தலைப்புச் செய்திகள்

எம்.எச்.எம். அஷ்ரஃப்: செப்டம்பர் 16இல் முடிவடையாத ஓர் அரசியல் பயணம்

மொஹம்மட் இஸ்மாயில் மொஹம்மட் சதாத்

2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி, எம்.எச்.எம். அஷ்ரஃப் கொழும்பிலிருந்து இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றில் பயணமானார். அவரது பயண இலக்கு அம்பாறை. அவரது அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதி உருவான கிழக்கு மண்ணை நோக்கிய பயணம் அது.

ஆனால் அவர் அங்கு சென்றடையவில்லை.

அரநாயக்க பகுதியில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது. இலங்கை முஸ்லிம்களின் சமகால அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு அரசியல் பயணம் அன்றுடன் திடீரென முடிவுக்கு வந்தது. அஷ்ரஃபுக்கு அப்போது வயது 51 மட்டுமே.

இன்று, 26 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் அவரது படங்கள் மீண்டும் மேடைகளில் தோன்றுகின்றன. அவரது உரைகள் நினைவுகூரப்படுகின்றன. அவர் வளர்த்தெடுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) மரச் சின்னமும் அவரது அரசியல் நினைவுகளை இன்னும் தாங்கி நிற்கிறது.

ஆனால் நினைவு தினங்களில் அரசியல் தலைவர்களின் சாதனைகளை மட்டும் புகழ்ந்து பேசுவது வழக்கமாகிவிடுகிறது. அஷ்ரஃபையும் அவ்வாறு மட்டும் நினைவுகூருவது போதாது.

அவருக்குப் பின்னர் கட்சியை யார் வழிநடத்தினர் என்பதைக் காட்டிலும், இலங்கை அரசியலில் அஷ்ரஃப் உண்மையில் எதை மாற்றினார்? அவர் தொடங்கிய அரசியல் பயணத்தில் இன்று எவ்வளவு மீதமிருக்கிறது?

இந்தக் கேள்விகளே முக்கியமானவை.

அஷ்ரஃபின் அரசியல் பயணம் ஒரே நேர்கோட்டில் சென்றதல்ல. ஆரம்பத்தில் தமிழ் அரசியலுடன் நெருக்கமாகப் பயணித்த அவர், பின்னர் தனித்துவமான முஸ்லிம் அரசியல் இயக்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். அந்த இயக்கத்தை அரசியல் பேரம் பேசும் சக்தியாக மாற்றினார். அமைச்சரவைக்குள் நுழைந்தார். கிடைத்த அரசியல் அதிகாரத்தை நிறுவனங்களையும் அபிவிருத்தியையும் உருவாக்கப் பயன்படுத்தினார்.

ஆனால் தனது வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் அவர் மீண்டும் வேறு ஒரு திசையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார். அதுதான் தேசிய ஐக்கிய முன்னணி – National Unity Alliance (NUA). முஸ்லிம்களை மட்டும் மையமாகக் கொண்ட அரசியலைத் தாண்டி, பரந்த தேசிய அரசியலை நோக்கிய முயற்சியாக அது அமைந்தது.

இந்த மாற்றத்தை நான் தனிப்பட்ட முறையிலும் பார்த்திருக்கிறேன்.

NUA உருவாகுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, மருதமுனையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமொன்றில் நான் பேசியதை அஷ்ரஃப் கேட்டார். அதன் பின்னர் கட்சியின் இளைஞர் அமைப்பில் எனக்கு தேசிய மட்டப் பொறுப்பு ஒன்றை வழங்கினார்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர், NUA பதிவு செய்யப்பட்ட காலத்தில், கொழும்பிலிருந்த அவரது அமைச்சர் இல்லத்தில் அவருடன் பேசும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

அப்போது அந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையிலிருந்த தொடர்பை நான் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. இன்று திரும்பிப் பார்க்கும்போது அது தெளிவாகிறது.

முதல் சம்பவம் முஸ்லிம் இளைஞர்களிடம் அரசியல் விழிப்புணர்வை உருவாக்குவது பற்றியது. இரண்டாவது, அந்த விழிப்புணர்வு உருவாக்கப்பட்ட பின்னர் அவர்களை எங்கே அழைத்துச் செல்வது என்பது பற்றியது.

மொஹம்மட் ஹுசைன் மொஹம்மட் அஷ்ரஃப் 1948 ஒக்டோபர் 23ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையில், மொஹம்மட் மீரா லெப்பை ஹுசைன் மற்றும் மதீனா உம்மா தம்பதியருக்கு பிறந்தார். பின்னர் அவர் கல்முனைக்குடியில் – இன்றைய கல்முனையில் – வளர்ந்தார் (Jeyaraj, 2022).

இந்தப் பின்னணி முக்கியமானது.

அஷ்ரஃப் வளர்ந்த கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களும் தமிழர்களும் தமிழ் மொழியைப் பகிர்ந்துகொண்டனர். அன்றாட வாழ்வின் பல அம்சங்களையும் பகிர்ந்துகொண்டனர். அதே நேரம், தங்களுக்கென தனியான மத மற்றும் சமூக அடையாளங்களையும் கொண்டிருந்தனர்.

நிலம், கல்வி, நிர்வாகம், அரசியல் பிரதிநிதித்துவம், அரச வளங்களைப் பெறுதல் போன்ற பிரச்சினைகளை அஷ்ரஃப் முதன்முதலில் கொழும்பில் அறிந்துகொள்ளவில்லை. அவர் வளர்ந்த கிழக்கு மண்ணிலேயே அவற்றைப் பார்த்தார்.

கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்ற அவர், பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு முதலாம் தரத்தில் சித்தியடைந்ததாக அவரது வாழ்க்கை பற்றிய பதிவுகள் கூறுகின்றன. சிறிது காலம் அரச சட்டத்தரணியாகப் பணியாற்றிய பின்னர் தனிப்பட்ட சட்டத் தொழிலில் ஈடுபட்டார். பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் மேலதிக பட்டங்களைப் பெற்ற அவர், 1997இல் ஜனாதிபதி சட்டத்தரணியானார் (Jeyaraj, 2022).

ஆனால் அஷ்ரஃப் ஒரு சட்டத்தரணி மட்டும் அல்ல. அவர் ஒரு சிறந்த தமிழ் பேச்சாளர். எழுத்தாளர். கவிஞர். மாணவர் காலத்தில் சட்ட மாணவர் முஸ்லிம் மஜ்லிஸிலும் தமிழ் மன்றத்திலும் தலைமைப் பொறுப்புகளை வகித்ததாக பதிவுகள் கூறுகின்றன. அரசியலமைப்புச் சட்டம் பற்றியும் தமிழில் எழுதியுள்ளார்.

அவரது சிந்தனை வளர்ச்சியில் அவரைச் சுற்றியிருந்தவர்களுக்கும் பங்கு இருந்தது. அஷ்ரஃபின் மாமாவான நீதிபதி முஹம்மட் ஹுசைன், இளம் அஷ்ரஃபை காத்தான்குடியைச் சேர்ந்த கவிஞரும் கல்வியாளருமான அப்துல் காதர் லெப்பையுடன் அறிமுகப்படுத்தியதாக ஒரு வரலாற்றுப் பதிவு குறிப்பிடுகிறது (Ali, 2019).

இதன் பொருள் அஷ்ரஃபின் அரசியல் சிந்தனையை ஒருவர் மட்டும் உருவாக்கினார் என்பதல்ல. ஆனால் இளம் வயதிலேயே சட்டம், இலக்கியம், இஸ்லாம், முஸ்லிம் அடையாளம், தமிழ் அரசியல், இலங்கையின் அரசியலமைப்பு எதிர்காலம் போன்ற பல்வேறு விடயங்களுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார் என்பதை இது காட்டுகிறது.

பிற்காலத்தில் தனியான முஸ்லிம் அரசியல் குரலை மிக வலுவாக முன்வைத்த அஷ்ரஃப், தனது அரசியல் பயணத்தை தமிழ் அரசியலை எதிர்த்துக்கொண்டு ஆரம்பிக்கவில்லை.

இளம் அரசியல் செயற்பாட்டாளராக இருந்தபோது எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் அரசியல் மீது அவருக்கு மதிப்பு இருந்தது. சமஷ்டிக் கட்சியின் அரசியல் மரபுடன் தொடர்பு கொண்டார். தமிழ் அரசியல் சூழலுக்குள்ளும் பயணித்தார்.

அதனால், “முஸ்லிம்கள் தங்களது அரசியல் குரலைத் தாங்களே முன்வைக்க வேண்டும்” என்ற அவரது பிற்கால நிலைப்பாடு, தமிழ் அரசியலை எதிர்ப்பதிலிருந்து மட்டும் பிறந்த ஒன்றல்ல. தமிழ் அரசியலுடன் நெருக்கமாகப் பயணித்த அனுபவத்திலிருந்தும் அது உருவானது.

இனப்பிரச்சினை தீவிரமடைந்தபோது கிழக்கு முஸ்லிம்கள் முன் ஒரு முக்கியமான கேள்வி எழுந்தது.

நாம் தமிழ் பேசுகிறோம். ஆனால் அதனால் எமது அரசியல் நலன்களும் தமிழ் அரசியல் நலன்களாகவே கருதப்பட வேண்டுமா?

வடக்கு, கிழக்கின் அரசியல் எதிர்காலம் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் சக்திகளுக்கிடையில் மட்டும் பேசப்பட்டால், முஸ்லிம்களின் இடம் எங்கே?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1981 செப்டம்பரில் காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்டது. காத்தான்குடியைச் சேர்ந்த அஹமட் லெப்பை அதன் ஆரம்பகாலத் தலைவராக இருந்தார். அஷ்ரஃப் அதன் ஆரம்ப கட்டத்திலிருந்தே முக்கிய பங்கு வகித்தார். 1986இல் அவர் முறையாக தலைமைப் பொறுப்பை ஏற்று, கட்சிக்கு வலுவான தேர்தல் மற்றும் அரசியல் திசையை வழங்கினார் (Jeyaraj, 2020).

அந்தக் காலத்தில் நாட்டின் இனப்பிரச்சினை மோசமடைந்துகொண்டிருந்தது. கிழக்கின் சில பகுதிகளில் தமிழ்–முஸ்லிம் உறவுகளும் பதற்றமடைந்தன.

பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம், புறக்கணிப்பு போன்ற முஸ்லிம்களின் அச்சங்களை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் சக்தியாக மாற்றுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் அஷ்ரஃபுக்கு ஒரு தளத்தை வழங்கியது.

மரம் கட்சியின் சின்னமாக மாறியது. ஆனால் உண்மையான மாற்றம் சின்னத்தில் இல்லை. முஸ்லிம்களின் அரசியல் பேரம் பேசும் முறை மாறியது.

அஷ்ரஃபுக்கு முன்னரும் முஸ்லிம் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் இருந்தார்கள். ஆனால் பெரும்பாலும் பெரிய தேசியக் கட்சிகளுக்குள்ளேயே அவர்கள் செயல்பட்டனர்.

அஷ்ரஃப் வேறொரு வழியை உருவாக்கினார். பெரிய கட்சிக்குள் இருக்கும் தனிப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதி தனது சமூகத்தின் தேவைகளுக்காகப் பேரம் பேசுவதற்குப் பதிலாக, பெரிய கட்சிகளுடன் நேரடியாகப் பேரம் பேசக்கூடிய ஒரு முஸ்லிம் அரசியல் அமைப்பை அவர் வளர்த்தார்.

Yusoff, Sarjoon, Hussin மற்றும் Ahmad ஆகியோர், முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் கலாசாரத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறுகின்றனர். எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்த சமூகத்தை தேசிய அரசியலில் முக்கியமான அரசியல் சக்தியாக மாற்றியது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதே நேரம், கட்சியின் இன மற்றும் சமூக அடையாளத்தை மையமாகக் கொண்ட அரசியல் அணுகுமுறை குறித்த விமர்சனங்களையும் அவர்கள் பதிவு செய்கின்றனர் (Yusoff et al., 2017).

Andreas Johansson இதை வேறு கோணத்தில் பார்க்கிறார். முஸ்லிம் காங்கிரஸை மத அடிப்படைவாதக் கட்சியாக மட்டும் பார்க்க முடியாது; இஸ்லாமிய மொழி மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தினாலும், நடைமுறையில் நாடாளுமன்றப் பேச்சுவார்த்தை, கூட்டணி மற்றும் அரசியல் பேரம் பேசுதலைப் பயன்படுத்திய நடைமுறை அரசியல் இயக்கமாக அது செயல்பட்டது என்று அவர் விளக்குகிறார் (Johansson, 2019).

1989இல் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது, தனியான முஸ்லிம் கட்சி அரசியல் தேசிய மட்டத்தில் தவிர்க்க முடியாத உண்மையாக மாறியது.

அஷ்ரஃபின் பங்களிப்பு தேர்தல்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இலங்கையின் இனப்பிரச்சினை நீண்டகாலமாக சிங்களவர்–தமிழர் பிரச்சினையாகவே பேசப்பட்டது. ஆனால் நிலம், அதிகாரப் பகிர்வு, நிர்வாகம் மற்றும் வடக்கு–கிழக்கின் எதிர்காலம் தொடர்பாகப் பேசப்பட்ட அதே பகுதிகளில் பெருமளவு முஸ்லிம்களும் வாழ்ந்தனர்.

“முஸ்லிம்களைப் புறக்கணித்துவிட்டு மற்ற இரண்டு தரப்பினரும் மட்டும் தீர்வு காண முடியாது” என்ற அரசியல் உண்மையை தேசிய விவாதத்துக்குள் வலுவாகக் கொண்டு வந்தது அஷ்ரஃபின் முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று (Jeyaraj, 2022).

அஷ்ரஃபின் அரசியல் இயக்கம் கொழும்பில் நடந்த பேச்சுவார்த்தைகளாலும் நாடாளுமன்ற உரைகளாலும் மட்டும் கட்டியெழுப்பப்படவில்லை. அவர் அடிமட்ட அரசியலையும் இளைஞர்களையும் கவனித்தார்.

இதனை நான் நேரடியாக அனுபவித்திருக்கிறேன்.

அப்போது நான் முஸ்லிம் காங்கிரஸின் மாவட்டச் செயலாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். மருதமுனை மசூர் மௌலானா மைதானத்தில் ஒரு பெரிய முஸ்லிம் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. அதில் எனக்கும் அரசியல் உரையாற்ற வாய்ப்பு கிடைத்தது.

அஷ்ரஃப் அங்கு இருந்தார்.

ஒரு இளம் அரசியல் செயற்பாட்டாளராக கட்சித் தலைவரின் முன்னிலையில் பேசுவது இயல்பாகவே ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தியது. நான் எனது உரையை முடித்தேன். அதோடு அந்தச் சம்பவமும் முடிந்துவிட்டதாக நினைத்தேன்.

ஆனால் அஷ்ரஃப் எனது உரையைக் கவனமாகக் கேட்டிருந்தார்.

அதன் பின்னர் என்னை முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அணியின் தேசிய பிரசாரச் செயலாளராக நியமித்தார்.

அப்போது எனக்கு அந்தப் பதவிதான் முக்கியமாகத் தெரிந்தது. இன்று திரும்பிப் பார்க்கும்போது வேறு ஒன்றுதான் முக்கியமாகத் தெரிகிறது.

அவர் இளைஞர்களைக் கவனித்தார். அவர்கள் எப்படிப் பேசுகிறார்கள் என்பதை கேட்டார். அரசியல் கருத்துகளை எப்படிக் கொண்டு செல்கிறார்கள் என்பதைப் பார்த்தார். எதிர்காலத்தில் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடியவர்களை அடையாளம் கண்டார்.

அந்தக் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் மொழி முஸ்லிம் அடையாளம், உரிமைகள், பாதுகாப்பு, ஒற்றுமை, தனித்துவமான அரசியல் பிரதிநிதித்துவம் என்பவற்றை மிகவும் வலுவாக முன்வைத்தது.

பல ஆண்டுகளுக்குப் பின்னர், அதே அரசியல் சூழல் முஸ்லிம் இளைஞர்களை எங்கே கொண்டு செல்லக்கூடும் என்று அஷ்ரஃப் என்னிடம் கவலை தெரிவிப்பார் என்று அப்போது நான் நினைத்திருக்கவில்லை.

இலங்கையின் மிக வன்முறையான காலகட்டங்களில் ஒன்றில்தான் அஷ்ரஃப் தனது இயக்கத்தை வளர்த்தார்.

ஆனால் அவரது பிரதான அரசியல் வழிமுறை ஆயுதம் அல்ல. தேர்தல், நாடாளுமன்றம், பேச்சுவார்த்தை மற்றும் கூட்டணி அரசியல் என்பவையே அவரது முக்கியமான வழிமுறைகள்.

அதனால் அவரது அரசியல் மொழி எப்போதும் மிதமானதாக இருந்தது என்று கூற முடியாது. முஸ்லிம் காங்கிரஸின் இன அடையாளத்தை மையமாகக் கொண்ட அரசியல் அணுகுமுறை கல்வியியல் ஆய்வுகளிலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

Bart Klem, முஸ்லிம் உரிமைகள் மற்றும் சுயநிர்ணயம் பற்றிய மொழியைப் பயன்படுத்திய அதே கட்சி, அரசியல் அதிகாரத்தையும் அரச வளங்களுக்கான அணுகலையும் பெறுவதற்காக சிங்கள தலைமையிலான அரசுகளுடன் நடைமுறை கூட்டணிகளையும் அமைத்ததாகக் குறிப்பிடுகிறார் (Klem, 2011).

அதாவது அஷ்ரஃபை புரிந்துகொள்ள இரண்டு அம்சங்களையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும்: ஒருபுறம் சமூக அடையாளத்தை மையமாகக் கொண்ட அரசியல் எழுச்சி; மறுபுறம் நடைமுறையான கூட்டணி அரசியல்.

அஷ்ரஃப் தேர்தல் கணக்கையும் நன்றாகப் புரிந்துகொண்டிருந்தார். ஒரு சிறுபான்மை சமூகத்துக்கு அரசியல் செல்வாக்கைப் பெற மிகப்பெரிய மக்கள் தொகை எப்போதும் தேவையில்லை. இரண்டு பெரிய அரசியல் அணிகளும் நெருக்கமான போட்டியில் இருக்கும் சூழலில், ஒழுங்கமைக்கப்பட்ட சிறிய வாக்குத் தொகுதியும் தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம்.

1994இல் அது தெளிவாகத் தெரிந்தது.

முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் முக்கிய கூட்டணிக் கட்சியாக மாறியது. அஷ்ரஃப் அமைச்சரவைக்குள் நுழைந்தார். கப்பல், துறைமுகம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு உள்ளிட்ட முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை அவர் வகித்ததை நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ பதிவுகளும் உறுதிப்படுத்துகின்றன (Parliament of Sri Lanka, n.d.).

ஆனால் அரசியல் பேரம் பேசுவதில் உண்மையான கேள்வி வேறு.

அந்த அரசியல் பலத்தை வைத்து என்ன செய்தோம்?

அது அமைச்சுப் பதவிகளுடனும் நியமனங்களுடனும் முடிந்துவிடலாம். அல்லது நீண்டகாலம் நிலைத்திருக்கும் நிறுவனங்களாகவும் பொதுப் பயன்களாகவும் மாற்றப்படலாம்.

அஷ்ரஃபுடன் மிகவும் வலுவாக இணைக்கப்படும் நிறுவன அடையாளம் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.

அதன் முக்கியத்துவம் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது என்பதில் மட்டும் இல்லை. ஒரு பிராந்தியத்தினதும் சமூகத்தினதும் கல்வித் தேவையிலிருந்து எழுந்த கோரிக்கை, பின்னர் நாட்டின் தேசிய பல்கலைக்கழக அமைப்பின் ஒரு பகுதியாக மாறியது என்பதில்தான் அதன் பெரிய அர்த்தம் இருக்கிறது.

அவரது அமைச்சுக் காலத்தில் புனர்வாழ்வு, புனரமைப்பு, உட்கட்டமைப்பு மற்றும் துறைமுக அபிவிருத்தி நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

அஷ்ரஃபின் ஆட்சிக் காலத்தை முழுமையாகப் புகழ்ந்து பேச வேண்டிய அவசியமில்லை. தனிநபர் செல்வாக்கும் அரசியல் ஆதரவாளர்களை மையமாகக் கொண்ட அரசியல் கலாசாரமும் இலங்கையில் இருந்த சூழலில்தான் அவரும் இயங்கினார்.

ஆனால் அவர் எழுப்பிய கேள்வி இன்றும் முக்கியமானது:

அரசியல் பேரம் முடிந்ததும், அரசியல்வாதி பதவியைவிட்டு சென்றதும் மக்களுக்காக எது மீதமிருக்கிறது?

அஷ்ரஃபின் அரசியல் வெற்றிக்குள்ளேயே ஒரு சிக்கலும் இருந்தது.

ஒரு பாதிக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட சமூகத்தைப் பாதுகாக்க அடையாள அரசியல் உதவலாம். அது ஒற்றுமையை உருவாக்கலாம். தன்னம்பிக்கையை வளர்க்கலாம். அரசியல் பேரம் பேசும் சக்தியைக் கொடுக்கலாம்.

ஆனால் ஒரு சமூகத்தை அதன் இன அல்லது மத அடையாளத்தைச் சுற்றி வெற்றிகரமாக ஒன்றிணைத்த பின்னர் என்ன செய்வது?

அந்த அடையாளமே அந்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் இடையிலான நிரந்தரச் சுவராக மாறாமல் ஒரு தலைவர் எப்படித் தடுக்க முடியும்?

இது முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல. சிங்கள மற்றும் தமிழ் தேசியவாத அரசியலிலும் இதைப் பார்த்திருக்கிறோம்.

ஒரு சமூகத்தைப் பாதுகாப்பதற்காக ஆரம்பத்தில் பயன்படுத்தப்படும் அரசியல் மொழி, தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டால் இறுதியில் அந்த சமூகத்தை மற்ற சமூகங்களிடமிருந்து அரசியல் ரீதியாகப் பிரித்துவிடலாம்.

அஷ்ரஃபின் வாழ்க்கையின் இறுதிக் காலம் சுவாரஸ்யமாக மாறுவது இங்கேதான்.

அவர் இந்தச் சிக்கலை உணரத் தொடங்கியதாகத் தெரிகிறது.

1998ஆம் ஆண்டளவில், ஒரு சிறுபான்மைக் கட்சியாக மட்டும் செயல்படுவதில் எல்லைகள் இருப்பதாகவும், தேசிய அரசியலை நோக்கி எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் பகிரங்கமாகப் பேசத் தொடங்கினார்.

National Unity Alliance (NUA) 1999 ஓகஸ்ட் 23ஆம் திகதி பதிவு செய்யப்பட்டது (Jeyaraj, 2022).

NUA உருவாக்கப்பட்டதால் அஷ்ரஃப் முழுமையாக இன அடையாள அரசியலைக் கடந்துவிட்டார் என்று கூறுவது சரியாகாது. அவர் இறந்துவிடுவதற்கு முன் NUA மிகக் குறுகிய காலமே செயல்பட்டது. மேலும், தேசிய அளவில் வளர விரும்பிய ஒரு அரசியல்வாதிக்கு பரந்த கூட்டணியை உருவாக்குவது தேர்தல் ரீதியாகவும் பயனுள்ளதுதான்.

ஆனால் NUA பற்றிய எனது புரிதலை மாற்றிய ஒரு தனிப்பட்ட உரையாடல் எனக்கு இருந்தது.

அந்தக் காலத்தில் நான் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையில் விரிவுரையாளராக இணைந்திருந்தேன்.

ஒருநாள் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

“Leader உங்களைச் சந்திக்கச் சொல்கிறார்.”

நான் கொழும்பிலிருந்த அஷ்ரஃபின் அமைச்சர் இல்லத்திற்குச் சென்றேன்.

அங்கு எம்.எம். மொஹிதீன், சம்மாந்துறை யாசீன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் மேலும் சில மூத்த தலைவர்கள் இருந்தனர்.

அங்கு மிகவும் சாதாரணமான, மகிழ்ச்சியான சூழல் இருந்தது. NUA பதிவு செய்யப்பட்டதை அவர்கள் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். ஒன்றாக உணவு உண்டுகொண்டிருந்தார்கள்.

அஷ்ரஃப் என்னைக் கண்டதும் எனக்கும் ஒரு தட்டு உணவு கொண்டுவரச் சொன்னார்.

நான் ஏற்கனவே மதிய உணவு சாப்பிட்டிருந்தேன். ஆனால் தலைவர் தானாகவே சாப்பிடுமாறு அழைக்கும்போது மறுப்பது சரியாகத் தெரியவில்லை. அதனால் கொஞ்சம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் அமர்ந்தேன்.

இன்று நினைத்துப் பார்க்கும்போது அது மிகவும் சாதாரணமான ஒரு சூழல்.

மேடை இல்லை. ஒலிவாங்கி இல்லை. அரசியல் உரை இல்லை.

அஷ்ரஃப், சில மூத்த கட்சித் தலைவர்கள், உணவு, சாதாரண உரையாடல்.

ஆனால் என்னிடம் ஒரு கேள்வி இருந்தது.

முஸ்லிம் காங்கிரஸை அவர் எவ்வாறு கட்டியெழுப்பினார் என்பதை நான் பார்த்திருந்தேன். அந்தக் கட்சி அவருக்கு எவ்வளவு அரசியல் பலத்தை வழங்கியது என்பதும் எனக்குத் தெரியும்.

SLMC மூலம் அவர் நாடாளுமன்றத்திற்குச் சென்றார். அமைச்சரவைக்குச் சென்றார். நாட்டின் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படும் இடத்தை அடைந்தார்.

அப்படியிருக்கும்போது ஏன் இன்னொரு அரசியல் அமைப்பு?

நான் அவரிடம், “Sir, ஒரு கேள்வி கேட்கலாமா?” என்று கேட்டேன்.

அவர் சம்மதித்தார்.

நான் கேட்ட கேள்வியின் சாரம் இதுதான்:

“முஸ்லிம் காங்கிரஸை இவ்வளவு வலுவான அரசியல் இயக்கமாக உருவாக்கி, அதன் மூலம் உயர்ந்த அரசியல் நிலையை அடைந்த பின்னர் ஏன் National Unity Alliance என்ற இன்னொரு அமைப்பை உருவாக்கினீர்கள்?”

அவர் அளித்த பதிலின் கருத்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக என் நினைவில் இருக்கிறது.

முஸ்லிம்களுக்கு அரசியல் பலத்தை உருவாக்கிய காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் சூழலைப் பற்றி அவர் பேசினார்.

முஸ்லிம்களை ஒன்றிணைக்கவும் அவர்களிடம் அரசியல் விழிப்புணர்வை உருவாக்கவும் இன உணர்வு, சமூகத்தை மையமாகக் கொண்ட கோஷங்கள் மற்றும் அரசியல் மொழி பயன்படுத்தப்பட்டதைப் பற்றி அவர் பேசினார்.

ஆனால் அதே அரசியல் தொடர்ந்து சென்றால், எதிர்காலத்தில் இளைஞர்களை அது எங்கே கொண்டு செல்லும் என்பது குறித்து அவர் கவலைப்பட்டார்.

எனது நினைவில் மிகவும் தெளிவாக இருப்பது முஸ்லிம் இளைஞர்கள் பற்றிய அவரது கவலை.

ஒரு சமூகத்தை விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒன்றிணைப்பதற்கும் ஒரு காலத்தில் உதவிய அரசியல் சூழல், மாற்றமின்றி தொடர்ந்து சென்றால் பின்னர் ஆபத்தான திசையிலும் செல்லலாம் என்பதே அவரது கவலை.

முஸ்லிம் இளைஞர்கள் அவர் விரும்பாத ஒரு திசைக்குச் சென்றுவிடக்கூடாது என்று அவர் நினைத்தார். அவர்களை ஒரு பரந்த தேசிய அரசியல் நோக்கத்தை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினார்.

இந்த உரையாடலை நான் அஷ்ரஃபின் வார்த்தைகளை அப்படியே பதிவு செய்த உரையாக முன்வைக்கவில்லை.

அப்போது நான் அவரது பேச்சைப் பதிவு செய்யவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் அதிகமான காலமும் கடந்துவிட்டது.

அந்த உரையாடலின் முக்கியமான கருத்தும் அதன் அர்த்தமும் என் நினைவில் எவ்வாறு இருக்கிறதோ அதையே இங்கே பதிவு செய்கிறேன்.

அந்த உரையாடலில் என்னை மிகவும் பாதித்தது ஒரு புதிய தேர்தல் திட்டம் அல்ல.

தனக்கு அரசியல் பலத்தை உருவாக்க உதவிய அரசியல் மொழியின் எதிர்கால விளைவுகளைப் பற்றி, அதிகாரத்தின் உச்சியில் இருந்த ஒரு தலைவர் தானே சிந்தித்துக் கொண்டிருந்ததுதான்.

புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தை விழிப்படையச் செய்து ஒன்றிணைக்கத் தேவையான அரசியல், அந்த சமூகத்தின் அடுத்த தலைமுறையை வழிநடத்தத் தேவையான அரசியலாக எப்போதும் இருக்க வேண்டியதில்லை.

இந்தக் கோணத்தில் பார்த்தால் NUAவை தேர்தல் விரிவாக்கமாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. அது ஒரு வகையில் தனது அரசியல் பயணத்தைத் திரும்பிப் பார்த்து, அதன் அடுத்த கட்டத்தைத் தேடிய முயற்சியாகவும் இருக்கலாம்.

அஷ்ரஃப் முஸ்லிம் உரிமைகளை கைவிடவில்லை. தனித்துவமான முஸ்லிம் பிரதிநிதித்துவம் தேவையில்லை என்றும் கூறவில்லை.

ஆனால் சமூக அடையாளத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அரசியல் தன்னம்பிக்கையை, பின்னர் எவ்வாறு பரந்த இலங்கைப் பிரஜைத்துவத்திற்குள் கொண்டு செல்லலாம் என்ற கேள்வியை அவர் எழுப்பத் தொடங்கியிருக்கலாம்.

அவரது பகிரங்கமான தேசிய அரசியல் நகர்வுகளும் இந்த நினைவுக்கு ஒரு பின்னணியை வழங்குகின்றன. ஆனால் அவரது தனிப்பட்ட நோக்கம் என்ன என்பதை அவை முழுமையாக நிரூபிப்பதாக நான் கூறவில்லை (Jeyaraj, 2022).

2000 செப்டம்பர் 16ஆம் திகதி ஹெலிகொப்டர் அரநாயக்க பகுதியில் விபத்துக்குள்ளானது.

அஷ்ரஃபின் மரணம் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கையை மட்டும் முடிக்கவில்லை. ஒரு அரசியல் முயற்சியையும் பாதியிலேயே நிறுத்தியது.

NUA எப்படிப்பட்ட அரசியல் அமைப்பாக வளர்ந்திருக்கும் என்பதை அறியும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

2002 சமாதானப் பேச்சுவார்த்தை மேசையில் அஷ்ரஃப் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்பதையும் நாம் அறிய முடியாது.

ஒரு வலுவான தனித்துவமான முஸ்லிம் அரசியல் இயக்கத்தை உருவாக்கிய அதே மனிதரால், பின்னர் அதை பரந்த தேசிய அரசியல் பாதைக்குக் கொண்டு செல்ல முடிந்திருக்குமா?

அதற்கும் பதில் கிடைக்கவில்லை.

அவரது மரணம் அவர் உருவாக்கிய இயக்கத்தின் மற்றொரு பலவீனத்தையும் வெளிப்படுத்தியது.

SLMCக்கு மிகவும் வலுவான தலைவர் இருந்தார். ஆனால் அவருக்குப் பின்னர் தலைமை மாற்றத்தைச் சீராக மேற்கொள்ளும் அளவுக்கு வலுவான அமைப்பு உருவாக்கப்பட்டிருந்ததா என்ற கேள்வி எழுந்தது.

அவரது மரணத்திற்குப் பின்னர் தலைமைப் போட்டிகளும் அரசியல் பிளவுகளும் ஏற்பட்டன.

பின்னர் வெளிவந்த ஆய்வுகள், அஷ்ரஃபுக்குப் பிந்தைய முஸ்லிம் அரசியல் பிளவுகள் கூட்டுப் பேரம் பேசும் சக்தியையும் அரசியல் ஒற்றுமையையும் பலவீனப்படுத்தியதாக சுட்டிக்காட்டுகின்றன. Klem போன்ற ஆய்வாளர்கள் அமைச்சுப் பதவிகள், அரச வளங்களை அணுகுதல் மற்றும் அரசியல் ஆதரவாளர் வலையமைப்புகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்றதையும் குறிப்பிடுகின்றனர் (Klem, 2011).

இங்கே முக்கியமான கேள்வி:

ஒரு வலுவான தலைவரைச் சுற்றி உருவான அரசியல் இயக்கத்தை, அந்தத் தலைவர் இல்லாதபோதும் நிலைத்திருக்கக்கூடிய வலுவான அரசியல் நிறுவனமாக மாற்ற முடியுமா?

SLMC தொடர்ந்து இருந்தது.

வேறு முஸ்லிம் கட்சிகளும் உருவாகின.

முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்ந்து அரசாங்கங்களில் இணைந்தனர்.

அமைச்சுப் பதவிகள் கிடைத்தன.

கூட்டணி அரசியல் தொடர்ந்தது.

அரசியல் பேரம் பேசும் முறை மிகவும் வலுவாகவே உயிர் பிழைத்தது.

ஆனால் ஒரு கேள்வி இருக்கிறது:

அஷ்ரஃபின் நோக்கத்தைவிட, அவரது அரசியல் பேரம் பேசும் முறைதான் அதிகமாக உயிர் பிழைத்ததா?

அரசியல் பலத்தின் மூலம் அமைச்சுப் பதவிகள், நியமனங்கள், வளங்கள் என்பவற்றைப் பெற முடியும். ஆனால் அதன் பெரிய பயன் மக்களின் அடிப்படை நிலையை மாற்றுவதில்தான் இருக்க வேண்டும்.

கல்வி, உரிமைகள், பாதுகாப்பு, நிர்வாகம், பொருளாதார வாய்ப்புகள், சமூக ஒற்றுமை, சிறந்த அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

அரசியல் பேரம் பேசுவதன் மூலம் பதவியில் இருப்பவர்கள் மட்டும் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்க, மக்களின் வாழ்க்கை மாறவில்லை என்றால் அந்தப் பேரம் தனது உண்மையான நோக்கத்தை இழந்துவிடுகிறது.

அஷ்ரஃப் தவறுகளே செய்யாத அரசியல் தலைவர் என்று அவரை நினைவுகூர வேண்டியதில்லை.

அவர் அதிகாரத்தை நாடினார். சமூக அடையாளத்தை மிகவும் வலுவாகப் பயன்படுத்திய அரசியல் மொழியையும் பயன்படுத்தினார். அவர் தலைமையிலான அரசியல் இயக்கத்தில் அவரது தனிப்பட்ட தலைமை மிகவும் வலுவாக இருந்தது.

கல்வியியல் ஆய்வுகளும் அஷ்ரஃபை ஒரே கோணத்தில் பார்க்கவில்லை.

Yusoff மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் முஸ்லிம்களின் அரசியல் கலாசாரத்தையும் சமூக–அரசியல் முன்னேற்றத்தையும் மாற்றியதில் SLMCயின் பங்களிப்பை வலியுறுத்துகின்றனர். அதே நேரம் சமூக அடையாள அரசியல் குறித்த விமர்சனங்களையும் குறிப்பிடுகின்றனர் (Yusoff et al., 2017).

Johansson, SLMCயின் நடைமுறை நாடாளுமன்ற மற்றும் கூட்டணி அரசியலை முக்கியமாகப் பார்க்கிறார் (Johansson, 2019).

Klem, இன அடையாள அரசியல் மொழி, அரசியல் அதிகாரத்திற்கான அணுகல் மற்றும் ஆதரவாளர் அரசியல் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பை விமர்சனமாகப் பார்க்கிறார் (Klem, 2011).

இந்தப் பார்வைகளை ஒன்றாகப் படித்தால் நமக்குக் கிடைப்பது ஒரு புனிதராக்கப்பட்ட அஷ்ரஃப் அல்ல. ஒரு வில்லனாக்கப்பட்ட அஷ்ரஃபும் அல்ல.

முஸ்லிம்களின் அரசியல் குரலை வலுப்படுத்திய அதே நேரம், அடையாள அரசியல் மற்றும் கூட்டணி அரசியலின் முரண்பாடுகளுக்குள்ளும் இயங்கிய ஒரு சிக்கலான அரசியல் தலைவர்தான் நமக்குத் தெரிகிறார்.

என்னைப் பொறுத்தவரை, அவரது அரசியல் பயணத்தை இரண்டு தனிப்பட்ட நினைவுகள் இன்னும் விளக்குகின்றன.

மருதமுனையில் நான் பார்த்த அஷ்ரஃப் ஒரு அரசியல் அமைப்பாளர்.

ஒரு இளம் செயற்பாட்டாளரின் பேச்சைக் கேட்டார். இளைஞர்களை அடையாளம் கண்டார். ஒரு அரசியல் இயக்கத்தை வளர்த்தார். முஸ்லிம் அரசியல் விழிப்புணர்வை உருவாக்க முயன்றார்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் கொழும்பில் நான் சந்தித்த அஷ்ரஃப் வேறொரு கேள்வியைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தார்.

அதே அரசியல் விழிப்புணர்வு இன மற்றும் சமூக கோஷங்களுடன் நிரந்தரமாக இணைந்திருந்தால், அடுத்த தலைமுறை எங்கே செல்லும்?

பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அந்த இரண்டு சந்திப்புகளுக்கும் இடையிலான தொடர்பை நான் புரிந்துகொண்டேன்.

முதல் சந்திப்பு ஒரு தலைமுறையை உருவாக்குவது பற்றியது.

இரண்டாவது சந்திப்பு அந்தத் தலைமுறை எங்கே செல்ல வேண்டும் என்பது பற்றியது.

அஷ்ரஃப் இறந்து 26 ஆண்டுகள் கடந்துவிட்டன.

அவர் விட்டுச் சென்ற இலங்கையிலிருந்து இன்றைய இலங்கை பல வழிகளில் மாறியுள்ளது. போர் முடிந்துவிட்டது. அந்தப் போரின் வன்முறைகளை நேரடியாக அனுபவிக்காத புதிய தலைமுறையும் வளர்ந்துள்ளது.

ஆனால் கிழக்கில் நிலம் இன்னும் உணர்வுபூர்வமான பிரச்சினையாக உள்ளது. நிர்வாக எல்லைகள் பற்றிய பிரச்சினைகள் தொடர்கின்றன. தமிழ்–முஸ்லிம் உறவுகள் சில சந்தர்ப்பங்களில் இன்னும் பதற்றமடைகின்றன. மதம் மிக விரைவாக அரசியலாக்கப்பட முடிகிறது. சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய கேள்விகளும் இன்னும் முடிவடையவில்லை.

எனவே அஷ்ரஃபின் முடிவடையாத அரசியல் பயணம் இன்று இலங்கைக்கு ஒரு பெரிய ஜனநாயகக் கேள்வியை விட்டுச் செல்கிறது:

ஒரு சமூகம் தனது அடையாளத்தையும் அரசியல் கௌரவத்தையும் பாதுகாத்துக்கொண்டே, அந்த அடையாளத்தை மற்ற பிரஜைகளிடமிருந்து தன்னைப் பிரிக்கும் நிரந்தரச் சுவராக மாற்றாமல் எப்படிச் செயல்பட முடியும்?

அஷ்ரஃப் இந்தப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வைக் கண்டுபிடித்தார் என்று கூற முடியாது. வரலாற்றையும் அப்படி மாற்றி எழுதக்கூடாது.

ஆனால் தனது அரசியல் பயணத்தில் ஏற்கனவே இருந்த ஒரு முறை போதாது என்று அவர் உணர்ந்த சில முக்கிய தருணங்களைப் பார்க்க முடிகிறது.

பழைய முறையிலான முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவம் போதாது என்று நினைத்தபோது, தனித்துவமான முஸ்லிம் அரசியல் இயக்கத்தை உருவாக்க உதவினார்.

முஸ்லிம்களின் குறைந்த மக்கள் தொகை அரசியல் செல்வாக்கை மட்டுப்படுத்தியபோது, ஒழுங்கமைக்கப்பட்ட வாக்குகளை அரசியல் பேரம் பேசும் சக்தியாக மாற்றினார்.

அரசியல் பிரதிநிதித்துவம் மட்டும் போதாது என்றபோது, கிடைத்த அதிகாரத்தை நிறுவனங்களை உருவாக்கப் பயன்படுத்தினார்.

அடையாள அரசியலில் பயன்படுத்தப்பட்ட மொழியே அடுத்த தலைமுறைக்கு வேறு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கவலைப்பட்டபோது, பரந்த தேசிய அரசியல் தளத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார்.

பின்னர் அந்த ஹெலிகொப்டர் விழுந்தது.

தலைவர் மறைந்தார்.

SLMC உயிர் பிழைத்தது.

மரச் சின்னம் உயிர் பிழைத்தது.

கூட்டணி அரசியல் உயிர் பிழைத்தது.

அரசியல் பேரம் பேசும் முறையும் உயிர் பிழைத்தது.

ஆனால் அடையாளத்திலிருந்து பிரதிநிதித்துவத்திற்கு, பிரதிநிதித்துவத்திலிருந்து அரசியல் தன்னம்பிக்கைக்கு, அங்கிருந்து பரந்த தேசியப் பிரஜைத்துவத்திற்கு செல்ல வேண்டிய அந்தப் பெரிய அரசியல் பயணம் இன்னும் முடிவடையவில்லை.

அதனால்தான், அவரது மறைவுக்கு 26 ஆண்டுகள் கடந்துள்ள இந்த செப்டம்பர் 16ஆம் திகதியில் நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி,

“எம்.எச்.எம். அஷ்ரஃப் விட்டுச் சென்ற அரசியல் மரபைத் தொடர்ந்தவர்கள் யார்?”

என்பது மட்டும் அல்ல.

அதைவிட முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது:

“அஷ்ரஃப் அடுத்ததாக எந்தத் திசையை நோக்கிச் செல்ல முயன்றார் என்பதை உண்மையில் புரிந்துகொண்டவர்கள் யார்?”

மேற்கோள்கள் / References

  1. Ali, A. (2019, September 20). Origins, rise and irrelevance of SLMC. Daily FT. https://www.ft.lk/columns/origins-rise-and-irrelevance-of-slmc/4-686028
  2. Jeyaraj, D. B. S. (2020, September 16). Remembering SLMC Leader M.H.M. Ashraff. Daily FT. https://www.ft.lk/d-b-s-jeyaraj/Remembering-SLMC-Leader-M-H-M-Ashraff/10496-706083
  3. Jeyaraj, D. B. S. (2022, September 17). MHM Ashraff: From Muslim Leader to National Statesman. Daily Mirror. https://www.dailymirror.lk/DBS-Jeyaraj-Column/MHM-Ashraff-From-Muslim-Leader-to-National-Statesman/172-245103
  4. Johansson, A. (2019). Pragmatic Muslim politics: The case of Sri Lanka Muslim Congress. Springer Nature. https://doi.org/10.1007/978-3-030-12789-3
  5. Klem, B. (2011). Islam, politics and violence in Eastern Sri Lanka. The Journal of Asian Studies, 70(3), 730–753. https://doi.org/10.1017/S002191181100088X
  6. Parliament of Sri Lanka. (n.d.). Hon. M. H. M. Ashraff, M.P. – Member profile. https://www.parliament.lk/en/members-of-parliament/mp-profile/2069
  7. Yusoff, M. A., Sarjoon, A., Hussin, N., & Ahmad, A. (2017). Analyzing the contributions of the Sri Lanka Muslim Congress and its founder–leader to Muslim politics and community in Sri Lanka. Social Sciences, 6(4), 120. https://doi.org/10.3390/socsci6040120