தலைப்புச் செய்திகள்

11 ஆயிரம் பேரை வைக்கும் வசதிகளையுடைய சிறைச்சாலைகளில், 40 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர்: சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தெரிவிப்பு

இலங்கையின் சிறைச்சாலைகளில் சுமார் 11,000 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கும் வசதிகள் உள்ள நிலையில், தற்போது சுமார் 40,000 பேர் அடைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும், சுமார் 30,000 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறையில் உள்ளவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ள லக்மாலி கருணாநாயக்க, நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோரை வரவேற்கும் முகமாக, இன்று (30) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த – சட்ட உதவி முகாமின் ஒரு பகுதியாக, வெலிக்கடையில் உள்ள ‘நியூ மெகசின்’ (New Magazine) சிறைச்சாலைக்குச் சென்றிருந்தபோது, தான் கண்ட சூழல் மிகவும் மோசமானதாகவும், பல கைதிகளுக்கு அது மனிதாபிமானமற்ற மற்றும் கண்ணியக்குறைவான நிலையாகவும் இருந்ததாக அவர் விவரித்தார்.

சரியான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுதல், சட்ட நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்த்தல் மற்றும் ‘குற்றமற்றவர் என்ற அனுமானம்’ (presumption of innocence) ஆகிய கொள்கைகளை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை இந்தச் சூழல் உணர்த்துவதாக அவர் வலியுறுத்தினார்.

விசாரணைக்கு முன்பாக ஒரு நபரின் சுதந்திரத்தைப் பறிக்கும் ஒவ்வொரு முடிவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டிய அமரசூரிய, இதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசு ஆகிய தரப்பினருக்குப் பொறுப்பு உண்டு என்று கூறினார்.

சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்காக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் வரவேற்றதோடு, இந்த முன்னெடுப்புகள் அர்த்தமுள்ள பலன்களைத் தரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“சிறைவாசம் ஒரு நபரின் சுதந்திரத்தைப் பறிக்கலாம், ஆனால் அது ஒருபோதும் அவர்களின் மனித கண்ணியத்தைப் பறிக்கக்கூடாது” என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், புதிதாக நியமிக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களிடம் உரையாற்றிய சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் – நீதித்துறை சுதந்திரம், துணிச்சல் மற்றும் உரிய நேரத்தில் நீதியை வழங்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

அரசுக்கு எதிராகக் குடிமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகளைக் கையாள்வதிலும், சட்டத்தின் ஆட்சியில் பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைப் பாதுகாப்பதிலும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

வழக்காடுபவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைக் கவனத்தில் கொள்ளாமல், நடைமுறைச் சிக்கல்கள் அல்லது தொழில்நுட்பக் காரணங்களுக்கு (procedural technicalities) அதிக முக்கியத்துவம் அளிப்பது, நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிடும் என்று அவர் எச்சரித்தார்.

குறிப்பாக அரசியல் அழுத்தம், பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் அல்லது மக்கள் மத்தியில் செல்வாக்கற்ற முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல்கள் ஏற்படும்போது, ​​நீதிபதிகள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.