தலைப்புச் செய்திகள்

இலங்கை நீதிமன்றங்களில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக, புதிய செயலி அறிமுகம்

லங்கையின் நீதித்துறை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில், திறந்த நீதிமன்ற விசாரணைகளின் போது, சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக, ஒரு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சாட்சியங்களையும் துல்லியமாகப் பதிவுசெய்ய, இந்தச் செயலி குரல்வழித் தட்டச்சுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர் என்று, அரச ஊடகமான சிலுமின தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு சாட்சியின் குரலையும் தனித்தனியாக அடையாளம் காணும் வகையில், இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு சாட்சி – மீண்டும் சாட்சியமளிக்கும்போது எந்தக் குழப்பமும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வழக்கு அறிக்கைகள் மற்றும் சட்டக் குறிப்புகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் நீண்ட காலமாக ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து, வழக்குகள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதற்கு வழிவகுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய தாமதங்களைக் குறைக்கவும் செயல்திறனை மேம்படுத்தவும் இந்த புதிய செயலி நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.