
தாமதமான 9,000 தடயவியல் அறிக்கைகளை இந்த மாதத்திற்குள் முடித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பல்லன்சேன சிறைச்சாலையை ஆய்வு செய்தபோது அவர் இதனைக் கூறினார். அங்கு நிலவும் பிரச்சினைகள் குறித்து கைதிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
நாடு முழுவதும் உள்ள மற்ற சிறைச்சாலைகளிலும் நிலைமைகளை மதிப்பாய்வு செய்யவும், பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவும் இதேபோன்ற பயணங்கள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையின் 33 சிறைச்சாலைகளிலும் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் சிறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றில் கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தியதாக ஆனந்த விஜேபால கூறினார்.
பல்லன்சேனவில் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், தீயணைப்புப் படை அதிகாரிகள், முப்படைகள், விசேட அதிரடிப்படை, பொலிஸ் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோரைக் கொண்ட ஒரு புதிய அவசரகால பதிலளிப்புக் குழு அமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான நெரிசலை ஒப்புக்கொண்ட அவர், “கைதிகளின் உயிர்களைப் பாதுகாப்பதே பிரதான நோக்கம்” என்று வலியுறுத்தினார்.
கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான சிறப்புத் திட்டத்தை நீதித்துறை அமைச்சர் ஏற்கனவே தயாரித்துள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



