
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரர், இன்று (06) சாதாரண உடையுடன் மற்றொரு வழக்குக்காக, கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது அவர் காவி ஆடை கழற்றப்பட்ட நிலையில், வெள்ளை சட்டை மற்றும் சாரத்தை அணிந்திருந்தார்.
இதேவேளை ‘ஜம்பர்’ என்று பொதுவாக அழைக்கப்படும் சிறைச்சாலைக்கான அங்கீகரிக்கப்பட்ட உடை நேற்று அவருக்கு வழங்கப்பட்டதாக, சிறைச்சாலைகள் ஆணையாளரும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளருமான சேனக பல்லெதென்ன தெரிவித்தார்.
மேலும், தேரரின் காவி உடை (பீதாம்பரம்) அகற்றப்பட்டுவிட்டதாகவும், சாதாரண கைதிகள் அடைக்கப்பட்டுள்ள வார்டிலேயே அவரும் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நீதிமன்ற அவமதிப்புக்காக ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் மீதமுள்ள காலத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.



