தலைப்புச் செய்திகள்

ரம்பேவ பகுதியில் பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில், ஐவர் பலி; 20 பேர் காயம்

அனுராதபுரத்தின் ரம்பேவப் பகுதியில், A9 வீதியில் இன்று (10) காலை மூன்று பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் – ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களில் ஒன்றுக்குப் பின்னால் வந்த – தனியார் பஸ் ஒன்று, அந்தப் பஸ்ஸன் பின்புறத்தில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்த சுமார் 18 முதல் 20 பேர் அனுராதபுரம், வவுனியா மற்றும் மதவாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, மிஹிந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.