தலைப்புச் செய்திகள்

ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொகுசு வாகனங்கள் முடக்கம்

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வர் ரக்கித ராஜபக்ஷவின் – பல வங்கிக் கணக்குகள் மற்றும் சொகுசு வாகனங்களை முடக்குவதற்கு, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க குற்றச் செயல்கள் சட்டத்தின் விதிகளின் கீழ், நடைபெற்று வரும் விசாரணையின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரகித ராஜபக்ஷ தொடர்பான குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணைகளின் ஒரு பகுதியாக, இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விசாரணையில், ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் மனைவியிடமிருந்து 120 மில்லியன் லஞ்சமாக கோரப்பட்டு, குற்றவாளிக்கு உதவுவதற்கு ஈடாக பெறப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் – கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில், லஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னர் உண்மைகளை தெரிவித்திருந்தது.

இந்த வழக்கின் முதலாவது சந்தேக நபராக ரகித ராஜபக்ஷவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேகநபர்களாக சரித அபேசிங்க மற்றும் வருண ஹந்திகே அருண சதுரங்க ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் – முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் மற்றும் வாகனங்கள் முடக்கப்பட்டமை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வழங்குவதற்காக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று (29) நாவலவில் உள்ள ரகித ராஜபக்ஷவின் இல்லத்திற்குச் சென்றது.