தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, கிங்ஸ்பெரி ஹோட்டலிடம் 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி கடிதம்

‘தி கிங்ஸ்பரி’ ஹோட்டலில் பதிவான சிசிடிவி (CCTV) காட்சிகள் திருத்தப்பட்டு, சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதன் மூலம் – தனது தனிப்பட்ட சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாகவும், தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அதில் குற்றம் சாட்டி, முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, தனது சட்டத்தரணிகள் மூலம், குறித்த ஹோட்டலுக்கு கோரிக்கை கடிதத்மொன்றை (letter of demand) அனுப்பியுள்ளார்.

குறித்த சிசிடிவி காட்சிகளை அனுமதியின்றி வெளியிட்டது, திருத்தியது மற்றும் பரப்பியது ஆகியவற்றிற்கு அந்த ஹோட்டலே பொறுப்பேற்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கை கடிதத்தில் நான்கு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடிதத்தில் உள்ள முக்கிய குற்றச்சாட்டுகள் மற்றும் விவரங்கள் பின்வருமாறு:

ஒக்டோபர் 24 அன்று சரத் வீரசேகர அந்த ஹோட்டலுக்குச் சென்றபோது பதிவான சிசிடிவி காட்சிகள் மாற்றப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது, அவரும் ஒரு பௌத்த பிக்குவும் ஒன்றாக அல்லது ஏறக்குறைய – ஒரே நேரத்தில் ஹோட்டல் அறைக்குள் நுழைந்தனர் என்ற தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையில் கையாளப்பட்டுள்ளது.

ஹோட்டலின் கண்காணிப்பு அமைப்பிலிருந்து பெறப்பட்ட காட்சிகள், அந்த ஹோட்டலின் கட்டுப்பாட்டிலும் பாதுகாப்பிலுமே உள்ளன என்றும், ஹோட்டலின் பங்களிப்பு அல்லது அறிவு இன்றி இவை வெளியிடப்பட்டிருக்க முடியாது என்றும் அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சிசிடிவி காட்சிகளைத் திருத்துவதிலோ அல்லது கையாளுவதிலோ, ஹோட்டல் நிர்வாகமும் பல்வேறு சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் யூடியூப் (YouTube) சேனல்களின் நிர்வாகிகளும் இணைந்து செயல்பட்டுள்ளனர் என்றும் அந்தக் கடிதம் குற்றம் சாட்டுகிறது.

இது தொடர்பாக 06 சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் சேனல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன: ‘தசத லங்கா நியூஸ்’ (Dasatha Lanka News), ‘சேனல் 4’ (Channel 4), ‘குண அய்யாகே கமரே’ (Gune Aiyage Kamare), ‘ஓமாயா கோவிலகோட’ (Omaya Kovilagoda), ‘சைபர் நியூஸ் எல்.கே’ (Cyber ​​News LK) மற்றும் ‘பலத்சபா விரோதிங்கே ஜாதிக ஏகமுத்துவா’ (Palathsabha Wirodinge Jathika Ekamuthuwa) ஆகியவையே அவையாகும்.

சரத் வீரசேகரவும் ஒரு பௌத்த பிக்குவும் ஒரே நேரத்தில் அல்லது மிகக் குறுகிய கால இடைவெளியில் ஹோட்டல் அறைக்குள் நுழைந்தது போலத் தோன்றும் வகையில், சிசிடிவி காட்சிகள் திருத்தப்பட்டுள்ளதாக அந்தக் கடிதம் குறிப்பிடுகிறது.

இந்தக் காட்சிகள் பொதுமக்களிடையே தவறான பிம்பத்தை உருவாக்கியுள்ளன என்றும், சரத் வீரசேகரவும் பௌத்த பிக்குவும் ஒன்றாக அல்லது ஏறக்குறைய ஒரே நேரத்தில் ஹோட்டல் அறைக்குள் நுழைந்தனர் என்ற கருத்து முற்றிலும் பொய்யானது என்றும், அவரது சட்டத்தரணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சேனல் 4 என்ற முகநூல் பக்கம், அவதூறான தலைப்பின் கீழ், அந்த வீடியோவை பரப்பி, அதில் காட்டப்பட்ட நபர் முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் ஹெண்டவிதாரன என்று தவறாகக் கூறியதாக அந்தக் கடிதம் மேலும் குறிப்பிடுகிறது.

சிசிடிவி காட்சிகளை அனுமதியின்றி வெளியிட்டது சரத் வீரசேகரவின் தனியுரிமையை மீறியதாகவும், அவரைக் கடுமையான இணையவழித் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும், அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகவும் சட்டத்தரணிகள் வாதிடுகின்றனர்.

இந்தச் சம்பவம், கிங்ஸ்பரி ஹோட்டல் – தனது விருந்தினர்களின் தனிப்பட்ட தகவல்களின் இரகசியத்தன்மையைப் பேணுவதற்கான தனது உறுதிப்பாட்டை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, 2024-ஆம் ஆண்டின் 9-ஆம் இலக்க இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் 20-ஆம் பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான உரிமையைத் தங்கள் கட்சிக்காரர் கொண்டுள்ளார் என்று, சட்டத்தரணிகள் வழக்கறிஞர்கள் ஹோட்டலுக்குத் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் மற்றும் இணையப் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார்களைப் பதிவு செய்வதற்கான உரிமையையும் அவர்கள் கொண்டுள்ளனர் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கிங்ஸ்பரி ஹோட்டல் நிறைவேற்ற வேண்டிய நான்கு குறிப்பிட்ட கோரிக்கைகளை அந்தக் கோரிக்கை கடிதம் முன்வைக்கிறது.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், முன் அறிவிப்பு இன்றி சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குமாறு, தங்களது கட்சிக்காரர் தங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சட்டத்தரணிகள் எச்சரித்துள்ளனர்.

ஏழு நாட்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அவதூறு, தனியுரிமையில் தவறான தலையீடு மற்றும் அவரது நற்பெயருக்கு ஏற்பட்ட சேதம் ஆகியவற்றுக்காக ரூ. 100 மில்லியன் இழப்பீடு கோரி தங்களது கட்சிக்காரர் வழக்குத் தொடர உத்தேசித்துள்ளதாக அந்த சட்ட அறிவிப்பில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.