடியும்.
எனவே, தனியார் நிறுவனங்கள் நினைத்த மாதிரி நாட்டை ஆள முடியாது. விலைகளை அதிகரிப்பதும் குறைப்பதும் அவர்களுடைய பொறுப்பல்ல.
அந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இன்று சாதாரண மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். கௌரவமாக வாழ்ந்தவர்கள் தங்களுடைய கஷ்டங்களைக்கூட வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மன்னார் உள்ளிட்ட வைத்தியசாலைகளை தேசியமயமாக்குதல்
அதேபோன்று, மன்னார் வைத்தியசாலையை தேசிய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்துள்ளீர்கள்.
மன்னார் மாத்திரமல்லாமல், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா உள்ளிட்ட 20 வைத்தியசாலைகளை இவ்வாறு கொண்டுவந்துள்ளீர்கள்.
இதனை நாங்கள் பாராட்டுகிறோம்.
நாங்கள் அமைச்சராக இருந்தபோது இந்த முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், அப்போது மாகாண சபை அதற்கு இடமளிக்கவில்லை. அதற்கு எதிராகச் செயல்பட்டார்கள்.
இந்த விடயத்தில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன்.
ஏனெனில், மன்னார் போன்ற மாவட்டங்களில் – மாகாண சபையிடமிருந்து நிதியைப் பெற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது.
இதனால் எத்தனையோ உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலைகளுக்குச் செல்லும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தார்கள்.
எனவே, இந்த நடவடிக்கை அந்த மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்.
அரச நிறுவனங்களின் நட்டம்
ஐ.ரி.என் மற்றும் ரூபாவாஹினி போன்ற நிறுவனங்கள் மாதங்களில் 200 மில்லியன் ரூபாய் நட்டத்தைச் சந்தித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிறுவனங்களை – உங்கள் ஆட்சியிலாவது லாபம் ஈட்டக்கூடிய நிலைக்குக் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுங்கள்.
குறைந்தபட்சம் நட்டமில்லாமல் இயங்கக்கூடிய (Break-even) நிலைக்காவது அவற்றைக் கொண்டுசெல்ல வேண்டும்.
தொடர்ச்சியாக அரச நிறுவனங்கள் நட்டத்தைச் சந்தித்துக்கொண்டிருக்க முடியாது.
நான் அமைச்சராக இருந்தபோது சீனித் தொழிற்சாலை என்னுடைய அமைச்சின் கீழ் இருந்தது.
அந்தத் தொழிற்சாலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டபோது 1,800 மில்லியன் ரூபாய் நட்டத்திலும் கடன் சுமையிலும் இருந்தது.
ஆனால், நான் அதனை ஒப்படைத்தபோது 2.2 பில்லியன் ரூபாயை நிலையான வைப்பில் (Fixed Deposit) வைத்துவிட்டே ஒப்படைத்தோம்.
அதனைத் திட்டமிட்டுச் செயற்படக்கூடிய – நல்ல தலைவர்களிடம் ஒப்படைத்து, சரியான முறையில் முகாமைத்துவம் செய்தோம்.
அதேபோன்று, பல நிறுவனங்கள் – நாங்கள் அமைச்சராக இருந்தபோது நட்டத்தில் இயங்கின. அவற்றை இலாபம் ஈட்டக்கூடிய நிலைக்குக் கொண்டுவருவதற்காகத் தரமானவர்களைத் தலைவர்களாக நியமித்து செயற்படுவதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
எனவே, எந்த நிறுவனத்தில் எங்கு நட்டம் ஏற்படுகிறதோ, அதனைச் சரிசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.



