தலைப்புச் செய்திகள்

குழந்தைகள் மற்றும் இள வயதினர், வருடாந்தம் 1000 பேர் வரை, புற்றுநோயினால் இலங்கையில் பாதிக்கப்படுகின்றனர்

லங்கையில் ஆண்டுதோறும் 19 வயதுக்குட்பட்ட சுமார் 900 முதல் 1,000 வரையிலான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவதாக, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (NCCP) சமூக வைத்திய நிபுணர் டொக்டர் சூரஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

லுகேமியா (இரத்தப் புற்றுநோய்), லிம்போமா, மூளைக் கட்டிகள், எலும்புப் புற்றுநோய்கள் மற்றும் கண் புற்றுநோய்கள் ஆகியவை மிகவும் பொதுவாகக் கண்டறியப்படும் புற்றுநோய் வகைகளாக உள்ளன என்று – டொக்டர் சூரஜ் பெரேரா சுட்டிக்காட்டினார்.

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கேற்ற முறையான சிகிச்சையை வழங்கினால், அதைக் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரைப் பாதிக்கும் புற்றுநோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் ‘குழந்தைப் பருவப் புற்றுநோய் விழிப்புணர்வு’ மாதமாக அனுசரிக்கப்படுகிறது.