
முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, தனது பதவிக்காலத்தில் வாகனங்களையும் எரிபொருளையும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் தகவல்களை நிராகரித்துள்ளார்.
அவர் மீதான குற்றச்சாட்டுகளை – உண்மைகளை முழுமையாகத் திரித்துக் கூறப்பட்ட, அரசியல் உள்நோக்கம் கொண்ட தவறான தகவல் என்றும், ஒரு தீய தாக்குதல் எனவும், இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 2025-ல் இரண்டு முறை இவ்விஷயம் குறித்துத் தான் தெளிவுபடுத்தியிருந்ததாக முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர்கள், பிரதி சபாநாயகர்கள், குழுக்களின் பிரதித் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், பிரதிப் பொதுச் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்டவர்களின் வாகன மற்றும் எரிபொருள் பயன்பாடு தொடர்பில், விசேட கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், குறுகிய அரசியல் நலன்களைப் பூர்த்தி செய்யும் வகையில், தனது பதவிக்காலம் தொடர்பான தகவல்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு முன்னிலைப்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட வாகனங்களை மட்டுமே தாம் பயன்படுத்தியதை, அந்தக் கணக்காய்வு அறிக்கையே உறுதி செய்துள்ளதாகவும், தாம் ஒன்பது வாகனங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட முந்தைய குற்றச்சாட்டு பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க, சபாநாயகரின் உத்தியோகபூர்வ பணிகள் மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காக அனைத்து வாகனங்களும் ஒதுக்கப்பட்டதாக முன்னாள் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 2022-ல் ஏற்பட்ட அரசியல் மற்றும் சமூகக் கலவரங்களின் போது, அவரது உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட இல்லங்களில் சிறப்பு அதிரடிப்படை மற்றும் மேலதிக பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
அக்காலகட்டத்தில், அரசியலமைப்பு ரீதியான அதிகாரப் பரிமாற்றம் நடைபெற்றபோது, நாடாளுமன்றத்தைச் சுற்றியும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரைகளின் அடிப்படையில், வாகனங்கள் முன்செல்லும் மற்றும் பாதுகாப்பு வாகனங்களாகவும், பாதுகாப்பு அதிகாரிகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்பட்டன.
இந்தக் காலகட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட இரண்டு மேலதிக வாகனங்களில் ஒன்று – எரிபொருள் சிக்கன மொடல் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ பணிகள், பயணம் மற்றும் பாதுகாப்புத் தேவைகள் அதிகரித்ததன் காரணமாக, 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் எரிபொருள் செலவு படிப்படியாக அதிகரித்ததாக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த பதவியில் இருக்கும் சபாநாயகரின் பாதுகாப்பு, வாகன அணிவகுப்பு, நாடு முழுவதும் மேற்கொள்ளும் உத்தியோகப்பூர்வ பயணங்களின் போது பயன்படுத்தும் எரிபொருளை, ஒரு சாதாரண தனிநபரின் சொந்த வாகனப் பயன்பாட்டுடன் ஒப்பிட முடியாது என்று அவர் வாதிட்டுள்ளார்.
2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் எரிபொருள் பயன்பாடு, முந்தைய சபாநாயகர்களின் கீழ் பதிவு செய்யப்பட்டதைப் போலவே இருந்ததாக, கணக்காய்வு அறிக்கை காட்டுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்ட அனைத்து வாகனங்களின் மொத்த வருடாந்த எரிபொருள் நுகர்வை, ஒரே வாகனம் பயன்படுத்தியது போல – சமூக ஊடகப் பயனர்கள் சித்தரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய கூற்றுகள் எண்களைப் பற்றிய புரிதல் இல்லாததையோ அல்லது வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதையோ பிரதிபலிப்பதாக அவர் விவரித்துள்ளார்.
ஏதேனும் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இருந்தால் சட்டரீதியான அல்லது நிர்வாகரீதியான நடவடிக்கை எடுப்பதற்குத் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், தொடர்புடைய அனைத்துத் தரவுகளையும் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும், சபாநாயகர் அலுவலகத்திற்கு எரிபொருள் உச்சவரம்பு எதுவும் விதிக்கப்படாததால், எரிபொருள் வரம்பின்றி வழங்கப்பட்டதாக, நாடாளுமன்றம் மீதான தலைமை கணக்காய்வாளரின் சிறப்பு அறிக்கை குறிப்பிடுகிறது.
அறிக்கையின் அட்டவணை 7-இன் படி, சபாநாயகர் அலுவலகம் 2016 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் 299,146 லீட்டர் எரிபொருளைப் பெற்றுள்ளது, இதன் மதிப்பு ரூ. 75,260,648 ஆகும்.
மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பதவிக்காலத்தில், 2023-ஆம் ஆண்டில் 47,926 லீட்டர் எரிபொருள் பெறப்பட்டுள்ளது, இது மாதத்திற்குச் சராசரியாக 3,994 லீட்டர் ஆகும். மேலும், 2024-ஆம் ஆண்டில் 73,461 லீட்டர் எரிபொருளைப் பெற்றுள்ளது, இது மாதத்திற்குச் சராசரியாக 6,122 லீட்டர் ஆகும்.
சபாநாயகர் அலுவலகத்தின் மாதாந்த எரிபொருள் நுகர்வு, 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-ஆம் ஆண்டில் 66% மற்றும் 2024-ஆம் ஆண்டில் 155% அதிகரித்துள்ளதாகத் தலைமைக் கணக்காய்வாயளரின் அறிக்கை குறிப்பிட்டதுடன், இந்தத் திடீர் அதிகரிப்பைச் சிக்கலானதாகவும் சர்ச்சைக்குரியதாகவும் எழுப்புவதாகவும் விவரித்துள்ளது.
தொடர்பான செய்தி: நாலரைக் கோடி ரூபாயை எரிபொருளுக்காக இரண்டு வருடங்களில் பயன்படுத்திய சபாநாயகர்: கணக்காய்வில் அம்பலம்



