
நாடாளுமன்ற சபாநாயகருக்கு ரஜமல்வத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்று உள்ள நிலையில், கொழும்பு, லோரன்ஸ் வீதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில், மேலும் இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்களைப் பெற்றுக்கொண்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக அவர் சுமார் 8,252 ரூபாயை மட்டுமே செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒத்திவைப்பு விவாதத்தில் நேற்று (03) கலந்துகொண்டபோது அவர் இதனைக் கூறினார்.
1/8 மற்றும் 3/4 என அடையாளம் காணப்பட்ட – அந்த இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளும் முறையே சபாநாயகருக்கும் அவரின் செயலாளருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன எனவும், அஜித் பி. பெரேரா குறிப்பிட்டார்.
இதன்போது, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கு நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் இடமளிக்கவில்லை என்று, அமர்விற்குத் தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த அஜித் பி. பெரேரா, இந்த இல்லங்கள் தொடர்பாக சபாநாயகருக்கு எதிராக எந்தவொரு நீதிமன்ற வழக்கையும் எவரும் தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்தார். இருப்பினும், இது குறித்து லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், லோரன்ஸ் வீதியிருள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் மூன்று படுக்கையறைகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இருப்பதாகவும், இவற்றின் மாதாந்த சந்தை வாடகை மதிப்பு 500,000 ரூபாய்க்கும் அதிகம் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், ரஜமல்வத்தையில் உள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தைப் பராமரிப்பதற்காக, ஜே.வி.பி அமைப்பைச் சேர்ந்த 08 முழுநேரச் செயற்பாட்டாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு ஊதியங்கள், சலுகைகள் மற்றும் வாகன வசதிகள் வழங்கப்படுவதாகவும் அஜித் பி. பெரேரா குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தைத் தவிர்த்துச் செல்லாமல், நாடாளுமன்றத்திற்கு சபாநாயகர் வருகை தந்து, முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



