
அரச பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கை இந்த வருடம் சுமார் 100ஆல் குறையக்கூடும் என்று – எதிர்பார்க்கப்படுகிறது என, கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அரச பாடசலைகள் – கடந்த ஆண்டு 10,047 இருந்த நிலையில், அந்தந்த மாகாணங்களிலிருந்து அமைச்சுக்கு இதுவரை கிடைத்துள்ள தரவுகள், தற்போது பாடசாலைகளின் எண்ணிக்கை 10,000-க்கும் குறைவாகக் குறைந்துள்ளதைக் காட்டுகின்றன.
2024ஆம் ஆண்டில் அரச பாடசாலைகளின் எண்ணிக்கை 10,076ஆக இருந்தது.
குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட பாடசாலைகளை மற்ற பாடசாலைகளுடன் இணைக்கும் திட்டமே இந்த எண்ணிக்கை குறைவிற்கான காரணமாகக் கூறப்படுகிறது. இவ்வாறு இணைக்கப்படக்கூடிய சுமார் 300 பாடாசலைகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 13,804ஆல் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு மொத்தம் 303,617 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில், இந்த ஆண்டு 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.
இம்மாணவர்கள் 2022-ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பில் இணைந்தவர்கள் ஆவர். அந்த ஆண்டில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 292,517 ஆகும்.
அதன்படி, அந்த ஆண்டில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கைக்கும், இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கைக்கும் இடையே 2,650 என்ற வித்தியாசம் காணப்படுகிறது.
2021-ஆம் ஆண்டில், மொத்தம் 335,158 மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
க.பொ.த. உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் குறைந்து வருவதாகப் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.



