தலைப்புச் செய்திகள்

‘வெற்றிலைப் பெட்டி’யாக மாறியுள்ள, மு.காவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் – கிட்டத்தட்ட ‘வெற்றிலைப் பெட்டி’ போல் ஆக்கியுள்ளார்.

2024ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸுக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, முதலில் எம்.எஸ். நளீமுக்கு ஹக்கீம் வழங்கினார். பிறகு, ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக – அந்தப் பதவியை நளீம் ராஜநாமா செய்தார். அதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, பொத்துவிலைச் சேர்ந்த எம்.எஸ். வாசித் நியமிக்கப்பட்டார்.

03 ஜூலை 2025 அன்று முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட வாசித், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி, அவரின் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்.

ஒருவருக்கு ஒரு வருடம் என்கிற கணக்கில், இதுவரை – இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஹக்கீம் வழங்கி வருகிறார். இனியும் அப்படித்தான் நடக்கும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது.

‘கழுதைக்கு கரட் காட்டுவது போல’ என்கிற ஒரு சொற்றொடர் உள்ளதை அறிவீர்கள். வண்டியில் பூட்டப்பட்ட கழுதையின் முன்னால், எட்டாத தூரத்தில் கரட் ஒன்றை கழுதைக்காரன் கட்டி விடுவான். கழுதை – அதை சாப்பிடுவதற்காக நாக்கை நீட்டும், ஆனால் எட்டாது. எனவே, அது கரட்டை நோக்கி நடக்கும், ஆனால் கரட் கடைசி வரை – கழுதைக்கு எட்டாது.

இப்படி, இந்தத் தேசியப்பட்டியல் என்கிற கரட்டை – கட்சிக்குள்ளிருப்பவர்களுக்கு ஹக்கீம் மிக நீண்ட காலமாகவே காட்டிக் கொண்டிருக்கிறார். தேசியப்பட்டிலை வாசித் ராஜிநாமா செய்யப்போகிறார் என்றவுடன், அடுத்து இவருக்குத்தான் தேசியப்பட்டியல் கிடைக்கும் என்று, பலரின் பெயர் – இப்போதே அடிபடத் தொடங்கி விட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கென்று ஒரு மரியாதை இருந்தது, இப்போதும் இருக்கிறது. ஆனால், முஸ்லிம் காங்கிஸுக்குள், நாடாளுமன்ற உறுப்பினருக்குண்டான மரியாதையை கெடுத்து வைத்துள்ளார் ஹக்கீம்.

மறுபுறமாக, ஒரு வருட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக் காலத்தை வைத்துக் கொண்டு, இதைப் பெறுபவர்கள் – அதன் மூலம் எதைச் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. “நானும் ரௌடிதான்“ என்பது போல், “நானும் எம்.பிதான்“ என்று சொல்வதைத் தவிர, அதைப் பெறுகின்றவர்களுக்கும், முஸ்லிம் சமூகத்துக்கும் வேறு எதுவும் கிடைக்கப் போவதில்லை.